தகவல் கொடுக்க தவறிய குற்றச்சாட்டில் முஸ்லீம் அரசியல்வாதிகள் கைது செய்யப்படாததேன்?

410

 

hisbulபயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவில் பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுக்க தவறுபவர்களும் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என கூறப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இந்த பிரிவில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் 5வருடத்திற்கு குறையாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்த வரலாறுகள் அதிகம்.

1997ஆம் ஆண்டளவில் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தனது 3வயது மகளுடன் வந்த இளம்பெண் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலம் தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட அந்த பெண் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்பெண் மீது சுமத்தப்பட்ட குற்றம் பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றி தெரிந்திருந்தும் தகவல் கொடுக்க தவறினார் என்பதாகும்.
அப்பெண்ணுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 5 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இப்படி நூற்றுக்கணக்கான தமிழர்கள் தகவல் கொடுக்க தவறினார் என குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் பலர் சிறைச்சாலைகளில் உள்ளனர். பலர் தகவல் கொடுக்கத்தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.

இன்று எழுகின்ற கேள்வி இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தகவல் கொடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகள் பலரும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பற்றி அறிந்திருந்தனர். அவர்களின் நடமாட்டம் பற்றி அறிந்திருந்தனர். அவர்களுடன் தொடர்புகளில் இருந்திருக்கிறார்கள். ஏற்கனவே குற்றவாளிகள் கைது செய்யப்படுகிற போது அவர்களை தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விடுவித்திருக்கிறார்கள்.
ஹிஸ்புல்லா றிசாத் பதியுதீன் உட்பட முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
மிகக்கொடூரமான தாக்குதல்களை புரிந்த பயங்கரவாதிகள் பற்றிய தகவல் தெரிந்திருந்தும் படைத்தரப்புக்கு தகவல் கொடுக்க தவறிய முஸ்லீம் அரசியல்வாதிகள் கைது செய்யப்படாததது இன்னும் பாரிய அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

காத்தான்குடியை தளமாக கொண்டு முஸ்லீம் ஆயுதக்குழு இயங்கி வருகிறது, அவர்களுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி உதவி வழங்கப்படுகிறது, இதன் பின்னணியில் முஸ்லீம் அரசியல்வாதிகள் உள்ளனர் என கடந்த காலங்களில் இப்பத்தியாளர் சுட்டிக்காட்டிய போது அது இனவாத கருத்து என சிலர் நிராகரித்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உதவியுடன் தேசிய தௌபீக் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்களே நடத்தியிருந்தனர்.

காத்தான்குடியை தலைமையகமாக கொண்டு இயங்கிய தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்தினருடன் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா எடுத்துக்கொண்ட படம் ஒன்றும் சில காலத்திற்கு முதல் வெளியாகியிருந்தது.

பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ஆயுதப்பயிற்சி பெற்ற விடயமும், தாக்குதலுக்கான ஒத்திகைகளும் ஏற்கனவே நடைபெற்றதை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும், முஸ்லீம் அரசியல்வாதிகளும் அறிந்திருந்த போதிலும் அதனை ஏன் தடுக்க முன்வரவில்லை என்பதே இன்று எழும் கேள்வியாகும்.

ஞாயிற்றுக்கிழமை எட்டு இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 300க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த கொடூரம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முதல் காத்தான்குடி பகுதியின் தாழங்குடா, வேடர் குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளிவராதவாறு அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காத விதமாக, அந்த செய்தி முழுங்கடிக்கப்பட்டிருந்தது.

கட்சி அலுவலகமொன்றிலும் குண்டு ஒன்று வெடித்திருந்தது. கட்சி அலுவலக குண்டு வெடிப்பிற்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் காத்தான்குடியில் நேரக்கணிப்பு குண்டை பொலிசார் மீட்டிருந்தனர்.

கொலைசம்பவத்தின் பின்னர் கைதான ஒருவர் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் சிறையில் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்.

கிழக்கின் முக்கிய பொறுப்பை வகிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்னணியில் இயங்கும் ஆயுதக்குழு பற்றியும், அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்களை பற்றியும் தனக்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார், அந்த இடங்களை காண்பிப்பதாக தெரிவித்தும், பொலிசார் அதில் அக்கறை காண்பிக்கவில்லையென தெரிவித்தே, அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் இந்த சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவராத வகையில் அரசியல்வாதிகளின் மிகச்சாதுரியமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான், தற்கொலை தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முதல் தாழங்குடாவில் ஆட்களற்ற காணிக்குள் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.  பொலிஸ் விசாரணையில் அது ஒரு பரீட்சார்த்த குண்டு வெடிப்பு என தெரியவந்தது
மோட்டார் சைக்கிளிற்குள் வெடிகுண்டை வைத்து, நேரக்கணிப்பு அல்லது தொலைவிலிருந்து இயக்கி அதை வெடிக்க வைத்திருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளின் சிதைவடைந்த பாகங்கள் காணப்பட்டன.
இந்த விடயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்றும் அரசியல்வாதி ஒருவர் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக அந்த விசாரணைகள் கைவிடப்பட்டிருந்தன.

