பதுளை – அல் – முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடைசெய்ய வேண்டும்- செந்தில் தொண்டமான் கோரிக்கை

184

பதுளையில் இயங்கும் அல் -முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடைசெய்யவேண்டும் என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த பல்கலைக்கழகத்தில் இலங்கைக்கு பொருத்தமற்ற முறையில் ஈரானிய கொள்கைகளும் சகல மதங்களையும் பின்பற்றும் மாணவர்களுக்கு அடிப்படை வாதத்துடன் கூடிய இஸ்லாமிய போதைனை பலவந்தமாக போதிக்கப்படுவதாக குறிப்பிட்ட செந்தில் தொண்டமான் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பை சேர்ந்த அரவிந்த குமார் இந்த கற்கை நெறிக்கு அனுசரணையாக செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவானில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஒரு வாராகாலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அல் முஸ்தபா பல்கலைக்கழகம் தொடர்பில் யாரும் ஆராய முன்வராத நிலையில் ஊவாமாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன்.  அதற்கமைய இந்த பல்கலைக்கழகம் தொடர்பிலான பல தகவல்களை திரட்டிக்கொள்ள முடிந்தது.

அத்துடன் ஒரு மாணவன் ஏதேனும் கற்கை நெறியை தொடர்வானெனில் எதிர்காலத்தில் பிரியோசனமாக இருக்க வேண்டும் . ஆயினும் இந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டமானது சட்டபூர்வமற்றதாகும் .

இந்த பல்கலைக்கழக கற்கை நெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாதவையாகும் . பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழு அதனை உறுதிபடுத்தியுள்ளது. இவ்வாறாக உயர்கல்வி அமைச்சு  இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் ஆகியவற்றின் கீழும்பதிவு செய்யப்டவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

எமது நாட்டில் செல்லுபடியாகாத பட்டப்படிப்பை மலையக மாணவர்கள் தொடருவதற்கு அரவிந்த குமார் என்னும் அரசியல் வாதி பின்னணியில் இருந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய செல்லும்படியாகாத பட்டப்படடிப்பை தொடர்ந்தமையினால் மலையக மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் ஈரானிய கொள்கைகளை இங்கு கற்றுக்கொள்ளும் வகையில் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். அவற்றிற்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினரே பின்னணியில் இருந்துள்ளமை தெளிவாகின்றது.

சுமார் 500 வரையிலான மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஈரானிய கொள்கைகள் போதிக்கப்பட்டுள்ளதுடன் இலவசக்கல்வி வழங்கப்படுவதாக கூறி ஒவ்வொரு தவணைப்பரீட்சை பரீட்களின் போதும் பணம் அறவிடப்பட்டும் உள்ளது. இந்த நிலையில் சுமார் 60 தொடக்கம் 70 இலட்சம் ரூபாய் வரையிலான நிதி மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தகைய அடிப்படை வாத கல்வி முறைமைக்குள் உள்வாங்கப்பட்டு சிந்தனையில் அடிப்படை வாத எண்ணங்கள் புகட்டப்பட்ட மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கான விசேட செயற்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். மேலும் இத்தகைய பயனற்ற வகையிலான  எமது நாட்டுக்கு பொருத்தமற்ற கற்கை நெறியை மாணவர்கள் தொடர்வதற்கு உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்ட அரவிந்த குமார் மீது முழுமையான சட்ட நடவடிக்கை தொடர்பில் பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE