இலங்கையில் வாழும் முஸ்லீங்கள் வந்தேறு குடிகள் அபாயா அணிவதாய் இருந்தால் சவுதிதான் செல்லவேண்டும்

386

இலங்கையில் வாழும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தமது முன்னோர்களை இஸ்லாம் இலங்கைக்குள் காலடி வைத்த காலத்திலிருந்தே கணிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே பிற சமூகங்கள் முஸ்லிம்களை ”வந்தேறு குடிகள்” எனக் கூறுவதற்கு ஏதுவாகவும் அமைகிறது.
 

இதன் அடிப்படையில் இலங்கைக்கு வணிக நோக்குடன் வந்த அரேபியர்களின் வழித்தோன்றல்களாகவே முஸ்லிம்களின் பெரும்பகுதியை நிரப்பும் இலங்கைச் சோனகர்கள் (Moors) கருதப்படுகின்றனர்.

2012ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி இலங்கையில் மொத்தம் 1,967,227 முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இது நாட்டின் மொத்த சனத்தொகையின் 9.7 % ஆகும்.

சமயத்தால் “முஸ்லிம்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவினுள் மலே, மற்றும் மேமன்,போரா இனத்தவர்களும் அடக்கப்பட்டே இந்த அளவு கணிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மொத்த முஸ்லிம் சனத்தொகையின் 92 வீதம் “சோனகர்களாகவும்” (Moors) மிகுதி முஸ்லிம்களின் பாரம்பரியம் இந்தியா,மலேசியா என்று வேறு நாடுகளோடும் தொடர்பு படுகிறது.

எனினும், மலே முஸ்லிம்களிலும் ஒரு பகுதியினரும் மூர்ஸ் (சோனக) கலாச்சாரத்துடனேயே வாழ்வதால் இவற்றில் பெரிய பாகுபாடுகள் இல்லையென்றே கூறலாம்.

இப்படியாக இலங்கையில் “முஸ்லிம்கள்” எனும் வகைக்குள் அடக்கப்படும் அனைவரையும் அவர்களது வரலாற்றையும் இஸ்லாம் எப்போது இலங்கைக்குள் அறிமுகமானதோ அப்போதிருந்தே தொடர்பு படுத்த விளைந்தார்கள் வரலாற்றாசிரியர்கள்.

இஸ்லாம் இலங்கைக்குள் வந்ததற்கான அடிப்படையை அரேபியர்களோடு தொடுக்கும் வரலாற்றாசிரியர்கள் இஸ்லாம் வருவதற்கு முன்னரும் இலங்கைக்கு அரேபியர்கள் வந்தார்கள் என்பதை மறுக்கவில்லை ஆனாலும் அது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை என்பதே உண்மை.

ஒரு கலாச்சாரத்திற்குரிய சமூகம் இன்னொரு இடத்திற்குக் குடிபெயரும் போது தாம் சார்ந்த கலாச்சாரத்தையும் சேர்த்தே கொண்டு செல்கிறது, தம் உணவு, உடைப் பழக்கவழக்கங்கள் முதல் வாழ்வியலையும் தாம் செல்லும் இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கையின் வரலாற்றில் எப்போதும் நடைபெற்ற ஒரு விடயமாகவும் இருக்கிறது.

யாழ்ப்பாண இராச்சியம் (கி.பி 1215-1624 ) உருவான பின்தான் இலங்கைக்குள் தமிழ்க் கலாச்சாரம் என்று தனியான ஒரு கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது, ஒல்லாந்தரினால் ஜாவாவிலிருந்து மலே மக்கள் அழைத்து வரப்பட்ட பின்னர் தான் இலங்கைக்குள் மலே கலாச்சாரம் உருவெடுத்தது, அதே போன்று போர்த்துக்கீயர் முதல் பிரித்தானியர்கள் வரை வந்து மேற்குலகக் கலாச்சாரங்களை நாட்டில் நிறுவிச் சென்றார்கள்.

எனவே, இலங்கைக்குள் வந்த “முஸ்லிம்” அரபு மக்கள் “இஸ்லாமிய” அரேபிய கலாச்சாரத்தை இலங்கைக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், இலங்கைக்குள் அரேபியர்கள் இஸ்லாம் வந்த பின்தானா வந்தார்கள் எனும் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது.

அதற்கான விடை “இல்லை” என்பதாகும். அவ்வாறாயின், அதற்கு முன் வந்த அரபிகளின் கலாச்சாரம் எது? அதற்கு முன் வந்த அரபிகளின் சமயம் எது? பழக்கவழக்கம் என்ன என்று ஆராயும் தேவையும் நமக்கிருக்கிறது. ஏனெனில் அரேபியர்கள் வணிகர்களாக மாத்திரம் இலங்கைக்குள் வரவில்லை, மாறாக அவர்கள் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் இஸ்லாத்துக்கு முன்னரும், பின்னரும் கூட வந்திருக்கிறார்கள்.

அதனடிப்படையில் இஸ்லாத்துக்கு முன்பதாக இலங்கையில் வந்து கலந்த, பிற்காலத்தில் இஸ்லாத்தோடு தொடர்புபடக்கூடிய அனைத்து சமூகங்களின் பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் இங்கு முக்கியம் பெறுகிறது.

இஸ்லாம் அறிமுகமான பின்னர் கூட பாரசீகக் கலாச்சாரத்தின் ஆளுமை இலங்கை முஸ்லிம்களிடம் இருந்திருக்கிறது, அது தவிர திராவிடக் கலாச்சாரம் கலந்திருந்தது, அரேபியக் கலாச்சாரமும் கலந்தது. இவ்வாறு பல்வேறு கலாச்சாரங்கள் எவ்வடிவில் கலந்தாலும் நாட்டின் சனத்தொகையில் சிறு பகுதியே இருக்கும் இச்சமூகத்தின் அத்தனை கலப்புகளுக்கும் பிரதான காரணம் ஒன்றாகவே இருந்தது.

அதுதான் அவர்களிடத்தில் இஸ்லாத்துக்கு முன்பும் இருந்த ஓர் இறைக் கொள்கை. இதனை நிரூபிக்கும் வகையில் முன் சென்ற உரைகளில் பல்வேறு அலசல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது போன்றே பின்வரும் உரையிலும் நாம் இன்னும் ஆழமாக அலசிக்கொள்வோம்.

இன்றைய முஸ்லிம்கள் தமக்குள் கேட்டுக்கொள்ளக்கூடிய ஒரு கேள்வியிருக்கிறது. அதாவது, இஸ்லாம் அண்ணலார் முஹம்மத் நபியவர்களால் அறிமுகப்படுத்தப்பட முன்னர் இறைவனால் வழங்கப்பட்ட மேலும் மூன்று வேதங்கள் இருக்கிறது, அவற்றின் இருப்பை ஏற்றுக்கொள்வது முஸ்லிம்களின் கடமையாகிறது.

இம்மூன்று இஸ்லாத்திற்கு முந்திய வேதங்களும் கூட அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கை. அவ்வேதங்களின் அடிப்படையும் ஓரிறைக் கொள்கைதான் என்பதிலும் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கப்போவதில்லை. அப்படியானால், இஸ்லாம் இலங்கைக்குள் வந்தது போன்றே ஏன் அதற்கு முன் சபுர், தெளறாத், இன்ஜீலின் வடிவங்கள் கூட இலங்கைக்குள் வந்திருக்க மாட்டாதா? என்பதுதான் அந்தக் கேள்வி.

