வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று அதிகரித்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் வாகனங்கள் உட் செல்ல படையினர் தடைவித்தித்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் பல பாகங்களில் குண்டுகள் வெடிக்கலாம் என்று வெளியான தகவல்களை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா நகரின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பழைய பேருந்து நிலையப் பகுதிக்குள் செல்லும் பிரதான வாயிலில் வழிமறிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்பகுதியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர்களின் வாகனங்களும் பேருந்து நிலையத்திற்கு வெளியே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பல்வேறு தேவையினிமித்தம் செல்லும் பொதுமக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அவர்களின் பயணப் பொதிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.