நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலைநோக்கி அனைத்து அரசியல்வாதிகளின் காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஜனா திபதித் தேர்தலைக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலை எடைபோட முடியாது. எனினும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இந்த கூட்டு அரசாங்கம் தன்னால் இயன்ற அதிகாரங்களை பயன்படுத்தும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொழு தும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல்வேறுவிதமாக விளம்பரப்பதாதைகளை யும், பிரச்சாரங்களையும் நாடுமுழுவதும் மேற்கொண்டிருந்தார்.
அது மட்டுமல்லாது எஸ்.பி. திசாநாயக்க அவர்களைக்கொண்டு போலி யான ஆவணங்களை தயாரித்து செயற்பட்டமையும் நாம் அறிந்ததே. அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவைக்கொண்டு இராணுவப் புரட்சியினை இலங்கையில் ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தார். இந்த சதிகளை முறியடிக்க அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உதவியமை ஒருபுறமிருக்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப்போட்டியிடும் ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
இதில் உள்ளடக்கப்படும் பிர தான கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜன நாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, பொதுபல சேனா, ராவணபலய, ஈ.பி.டி.பி போன்ற இன்னும் பல சுயேட்சைக்கட்சிகளும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. குறிப்பாக வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 18 ஆசனங்களை வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டத்தில் 22 ஆசனங்களுடன் போனஸ் அடங்கலாக மொத்தம் 25 ஆசனங்களை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும் என்பது கேள்விக்குறியாகவிருந்தாலும், ஏனைய கட்சிகளும் 05, 08, 10 ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.
வடகிழக்கினை பொறுத்தவரையில் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமையப் போகிறது. இம்முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைப்பதற்காக தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்று கூறிக்கொண்டு பல கட்சிகள் தேர்தலில் குதிக்கும். இதற்கு இவ்வரசாங்கம் போதுமான நிதி உதவிகளையும் வழங்கும். இதனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலம் முறியடிக்கப்படும். குறிப்பாகச் சொல்லப்போனல் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ போன்ற கட்சிகளுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவதாகக்கூறி, அவர்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக் கில் இவ்வரசாங்கம் செயற்படலாம். அதற்கான திட்டவரைபுகளை தற்பொழுதிலிருந்தே இவ்வரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை குறி வைத்துள்ள இந்த நரிகள், மஹிந்த ராஜபக்ஷவை கூட்டுக்குள் அடைப்பது அல்லது தூக்கில் தொங்கவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசுடன் இணைந்து திட்டமிட்டு வருகின்றார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர் ரணில் அவர்களே. ஏற்கனவே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் வைத்திருக்கும் அதே நேரம், தேசிய அரசாங்கம் என்று குறிப்பிடும் போது தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்ற இரண்டிற்கும் இடமில்லை என்பது திட்டவட்டமான உண்மை.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு அக்கட்சிகளின் ஒப்புதலுடன் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கான திட்டங்களினையே பிரதானமாகக் கொண்டு இப்பாராளுமன்ற தேர்தல் இம்முறை நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தினை இத்தேர்தலை மையப்படுத்தியே வெளியிட்டுவைத்திருந்தமையும் விசேட அம்சமாகும். இதில் அரச ஊழியர் களுக்கான சம்பள அதிகரிப்பு முக்கியத்தும் பெறுகின்றது. அதுமட்டுமல்லாது எரிபொருள், பால்மா விலைக்குறைப்பு போன்றவற்றையும் விலைக்குறைப்பு செய்ததன் மூலம் நல்லெண்ணத்துடன் இவ்வரசு செயற்படுகின்றது: செயற்படப்போகின்றது என்ற எண்ணத்திற்கான அஸ்திவாரம் இடப்பட்டாலும் கூட, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையினை ஒழிப்பதற்கு மூன்றில் இரு பெரும்பான்மை இவ்வரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. குறைந்தது 125 ஆசனங்களையாவது கைப்பற்றவேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் நிரூபிக்கப்பட்டு, கடந்த அரசுடன் செயற்பட்ட முக்கிய அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்காது, மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரையும் சிறையில் அடைப்பதுடன், அவர்களால் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஊடா கவே இந்த கூட்டு அரசாங்கத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுமே தவிர, எக்காலகட்டத்திலும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையினை இல்லாதொழிக்காது போகும் வரையிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணமுடியாது.
கடந்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் கூட விடுதலைப்புலிகளும், ரணிலும் செய்துகொண்ட ஒப்பந்தங்களும் கைகூடாமல் போனதற்கு இந்த நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே காரணமாக அமைந்தது. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்விரு கட்சிகளும் காலத்திற்கேற்ப பச்சோந்திகளாக செயற்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. அவ்வாறானதொரு சூழலே தற்போதைய காலத்திலும் இடம்பெற்றது. முஸ்லீம் மக்களுக்கு கடந்த அரசு அநீதிகளை விளைவித்திருந்தபோதிலும், பதவி மோகங்களுக்காக இக்கட்சிகள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தன. மஹிந்தவின் அரசு கவிழ்க்கப்படப்போகின்றது என்பதை உணர்ந்துகொண்ட இந்த கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டன.