இஸ்லாத்தை மத்திய கிழக்கு மக்கள் தான் கொண்டு வந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது, ஆனால் அதே மத்திய கிழக்கு மக்கள் அதற்கு முன்னைய தமது கலாச்சாரங்களையும், மதக் கொள்கைகளையும் கூடத்தான் கொண்டு வந்திருப்பார்கள். பொதுவாகவே இலங்கைக்குள் வந்த அரேபியர்களில் பெரும்பாலானோர் இலங்கையைத் தம் ஆன்மீகத் தேடலின் அடிப்படையில் ஒரு “உவகை தரும் தீவாக” வரலாற்றில் வர்ணித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆன்மீகத் தேவைகளோடும் இலங்கைக்குள் வந்த ஒரு சிலராயினும் இஸ்லாத்திற்கு முந்திய ஓரிறைக் கொள்கைகளையும், வேதங்களையும் கூட நிச்சயமாக இலங்கைக்குள் கொண்டு வந்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்பதாகவே அரேபியர்கள் பாவா ஆதம் மலைக்கு (Adams peak) யாத்திரிகர்களாக வந்து சென்றதைப் பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவாக்கியிருக்கின்றனர், இந்தத் தொடர்பே பிற்காலத்தில் இப்னு பதூதா போன்றவர்களையும் இலங்கை நோக்கி வரவழைத்திருந்தமை உலகறிந்த வரலாறாக இருக்கிறது. அவ்வாறானால் அன்றைய அரேபியரின் நிலைப்பாடும், எண்ணப்பாடும் எவ்வாறு இருந்தது என்று அறிவதும் இங்கு முக்கியம் பெறுகிறது.

இறை தூதர் சுலைமான் (அலை) அவர்களின் நீதிமொழிகள் தொகுக்கப்பட்ட காலத்திலும் இலங்கையில் அரேபியர் வருகை இருந்திருக்கிறது (கி.மு 250).

இது தவிரவும் கி.மு 326 ம் வருடங்களில் கிரேக்க மாலுமி ஓனோஸ் கிறிட்டோஸால் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் சோனாள்களின் குடியேற்றம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகவும் கி.பி 150 காலப்பகுதிக்குரிய தொலமியின் “தப்ரபேன்” வரைபடத்தில் மஹவாலி ஆறு “பாசிஸ் புலுவியஸ்” அதாவது பாரசீகர் வாழும் நதி (பிரதேசம்) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் தன் நூலில் பதிவாக்கியிருக்கிறார்.49

பல இந்திய நூல்களின் ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய கிழக்கு மக்களின் இலங்கையுடனான தொன்மை வாய்ந்த தொடர்புகளையும் அவர் விளக்கியுள்ளார்.

உலக வரலாற்றையே அடிப்படையாக நோக்கினும் கூட விஜயன் கண்ட இலங்கை, அக்காலத்திலேயே வேறு சமூகங்கள் கலக்கப்பெற்ற நாடாக இருந்தமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இது குறித்து முன் சென்ற தொடர்களிலும் அலசப்பட்டுள்ளது.

வரலாற்றை உற்று நோக்கும் போது ஓர் இறைக் கொள்கையென்பது அனைத்து வகை நம்பிக்கைகளின் மூலமாக இருப்பதை அவதானிக்க முடியும். குறிப்பாக சொல்வதானால் பெரும்பாலான பல கடவுள் நம்பிக்கைகள் ஓர் இறைக்கொள்கையிலிருந்து பிரிந்தே வந்திருக்கின்றமையை ஆணித்தரமாக எடுத்துக் கூறலாம்.

அதற்கும் மேலாக ஓர் இறைக்கொள்கையென்பது ஒரு மானசீகமான உணர்வும் கூட. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்பினும் கூட ஆரம்ப கால மனிதரிடம் கடவுள் நம்பிக்கையென்று ஒன்று வளர்ந்தபோது அது நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையாகவே இருந்திருக்கும். நாளடைவில் மனித குலம் அங்கும் இங்கும் பிரிந்து செல்லும் போது அவரவர் வசதிக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப தமக்கு விரும்பியபடியான உப கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

பல கடவுள்களை உருவாக்கிய சமூகங்களிடம் இருக்கும் ஒரு பொதுவான குணாதிசயம் என்னவென்றால் அவர்கள் ஒரு பிரதான கடவுளை அடிப்படையாகவும் மூலமாகவும் வைத்தே இவ் உப கடவுள்களை உருவாக்குவார்கள். அதனடிப்படையில் அனைவரும் கடவுளே ஆனால் இவர்கள் அனைவருக்கும் பெரிய கடவுள் அவரே என்று எவ்வாறாயினும் ஒரு ஆதி மூலத்தில் அனைத்தையும் கலப்பார்கள்.

