பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம், நியூஸிலாந்து, சுவீடன், பின்லாந்து, மற்றும் அயர்லாந்து உட்பட 16 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களிடையே ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
2009ம் ஆண்டு தமிழர் தேசம் சிங்கள அரசினால் ஆக்கரிமிக்கபட்டு தமிழர்களுக்கான அரசியல் வெளி இல்லாத நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசியல் வெளியில் உருவாகியதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
நாடுகடந்த அரசியல் என்ற புதியதொரு அனைத்துலக அரசியல் பரிமாணத்தில் தோற்றம் பெற்ற இந்த அரசாங்கமானது அரசவை, மேலவை, பிரதமர், அமைச்சரவை என்ற அரசியல் கட்டமைப்புக்களைக் கொண்டதாக இருக்கின்றது.
அந்தவகையில் பிரித்தானியாவில் இம்முறை தேர்தலில் 20 அரசவை உறுப்பினர்கள் தெரிவுக்காக 32 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். லண்டனிலிருந்து 18 உறுப்பினரும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒருவருமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் பிரிதானியாவிலிருந்து போட்டியிட்டவர்களில் அதிகளவான இளையோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் இருந்து அதஇகளவான இளையோரே இம்முறை நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
சொக்கலிங்கம் யோகலிங்கம், கிருசாந்த் துரைசிங்கம், பிரேம்குமார் சந்திரகுமார், நுஜிதன் இராசேந்திரம், குகரூபன் கணேசலிங்கம், மயூரதன் வேலுப்பிள்ளை மகாலிங்கம், பார்த்தீபன் ராஜதுரை, கஜவதனன் கிருஷ்ணமூர்த்தி, அஜந்தன் கந்தையா, பிரியந்தி சுதர்சன், ஆகியோர் புதிதாக பிரித்தானியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தவணைக்காலமும் ஜனநாயகப் பொறிமுறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுகின்ற ஓர் தனித்த அமைப்பாக இது அமைந்து வரும் நிலையில், இதனுடைய மூன்றாவது தவணைக்காலத்துக்கான தேர்தலில் இளம் தலைமுறையினர் அதிகம் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்தின் ஜனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.