விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை சம்பந்தமாக அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு இன்றையதினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தேபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.