இந்த உணர்வை உற்று நோக்கும் போது மனிதனின் பெரும்பாலான இறை நம்பிக்கை ஏக இறைக் கொள்கையிலிருந்து பிரிந்ததாகவே இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்த அரேபியாவும் ஏறத்தாழ இதே நிலையில் தான் இருந்தது என வரலாறு எடுத்துக்கூறுகிறது. எனினும், அக்கால கட்டத்திலும் அரேபியர்கள் இடத்தில் எப்போதுமே இந்த ஏக இறைக்கொள்கையின் தாக்கம் இருந்திருக்கிறது.

இப்போது வர்த்தகத்தில் ஈடுபட்ட, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு சென்று பண்டமாற்று மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்ட அரேபிய சமூகமொன்று பற்றியும் நாம் அறிந்துகொள்ளும் அவசியம் இருக்கிறது.

சமய ரீதியாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த பைசாந்தியப் பேரரசுக்கும் (கி.பி 330-1453) பழமை வாய்ந்த (சரத்துஸ்திர50) பாரசீகப் பேரரசுக்கும் நடுவில் காணப்பட்ட அரேபிய சமூகத்தினை அன்றைய கிரேக்கர்கள் “Sarakenoi” அதாவது பாலைவனங்களில் முகாம்களில் வாழும் மனிதர்கள் என்று அழைத்திருக்கிறார்கள். இவ்வினத்தாரை அரபியில் بَدَوِيُّون (பத்வியுன்) என்று அழைப்பார்கள்.

இவ்வினத்தார் பெரும்பாலும் வர்த்தகர்களாகவே இருந்து வருவதுடன் தற்காலிக முகாம்களில் வாழ்வோராகவும் தேவையேற்படின் பிற இடங்களுக்கு இடம்பெயர்வோர்களாகவும் இருந்த ஒரு சமூகமாகும். இன்றைய காலத்திலும் பத்வியுன்கள் மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கும் பரந்து வாழ்கிறார்கள்.

சவுதி அரேபியா, ஈராக், சூடான், மொரோக்கோ, மொரிடோனியா, ஓமான் மற்றும் யெமன் உட்பட பல்வேறு மத்திய கிழக்கு – ஆபிரிக்க நாடுகளில் இவர்கள் தொடர்ந்தும் ஏறத்தாழ அதே வர்த்தக குணநலன்களுடன் வாழ்கிறார்கள்.

இஸ்லாத்துக்கு முற்பட்ட காலங்களிலும் இவர்களின் வாழ்க்கை முறை இவ்வாறே இருந்தது மாத்திரமன்றி இவர்கள் தூர கிழக்கு நாடுகளுக்கும் வியாபார நோக்கில் சென்று வருபவர்களாக இருந்திருக்கிறார்கள். அதே போன்று இவர்களிடம் காணப்பட்ட இன்னுமொரு விசேட குண நலன் தான் அன்றைய கால கட்டத்தில் இருந்த பெரும் சமயங்கள் எதையுமே இவர்கள் நம்பாததும் சந்தேகக் கண்ணோடே அணுகியதுமாகும் (ஆனாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்). இஸ்லாத்துக்கு முந்திய அரேபிய மன்னர்களில் ஒரு சிலர் கூட தம் இருப்புக்காக யூத மதத்தைத் தழுவிக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. கிறிஸ்தவத்துடன் ஆளுமை மிக்க வேறு மதங்கள் இருந்தும் பொதுவாக இவர்கள் இதில் எந்த மதத்தையும் நம்பாதவர்கள்.

முஹம்மத் நபியின் பிறப்புக்கு முந்திய அரேபியாவே ஒரு காலத்தில் சிலை வணக்கத்தில் ஊறியிருந்தது என்பதும் இங்கு கவனித்தற்குரிய விடயமாகும். இச்சிலை வணக்கத்திலும் கூட அரேபியர்கள் சற்று மாறுபட்ட வணக்க முறைகளையும் கொண்டிருந்திருக்கிறார்கள். அதாவது ஒரு சில பெயரிட்ட சக்திகளை அவர்கள் நம்பியிருந்த போதும் வழிபாட்டு முறைகளில் உலகில் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்களிலிருந்தும் வித்தியாசப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அன்றைய மக்காவில் காணப்பட்ட 360 விக்கிரகங்கள் பண்டைய சுமேரியன் நம்பிக்கையின் அடிப்படையைக் கொண்டதாகவே காணப்பட்டிருக்கிறது. சுமேரியன் வருடம் 360 நாட்களையும் ஐந்து மேலதிக புனித நாட்களையும் கொண்டதாகும். இந்த நம்பிக்கை யும் அரேபியாவில் அன்றைய நாளில் இருந்திருந்தாலும் அரேபியர்களைப் பொறுத்தவரை தம்மைச் சூழவுள்ள ஏனைய சமய ஆளுமைகளிலிருந்து எப்போதும் சுதந்திரமாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

நபியவர்கள் தம் பணியை ஆரம்பிக்க முன் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் இங்கு நினைவு கூறத்தக்கது.

தமது (அரேபிய) இனத்தவரின் சமய வழிமுறைகளில் நம்பிக்கையிழந்து அதே நேரம் மாற்று வழியை, இப்ராஹீம் நபியவர்கள் அறிமுகப்படுத்திய வழிபாட்டு முறைகளைத் தேடி நான்கு குறைஷியர்கள் உடன்படிக்கையொன்றின் பேரில் மக்காவை விட்டு வெளியேறிய வரலாறுதான் அது.

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் பதிவாக்கிய இப்னு இஷாக் (கி.பி 704-761) இதைப்பற்றித் தம் வரலாற்றில் பதிந்திருக்கிறார்.

இவ்வாறு வெளிக்கிளம்பிய நான்கு பேரில் மூவர் பின்னர் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டாலும் நான்காமவர் சைய்த் இப்னு அம்ர் என்பார் சிரியா, ஈராக் போன்ற தூர நாடுகளுக்கும் அன்றைய நாளில் பயணம் செய்து தான் கண்ட சமயப் பெரியார்கள் எல்லோரிடமும் இப்ராஹிம் (Abraham) நபி எய்து வைத்த மார்க்கம் பற்றித் தேடித்திரிந்தாராம்.

அரேபியாவிலிருந்து தொலை தூரத்தில் வைத்து ஒரு மார்க்க அறிஞர் உங்கள் சொந்த இடத்திலிருந்து ஒரு இறைத் தூதர் வரப்போகிறார் எனும் நற்செய்தியை இவருக்குக் கூறியது கேட்டு மீண்டும் மக்கா திரும்பினாலும் வழியில் தென் சிரியாவில் உயிர் துறந்ததனால் இறுதி வரை முஹம்மத் நபியவர்களைப் பார்க்கும் வாய்ப்பின்றியே உலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். எனினும் அவரது புதல்வர் சைது என்பார் நபியவர்களின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்ததாக வரலாறு கூறுகிறது.

இது போன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது ஏக இறைக் கொள்கையென்பது ஆழ் மனதில் ஏற்படும் ஒரு உணர்வு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அது நபியவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த முன்பாகவும் அரேபியர்கள் மனதில் இருந்திருக்கிறது எனும் உண்மையையும் எடுத்து நோக்கும் போது இவ்வுணர்வு சார்ந்த சமூகம் உலகில் எப்போதுமே இருந்து வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை நோக்கி வந்த அரேபியர்களைப் பொறுத்தவரை, அதிலும் இஸ்லாத்துக்கு வெகு காலத்துக்கு முந்திய அரேபியர்கள் பெரும்பாலும் பத்வியுன்களாகவே இருந்திருக்கும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. இவர்கள் பல கடவுள் நம்பிக்கையை மாத்திரமன்றி அன்றைய நாளின் கிறிஸ்தவ வடிவத்தையும் நிராகரித்தவர்களாக வாழ்ந்தவர்கள். இவர்கள் நிலையான ஒரு இடத்தில் ஒரே சமூகமாக வாழாத காரணத்தால் தாம் பயணிக்கும் இடங்களில் தம்மோடு ஒத்துப் போகும் சமூகங்களுடன் சேர்ந்து வாழ்ந்தவர்களாகவே உலக வரலாற்றில் காணப்படுகிறார்கள்.

