தமிழர் விடுதலை கூட்டணி, யாழ் பல்கலைக்கழக மாணவர் கைதை வன்மையாக கண்டித்து உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளது

189

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், சிற்றுண்டி சாலை முகாமையாளர் ஆகியோரின் கைதை தமிழர் விடுதலை கூட்டணி வன்மையாக கண்டித்து உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளது.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்  நாயகம் வீ. ஆனந்த சங்கரி இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

நிலைமையை சீரடைய செய்வதற்கு பதிலாக இக்கைதுகள் மோசமடையவே வைக்கின்றது. மேலும், இவ்விடயம் சம்மந்தமாக வெளிவந்த கண்டன அறிக்கைகள் பலவற்றில் சில உள்நோக்குடன் வெளியிடப்பட்டதோடு நிலைமையை மேலும் மோசமடையவும் செய்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தை தம்மை மிகைப்படுத்த அல்லது தமது கடந்தகால செயற்பாடுகளால் ஏற்பட்ட கண்டனங்களிற்கு பரிகாரம் தேடுவதாகவும் அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இப்பேற்பட்ட சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்துகொள்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கைது எதற்காக செய்யப்பட்டது என்பதையே அறியாது மாணவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, எதற்காக பல்வேறு கண்டன அறிக்கைகளுடன் பலர் பத்திரிகைகளை நாடி செல்கின்றார்கள் என்பது ஆச்சரியத்தை தருகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒன்று திரு இரா சம்பந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதை படித்ததும் சிரிப்புதான் வந்தது. திரு சம்பந்தன் அவர்கள் தற்போது மிக முக்கியமான தமிழ் தலைவராகவும், இலகுவாக அணுகக்கூடியவராகவும் கருதப்படுகின்றவர்.

 

 

திரு சம்பந்தன் அவர்களை சுமார் அரை நூற்றாண்டுகளாக அறிவேன். இக்கைதுகளை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அப்பாவி இளைஞர்களை கைது செய்ததை பெரும் மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் கூறியிருந்தார். அவரின் கருத்துடன் ஒத்துக்கொண்டாலும் இந்த நிலையில் எனது கேள்வி, இத்தகைய அறிக்கை விடுவதற்கு அவர் அருகதை உடையவரா என்பதேயாகும். தமிழ் மக்கள் ஞாபக சக்தி குறைந்தவர்கள் என்ற திரு சம்பந்தன் அவர்களின் கருத்தை அவர் கூறும் அத்தனையையும் தயக்கமின்றி ஏற்கின்ற மக்களிற்கு பொருந்தும். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் துரதிஸ்டவசமாக அரசியல் ஆய்வாளர்கள் திரு சம்பந்தனை நியாயப்படுத்துவதும், அவரை புகழ்வதுமாக ஒரு சாரார் இருந்தாலும், எம்மத்தியில் கழுகு கண்ணுடன், சிறந்த ஞாபசக்தி கொண்டவர்களும் இருக்கின்றனர் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

தனக்கு வசதியாக திரு சம்பந்தன் அவர்கள் தனது கடந்தகாலத்தை மறந்திருந்தாலும், அவரை 2004ம் ஆண்டை திரும்பி பார்க்கும்படி வேண்டுகின்றேன். ஆக்காலத்தில் அவர் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய செயலாளர் நாயகமாக கடமையாற்றியவர். வேறு சிலரின் ஒத்துழைப்போடு தமிழர் விடுதலை கூட்டணியை விடுதலை புலிகளின் கீழ் கொண்டுவர சதி செய்து தோல்வியடைந்தவர். அக்கட்டத்தில் கட்சியின் தலைவர் என்ற முறையில் 2004ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு விடுதலை புலிகளையே நியமிப்போம் என்ற எனது பரிந்துரையை திரு சம்பந்தன் அவர்கள் உதாசீனம் செய்துவிட்டு திரு மாவை சேனாதிராஜாவுடன் கூட்டு சேர்ந்தார்.

தமிழரசு கட்சி 1972ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி உருவாக்கப்பட்டதிலிருந்து 2004ம் ஆண்டுவரை ஏறக்குறைய 32 ஆண்டுகள் செயலற்று இருந்தது. அதை இயக்க வேண்டும் என்று தந்தை செல்வா உட்பட எவரும் விரும்பவில்லை. எவரும் தமிழரசு கட்சியின் பெயரையும் சின்னத்தையும் துஸ்பிரயோகம் செய்துவிடக்கூடாது என்பதற்காக தனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை தொடர்ந்து வைத்திருந்தார் என அன்னாரின் மனைவி மங்கயற்கரசி மிக தெளிவாக கூறியுள்ளார். இந்த நிலைப்பாட்டை உதாசீனம் செய்து, பெரும் தலைவர்களை அவமதிக்ககூடிய வகையில் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருந்த ஒருவர்தான் திரு மாவை சேனாதிராஜா. சட்ட விரோதமாக தமிழரசு கட்சியின் பதிவை வைத்திருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.

