1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை கலந்துகொண்டமையானது தமிழ்க் கட்சிகள், தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் செயல்-வீடியோ இணைப்பு

620
இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.

இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் 67 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டது. வன்னி இனவழிப்பின் கறைகள் கழுவப்படாத மண்ணில், காலனியாதிக்கம் இலங்கையைத் தமது தரகுகளிடம் ஒப்படைத்த நாளை சுதந்திரதினம் என்று அழைக்கிறார்கள். அதே காலனி ஆதிக்க நாடுகள் இலங்கையை மறு காலனியாக்கும் நோக்குடன் சிங்கள பௌத்த அதிகார மையத்தால் பேரினவாதத்தைத் தூண்டி சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தன.

பல தசாப்த போராட்டங்களின் பின்னர் வடக்குக் கிழக்கு தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமை கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் நியாயத்தை முள்ளிவாய்க்காலோடு குழிதோண்டிப் புதைத்த அதே அதிகாரவர்க்கமும், அதே முகங்களும் இன்று சுதந்திரதினத்தைக் கொண்டாடுகின்றன. அழித்தவர்களின் அரங்கில் அமைதியாக அமர்ந்து சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார் சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தார்.

தேசியத்தின் பேரால் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் மக்கள் போராடும் போதெல்லாம் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்ட சம்பந்தரும் பரிவரங்களும் சுதந்திரதின மேடையில் குந்தியிருந்து ‘தேசியத்தை’ பாடையில் அனுப்பியுள்ளனர். தேசிய இன ஒடுக்குமுறையே இலங்கையின் பிரதான எரியும் பிரச்சனை. தேசிய இனங்களுக்கு சுய நிர்ணைய உரிமை வழங்கப்பட்டால் மட்டுமே இலங்கையில் உண்மையான ஜனநாயகம் கிட்டும்.

இந்த நிலையில் தேசியத்தின் பேரால் ஒடுக்குமுறையாளர்களின் மேடையில் ஒடுக்குமுறையின் குறியீடான சுதந்திரதினத்தைக் குதூகலமாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது போராட்டத்தின் சாபக்கேடு. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் முழங்கும் எமது பறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பை வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதும், இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிப்பதும், மக்களை அணிதிரட்டிப் போராடுவதும் இன்றைய ஜனநாயகக் கடமை என்ற செய்தியை மக்கள் உள்வாங்க்கிக் கொள்வார்கள். -பறை -விடுதலைக்கான குரல்

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.

SHARE