தமிழ் மொழி அரேபியரையே பெரும்பாலும் “சோனகர்கள்” என்று அழைக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு சங்க கால இலக்கியங்களில் விரிவடைந்த போதும் வட இந்திய, வேத கால இலக்கிய வரலாறுகளில் காணப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினை (அரேபிய) விளிப்பதற்காகவே பாவித்து வரப்பட்டிருக்கிறது.

அந்த வகையிலே தமிழ் மொழி கூறும் சோனகர்கள் அரேபியர்களே என்று வைத்துக் கொண்டாலும், இச் சமூகத்திற்கு தமிழிலும் அல்லது அன்றைய இலங்கையின் பாவனையில் இருந்த ஏதோ ஒரு மொழியின் வடிவிலும் “சோன” எனும் பெயரும் இருந்திருக்கின்றமையை க்ளோடியஸ் தொலமி தன் தப்ரபேன் வரைபடத்திலும் ஓனோஸ் கிரிட்டோஸ் தன் கி.மு 326க் குரிய வரை படத்திலும் “சோனா(ட்க)ள்” வாழ்ந்த பிரதேசத்தைக் குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதன் போது தமிழில் “சோனகர்” என்று அழைக்கப்படும் அதே “சோன” க் குடியிருப்புதான் அங்கு பதியப்பட்டதா? அவ்வாறாயின் சிங்களம் அல்லது பாளியிலும் “சோன” என்பதுதான் இச்சமூகத்தின் பெயராக இருந்ததா எனும் கேள்விகள் எழும்.

சிங்கள மொழி இச்சமூகத்தைத் தம் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் பின் வந்த காலங்களில் “யொன்”, “யோன” எனும் சொற்கள் கொண்டே விளிப்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும், சிங்கள மொழி இந்த வடிவத்தைப் பெற முன்பதாக பிராந்தியத்தில் வேறு வடிவங்களில் பாவனையில் இருந்ததா என்பது குறித்த போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, மஹாவம்சத்தின் மூல மொழியான பாளியை எடுத்து நோக்கும் போது அங்கேயும் “யொன்” எனும் சொல் பாவிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு இது சிங்கள மொழியினால் வழங்கப்பட்ட பெயராக இருக்கவோ, தமிழ் மொழி இந்த வடிவத்தையும், விருத்தியையும் குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் இலங்கையில் அடைந்திருக்கவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு அது தமிழாக இருப்பதற்கும் கூட வாய்பில்லை எனும் முடிவுக்கு வரலாம்.

ஆயினும், கிரேக்கர், ரோமர்களுக்குப் பரிட்சயமான வட ஆபிரிக்க இனமான “சொனின்” மொழியைப் பேசிய மக்கள், குறிப்பாக மொரிடோனியன் மற்றும் வட ஆபிரிக்காவிலும் குடியேறிய யெமனைச் சேர்ந்த “மூர்” என பின்நாளில் அழைக்கப்பட்ட மக்கள், அதுவும் பத்வியுன்கள் இலங்கையில் அன்றைய கால கட்டத்திலும் வாழ்ந்திருப்பார்கள் என்பதை ஆணித்தரமாக நம்பலாம்.

ஏனெனில் குறிப்பிட்ட கிரேக்க மாலுமிகள் சோனர்கள் வாழ்ந்த பிரதேசமாகத் தம் வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள பிரதேசங்கள் (புத்தளம்) இன்றைய காலத்திலும் மிக நெருக்கமான யெமனியத் தொடர்புகளை மீள நிறுவக்கூடிய பிரதேசமாகும்.

