தற்போதைய நெருக்கடி நிலையின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்படாத அப்பாவிகளை உடன் விடுவிப்பவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சி இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
இதில் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, பயங்கரவாதத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பலர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினரால் இஸ்லாமிய நூல்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்தறிய முடியாமல், சந்தேகத்தின் பேரில் அப்பாவி மக்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.
அத்துடன் அன்றாட உபயோகப்பொருட்கள், இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் மற்றும் இன்னோரன்ன காரணங்களால் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள் கைதாகின்றனர்.
இவ்வாறான நிகழ்வுகள் குறித்து பிரதமர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜனாதிபதி ஆகியோருக்கு தெளிவுபடுத்தி, எதிர்காலத்தில் இவ்வாறான கைதுகள் விடயத்தில் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து வலியுறுத்தவும், அத்துடன் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களின் விபரங்களை ஆராய்ந்து, சாதாரண குற்றங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடி, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கென கட்சியின் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளுடனும் சம்பந்தப்படாமல் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விவரங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் ஊடாக கட்சித் தலைமையகத்துக்கு அவசரமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதன்போது பொலிஸாரினால் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதற்கான தகவல் திரட்டுப் படிவத்தை தங்களது பிரதேசங்களிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும். அமைப்பாளர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தேவைப்பட்டால் கட்சித் தலைமையகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், முஸ்லிம்கள் கலாசார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. முகம் தெரியக்கூடிய வகையில் பெண்கள் அணியும் ஹிஜாப், அபாயா தொடர்பில் அரச நிறுவனங்களின் மேற்கொள்ளப்படும் கடும்போக்கு குறித்தும் கவனத்திற் கொள்ளப்பட்டது.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் பேசி முடிவெடுப்பதற்கும் கட்சியின் தலைவர், செயலாளர், சட்டத்தரணிகள் ஆகியோர் இணைந்து இந்த விடயங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.