திரு சம்பந்தன் அவர்கள் இவருடன் சேர்ந்து 2004ம் ஆண்டு பொது தெர்தலில் தமிழரசு கட்சி சார்பில் நியமன பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் மிக தெட்டத்தெளிவாக தாம் நியமன பத்திரத்தை விடுதலைப்புலிகளின் சார்பில் சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். நியமனபத்திரம் தாக்கல் செய்ததன் பின்னர் கிளிநொச்சிக்கு சென்று தமிழ்ச்செல்வனின் ஆலாசனையின் பேரில் தமிழ் மக்களினுடைய தேசிய தலைவர்களும் ஏக பிரதிநிதிகளும் விடுதலை புலிகளே என்ற அம்சங்களை உள்ளடக்கி தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து அச்சிட்டு வினியோகித்தனர். முறையற்ற விதத்தில் சகல ஜனநாயக கோட்பாடுகளையும் மீறி திரு சம்பந்தன் நியமித்த 20 பேரோடு தேசிய பட்டியலில் உறுப்பினர்கள் இருவருடன் மொத்தம் 22 ஆசனங்களை தமிழரசு கட்சியின் சின்னத்தில் விடுதலை புலிகளின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேரில் வெற்றி பெற்றிருந்தனர். மிக தெளிவாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரும் விடுதலை புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆப்படியானால் விடுதலை புலிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அன்று அமுலில் இருந்த சட்டத்தின்படி இத்தேர்தல் சட்டவிரோதமானது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காது தமது தேவைக்கு இவர்களை பாவிப்பதற்காக இவர்களின் உண்மை அரசியல் நிலையை மூடி மறைத்து இவர்களிற்கு அங்கிகாரம் கொடுத்தது. தோடர்ந்து 6 ஆண்டுகள் அதன் பின் மீண்டும் ஆறு ஆண்டுகள் சம்பந்தன் தலைமையில் இவர்கள் விடுதலைப்புலிகளை பிரிதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டது மறுக்க முடியாத உண்மை . இந்த அடிப்படையில் 2004ம் ஆண்டின் பின் இன்றுவரை சம்பந்தன் அவர்களும், அவருடைய சகாக்களும் விடுதலைப்புலிகளையே பிரதிநிதித்துவப்படுத்தினர் (விடுதலை புலிகளால் பதவிக்கு வந்தவர்கள், அவர்களை அழிப்பதற்கு கங்கனம் கட்டி நின்றவரை 2010ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பல சிரமத்தின் மத்தியில் பிரச்சாரம் செய்தமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்).

மொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்க்கின்றபோது சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காலம் முழுவதும் எவரும் எத்தகைய ஆயுத குழுக்களும் செழிப்பாக இயங்க வாய்ப்பிருந்தது என்பதை மறுக்க முடியாது. ஒரு கோணத்திலிருந்து பார்ப்பின் அவ்வாறு அமைக்கப்பட்ட ஓர் ஆயுத குழுவே உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்திற்கும் தொடர்ந்து நடந்தவற்றிற்கும் உதவியது.

மேலும் விளங்க கூறின், இந்த இயக்கங்கள் வளர வாய்ப்பளித்ததில் திரு சம்பந்தன் அவர்களிற்கு முக்கிய பங்குண்டு. இந்த சூழ்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கவேண்டியவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல. எவரும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளிவிற்கு மோசமாக செயலில் ஈடுபட்டிருந்த திரு சம்பந்தன் அவர்களை அரசு தமக்கு சாதகமாக பாவிப்பதற்கும், சம்பந்தன் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் வழிவகுத்து விட்டுள்ளது.

மறியலிற்கு சென்றிருக்க வேண்டியவர்கள் யார் என்பதை நான் கூறி மக்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை. எனது கணிப்பு சிலருக்கு வேடிக்கையாக தோன்றலாம். ஆனால், அலசி ஆராய்ந்து பார்ப்போமேயானால் இன்றய நிலைமைக்கு மாத்திரமல்ல கடந்த காலத்தில் எம்மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தமைக்கும், சொத்துக்களை இழந்தமைக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியவர்களும் சம்பந்தன் குழுவினரே. அனுபவம் நிறைந்த எனது கூற்றை உதாசினம் செய்தால், உண்மை தெரிகின்ற காலத்தில் பெரும் கவலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.  என்று  குறிப்பிட்டுள்ளார்.

SHARE