புத்தளத்தில் வாழும் கணிசமான முஸ்லிம்கள் தம் மூதாதையர்களின் யெமனியத் தொடர்புகளை அறிந்திருப்பதோடு இந்தியாவோடு ஏற்பட்ட கடல் மற்றும் வியாபாரத் தொடர்புகளிலும் இப்பிரதேசங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அந்தவகையிலே, இலங்கைத் தீவிற்குள் இஸ்லாம் அறிமுகமாவதற்கு ஆயிரம் வருடங்களிற்கு முன்னரே அரேபியத் தொடர்புகள் நிலை பெற்றிருப்பதும், தமது சமயத் தேர்வில் மிகக் கவனமாக இருந்த பத்வியுன்கள் இலங்கையில் இருந்த குறிப்பிட்ட சமூகத்துடன் கலந்து கொண்டமையின் சூட்சுமத்தை சிந்திக்கும் போது இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னரும் ஏதோ ஒரு வழியில் ஓர் இறைக் கொள்கையில் வாழ்ந்த ஒரு சமூகம் நிலை பெற்றே இருந்திருக்கிறது என்பதுவும் கூட ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இங்கே பல வரலாற்றுப் பிணைவுகள் இருக்கின்றன, காலத்தால் முந்திய வரைபடங்களில் குறிப்பிடப்பட்ட சோனக் குடியிருப்பும் , யோனக் குடியிருப்பும் ஒரே சமூகத்தை இருவேறு மொழிகளால் குறித்திருக்கின்றன. இது தவிரவும் சிங்களத்திலும் பண்டைய காத்தில் சோனகரயா,சோனாக்கள், யோனாக்கள் எனவும் அழைக்கப்பட்டதாகவும் சில சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் பின் வந் தமிழ் மொழியைப் பொறுத்தவரை அரேபியர்களைக் குறித்த சமஸ்கிருத “யோன” யிலிருந்தே “சோன” எனும் மொழிபெயர்ப்பு உருப்பெற்றதால் அதுவும் இதே சமூகத்தையே குறித்திருக்கிறது என்பதை ஐயந்திரிபட ஏற்றுக்கொள்ள முடியும்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது அன்று டி.எஸ். சேனாநாயக்க கூறியது போன்று சிங்களவர்களின் வரலாறு ஆரம்பிக்கக்கூடிய காலம் முதல் யோனக (மினிசு) ர்களின் வரலாறும் இத்தீவில் இருக்கிறது எனும் கூற்றும் உண்மையாகிறது.51

ஆகவே இலங்கை எனும் தீவில் அரேபியரின் வம்சாவழியாகவே இருந்தாலும் கூட இன்றைய முஸ்லிம்களின் வரலாறு இஸ்லாம் இத்தீவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்திற்குரியது என்பது நிரூபிக்கப்படக்கூடியது மாத்திரமன்றி உலக வரலாற்றோடு இசைந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமாகும்.

அரேபியருக்கு இஸ்லாம் அறிமுகமாக முன்னரும் அதே அரபுப் பெயர்கள் தான் இருந்தன. இஸ்லாம் அறிமுகமானதன் பின் அவர்களிடம் புதிய மார்க்கமும், பண்பாடும் வந்தது. அது இலங்கையை வந்தடைந்த போது காலாகாலமாகத் தாம் காத்துக் கிடந்த நற்செய்தியை அறிந்து கொண்ட மக்கள் இஸ்லாத்தின் பால் கொண்ட ஆர்வத்தாலும் நபியவர்களின் விருப்பப்படியே ஒரே உம்மத்தாக (சமூகமாக) வாழ்வதற்கும் ஏதுவாகத் தமக்கும் தம் சந்ததியினருக்கும் அரபுப் பெயர்களையும் சூட்டிக்கொண்டதோடு தம்மையும் ஒரு சேர “முஸ்லிம்கள்” என அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

ஆயினும் வரலாற்றுத் தொடரில் இலங்கையில் குறிப்பிட்ட காலத்தின் பின்னரே “முஸ்லிம்” எனும் அடையாளம் ஏற்படுத்தப்பட்டதால் காலத்தால் முந்திய தம் நியதிப்படி, அன்னியர் ஆக்கிரமிப்புக்கு முன்னரும் இலங்கையின் தனிப்பெரும் ஆட்சி மொழியாக விளங்கிய சிங்களத்தில் எவ்வாறு இந்த சமூகம் அடையாளப்படுத்தப்பட்டதோ அவ்வாறே இன்றைய கால கட்டத்திலும் இந்தச் சமூகம் அடையாளப்படுத்தப்படுகிறது.