அந்த பகுதியில் இரண்டு ஆயுதக்குழுக்கள் இயங்குவதாகவும், அவற்றிற்கிடையிலான மோதலின் விளைவாக, மறுதரப்பின் மீது தாக்குதல் நடத்த இந்த ஒத்திகை நடத்தப்பட்டிருக்கலாமென்று பொலிசார் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இப்பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய தாக்குதல்கள் குறித்தும் இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றியும் இலங்கையில் இருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் பலருக்கு தெரிந்திருந்தது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பும் இருந்தது.

பயங்கரவாத செயலுடன் தொடர்பு பட்டிருந்தார் என சில மாதங்களுக்கு முதல் கைது செய்யப்பட்ட நபரை முஸ்லீம் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு விடுதலை செய்திருந்தார் என்றும் அந்த முஸ்லீம் அரசியல்வாதி ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்பு கொண்டதை அடுத்தே ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹங்கரி லா ஹொட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், புத்தளத்தில் அமைந்துள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, சில ஆவணங்களை பொலிசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

தெமட்டகொடவில் கைதான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார், அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் நெருக்கமானவர் என தெரிகிறது.
இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை குண்டுதாரிகளாக சினமன் கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இளைய மகன் தலைமறைவாகி விட்டார். இன்னொரு மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைதான மகன் திருமணம் செய்தது, பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை. அந்த நகைக்கடை உரிமையாளரே, அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வலதுகரமாக செயற்பட்டு, நிதி விவகாரங்களை கையாள்பவர் என தெரியவருகிறது.

வர்த்தகரின் குடும்ப திருமண தொடர்பின் மூலம், ஹாஜியாரும் ரிசாட் பதியுதீனுடன் சில வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  கைதானவர்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிற்கு நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர்.

இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாத தாக்குதல் பயிற்சி பெற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்றும் கூறப்படுகிறது.
வனாத்தவில்லு பிரதேசத்தில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தேசிய தௌபீக் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் முகாம் முற்றுகையிட்டப்பட்ட போது இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்த முகாமில் ஆயுத பயிற்சி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பயிற்சி போன்றன வழங்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு அடிக்கடி இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவராக கருதப்படும் சஜஹான் ஹஷீம் என்பவர் வந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகளின் பட்டியல் ஒன்றும் அவர்களின் செல்லிடப்பேசி விபரங்களும் திரட்டப்பட்டுள்ளன.
புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் இரகசிய ஆயுத பயிற்சி முகாம் ஒன்று தொடர்பாக தேடப்பட்ட இருவர் கடந்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

முஸ்லிம் அல்லாதோர் எல்லோரும் கொல்லப்படவேணும் என பேசிய வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தது. காத்தான்குடியை சேர்ந்த சஜஹான் ஹாஷீம் இந்த பயங்கரவாத அமைப்புக்கு தலைவராக விளங்கினார் என்றும் கூறப்படுகிறது.
சில காலங்களுக்கு காத்தான்குடியை விட்டு வெளியேறி மாவனெல்லை போன்ற இடங்களில் தங்கியிருந்த போதிலும் இவர் காத்தான்குடியில் உள்ள பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் இயங்கி வரும் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவு என்பது தற்போது வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது.

இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

இலங்கையில் ஆயுதப்பயிற்சி முகாம்களும் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் கண்டுபிடிக்கப்படாமல் மேலும் பல முகாம்கள் இருக்கலாம் என்றே நம்பபடுகிறது.

இத்தாக்குதல்கள் சொற்பகாலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதல்ல. இது மிக நீண்டகால திட்டத்தில் நடத்தப்பட்ட ஒன்றாகும்.
ஒரே நாளில் மட்டக்களப்பு கொழும்பு நீர்கொழும்பு தெகிவளை என பல இடங்களில் எட்டிற்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்துவது என்பது நீண்டகால பயிற்சி திட்டமிடலின் மூலமே சாத்தியமாக கூடியதாகும்.

இது மதவாதம் பேசுகின்ற ஒரு உள்ளூர் தீவிரவாத அமைப்பால் தனித்து செய்திருக்க முடியாது என்ற சந்தேகம் தாக்குதல் நடைபெற்ற உடனேயே மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பின் பயிற்சிகள் மற்றும் உதவிகள் மட்டுமல்ல இலங்கையில் இருந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் வர்த்தகர்கள், மதவாதிகள் என பலருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதை மறைக்க முடியாது.

பயங்கரவாதிகள் பற்றி அவர்கள் நடத்தப்போகும் தாக்குதல்கள் பற்றி தெரிந்திருந்திருந்தும் படையினருக்கு தகவல் கொடுக்க தவறினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவில் தண்டனைக்குரிய குற்றமாகும். பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தற்கொலை தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி அவர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றார்கள் என்பது அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருந்தது.

அப்படியானால் தகவல் கொடுக்க தவறிய குற்றத்தின் கீழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் கைது செய்யப்படாதது ஏன்?

( இரா.துரைரத்தினம் )

SHARE