மட்டக்களப்பு, வவுணதீவு பொலிசார் கொலை செய்யப்பட்டமையை உரியமுறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறிரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2018 ஆம் ஆண்டு மாவீரர் தினம் அண்மித்து இருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் பொலிசார் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலை தொடர்பான பரபரப்பான நிலமை இருந்த காலத்தில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு அந்தக் கொலை சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டிருந்தது.
உண்மையில் அந்த விசாரணையை பொலிசார் உரிய முறையில், செய்திருப்பார்களாக இருந்தால் கடந்த 21 ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
இப்படியான நிலைமைகளை பார்க்கின்ற போது தமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறான அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பார்கள். எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இன்றும் அவர்கள் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை தெட்டத்தெளிவாக மக்கள் மத்தியில் உணரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த தீவிரவாத தாக்குதல் கற்று தந்துள்ளது.
ஆகவே தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்களை தமிழர் மீது சுமத்தி அப்பாவிகளாக இன்று நீண்டகாலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கக்கூடிய அந்த போராளிகளுக்கு, நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து அவர்களது பெற்றோர்கள் வருடக் கணக்கில் வீதிகளில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும். இந்த தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகாவது இந்த நாட்டினுடைய அனைத்து இன மக்களையும் மதித்து அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும்.
இந்த நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி மறைக்காமல் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டின் மீதும், நாட்டின் பாதுகாப்பு படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
அத்துடன் உதித்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதலில் தமிழர்கள் அதிகமாக கொல்லப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பில் நடத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் என முழுமையாக எல்லோரும் தமிழர்கள். கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் பெரும்பான்மையானோர் தமிழர்கள். இந்த நிலையில் இன்னும் தீவிரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படவில்லை. இந்த தீவிரவாத தாக்குதலில் யார் யார் தொடர்புபட்டுள்ளார்கள்.
எந்தெந்த அரசியல் பிரமுகர்கள் தொடர்பு பட்டுள்ளார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. மிகவிரைவில் அனைவரையும் கைது செய்வோம் என ஜனாதிபதி கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதியா, இல்லையா என்று இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் என கே.கே.மஸ்தான் கேட்கின்றார். அப்படியென்றால் அந்த சகோதாரர்களை வழிநடத்துவது கே.கே.மஸ்தானா? இவர்கள் தீவிரவாதிகளா, இல்லையா என நீதிமன்றத்தால் இன்னும் நிறுவப்படவில்லை. அதற்கு முன்பு அவர்களின் விடுதலையைப் பற்றி பேசுகிறார்கள்.
முஸ்லிம் பிரதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். உலகம் வாழ் முஸ்லிம்கள் இந்த தீவிரவாதத்தை ஏற்கவில்லை. ஒரு சில இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் இதை செய்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கொஞ்ச முஸ்லிம் வாக்குளையும், சிங்கள, தமிழ் வாக்குளையும் பெற்று தான் அரசியலுக்கு வந்தவர். அப்படி இருக்கையில் இவ்வளவு காலம் போராடும் தமிழ் அரசியல் கைதிகள் சம்மந்தமாக எதுவும் பேசாது இருந்து விட்டு தற்போது இஸ்லாமிய சகோதரர்களை விடுவிக்க கோருவது சிந்திக்க தூண்டுகிறது என்றார்.