அது சிங்கள மொழியில் “யோனக” என்று அறியப்படுகிறது, இதே சமூகத்தைப் போர்த்துக்கீயர் முன் சென்ற உரைகளில் நாம் ஆராய்ந்ததற்கிணங்க “மூர்ஸ்” எனப் பெயரிட்டதன் மூலம் ஆங்கிலத்திலும் அவ்வாறே அழைக்கப்பட்டும், பண்டைய வட இந்திய இலக்கியங்களில் சமஸ்கிருதம் அரேபியரைக் குறித்த சொல்லின் நேரடித் தமிழ் மொழி பெயர்ப்பான “சோனகர்” எனும் சொல் இன்றும் தமிழில் இச்சமூகத்தின் இன அடையாளப் பெயராகவும் இலங்கையில் காணப்படுகிறது.

ஆயினும் இச்சமூகம் தம்மை கடந்த கால கசப்பான வரலாறு மற்றும் ஒற்றுமையின் நிமித்தம் “முஸ்லிம்கள்” என்று அழைக்கவே விரும்புகிறது என்பதும் உண்மை, அரச ஆவணங்களில் ஒரு போதும் இச் சமூகத்தின் “இன” அடையாளம் முஸ்லிமாக இது வரை இருந்ததில்லை மாறாக “யோனக” , “Moors”, “சோனகர்” என்றே அறியப்பட்டு வருகிறது என்பதும் உண்மையாகும்.

அரசைப் பொறுத்தவரை இந்நாட்டில் வாழும் ஒரு இனமாகவே முஸ்லிம்கள் பார்க்கப்படுகிறார்கள், எனவே அவர்களின் மத அடையாளத்தைத் தவிர்த்து இன அடையாளத்தின் மூலமே குறிப்பிட்ட சமூகத்திற்கான ஒதுக்கீடு முதல் அனைத்து விவகாரங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

2012ம் ஆண்டிற்குரிய சனத்தொகைக் கணக்கீடும் அதைத்தான் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறது. முஸ்லிம்கள் எனும் பொது அடையாளத்திற்குள் அனைவரும் வந்தாலும் பூர்வீகக் குடிகளை “யோனக மினிசு (Lankan Moors)” என்றே அந்த ஆவணங்கள் பட்டியலிட்டிருக்கிறது.

எனினும் எமக்கு இந்த மண்ணில் பூர்வீகம் இல்லை, வந்தேறு குடிகள்தான் என்று ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் பூர்வீகத்தைத் தேடி அறியாது இன்றளவும் பெரும்பாலும் சொல்லப்படும் “Settled traders” குடியேறிய வர்த்தகர்களின் வர்க்கத்திற்குள் தள்ளப்படுகிறார்கள்.

தற்காலத்தில் கூறப்படும் இந்த குடியேறிய வர்த்தகர்கள் எனும் பதம் இஸ்லாத்திற்குப் பின்னான அரேபியரைக் குறித்து விளிக்கப்படும் வியாக்கியானமாகும்.

ஆம்! இஸ்லாம் கி.பி 8-9 ம் நூற்றாண்டில் தான் இலங்கைக்கு வந்தது, அதில் மாற்றம் இல்லை, அதன் பின் தான் இச்சமூகம் “முஸ்லிம்” எனும் அடையாளத்திற்குள்ளும் வந்தது, அதிலும் மாற்றமில்லை. எனினும், இஸ்லாம் வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு ஒரு சமூகம் இருந்தது, அது இந்த மண்ணின் பூர்வீக சமூகம், பூர்வீகக் குடிகளின் ஒரு அங்கம். அந்த சமூகத்திற்கு இலங்கையின் வரலாறு அறியப்பட்ட காலம் முதல் இந்த மண்ணில் வரலாறு இருக்கிறது, அவர்களோடு வேறு சமூகங்களும் கலந்தாலும் அந்தக் கலப்பில் ஒரு நியாயமும், ஆன்மீகத் தேவையும் இருந்தது. எனவே அதன் தொடர்புகள் இஸ்லாம் வரைக்கும், அதன் பின்னும், இன்றும் தொடர்கிறது.

SHARE