இதற்கு மற்றுமொரு காரணம் என்னவென்றால் கடந்த அரசாங்கத்திற்கு தாம் வாக்களிக்கப்போவதில்லை என்று முஸ்லீம் மக்கள் தெளிவானதொரு தீர்வில் இருந்தார்கள். அதற்குக் காரணம் பள்ளிவாசல்கள் இடித்தழிக்கப்பட்டு, மதவழிபாடுகளுக்கு இடையூறுகள் விளைவித்திருந்தமையே பிரதான காரணங்களாக காணப்பட்டது. தற்போது அக்காலகட்டங்கள் அனைத்தும் மாற்றம் பெற்று ஒரு குடையின் கீழ் வந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இன்னும் இதர கட்சிகள் அனைத்தின் நிலைமைகளும் இக்கட்டான சூழ்நிலைக்குள் உள்ளாகப்போகின்றது. காரணம் என்னவென்றால் அந்தந்த மாவட்டங்களில் தமது அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வாக் கினைப் பெறும் நோக்கில் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாகவே செயற்படுவார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினை வெற்றிகொள்வதற்கு அக்கட்சியில் உள்ளவர்களை விலைகொடுத்து இவ்வரசாங்கம் வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. இவ்வரசாங்கத்தின் பின்னணியில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் செயற்படுகின்றன. சீன அரசாங்கத்தின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசினை கொண்டுவருவதற்கு சீன அரசு மும்முரமாகவே செயற்படும். காரணம் தன்னுடைய இராணுவ நிலை இருப்பினை இலங்கையில் கால்பதித்துக்கொள்ளும் நோக்கிலும், பொருளாதார அபிவிருத்திகளை இலங்கையில் மேற்கொள்வதற்குமாகவே. இவ்வாறானநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை இலக்கு வைப்பதன் முக்கிய காரணங்கள் என்னவெனில், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் இல்லாதொழிப்பது. முள்ளிவாய்க்கால் பிரச்சினையை மூடிமறைப்பது. வடமா காணசபையை ஓரங்கட்டுவது. சமத்துவ அடிப்படையிலான அதிகாரங்களை வழங்குவது. கல்வி தரப்படுத்தலில் தமிழ் சமுகத்தினரிடையே பாகுபாட்டினைக் காட்டுவது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்காதிருப்பது. இலங்கையின் அனைத்து பாகங்களிலும் அனைத்து இனத்தவர்களும் வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது போன்ற சாதக பாதக நிலைமைகளை பூதாகரமாக வெளிப்படுத்தி, இவ்வாறான பல விடயங்களை முன்வைத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதற டிக்கும் முனைப்பில் இந்த நரிகள் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய புலனாய்வுக் கட்டமைப்பு சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்களது இரகசிய தொடர்பாடல்களை கோட்டைவிட்டது ஏன்? என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. தொழில்நுட்பம் மேலோங்கியிருந்த ஜனாதிபதித் தேர்தல்காலத்தில் மிக சாதூரியமாக இம்மூவரும் செயற்பட்டிருந்தமையே இவ்வரசாங்கத்தின் வெற்றிக்கு வித்திட்டது. தமிழினத்தினை கொன்றழித்த இவ்விரு அரசுகளும் தற்போது தமிழினத்திற்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். சர்வதேச விசாரணை என்று பல வருடங்கள் உருண்டோடிவிட்டது. இன்னமும் அதற்கான தீர்வுகள் இல்லை. ஆனாலும் இவ்வரசாங்கம் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாகவே அறிவித்திருக்கிறது. இவ்விடயம் வரவேற் கத்தக்கதாகவிருக்கின்றபோதிலும், போலி யான வாக்குறுதிகளை நம்பி தமிழினம் மீண்டும் ஏமாற்றமடையக்கூடாது.
கூட்டமைப்பை குறிவைப்பதன் ஊடாக, அவர்களுடன் ஏற்கனவே பகைமைகளுடன் இருக்கக்கூடிய கட்சிகளைப் பயன்படுத்தி, ஆசனங்களை சிதறடிக்கச்செய்யும் இரகசியத் திட்டங்களும் இந்த கூட்டு நரிகளின் சதித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இரு தசாப்தங்கள் கடந்து 21ம் நூற்றாண்டிலும் கூட தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாக 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் சம்பந்தன் அவர்களை விலைகொடுத்துவாங்கிவிட முடியும் என்று இவ்வரசு கங்கனம் கட்டிநிற்கின்றது. அரசியலில் சாணக்கியம் பெற்ற மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் அவர்கள், அவ்வாறு விலை போகும் அளவிற்கு இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இக்கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய இதரக்கட்சிகள் பணத்திற்காக விலைபோகக்கூடியதான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதில் முதலாவதாக முண்டியடித்துக்கொண்டு செல்லக் கூடியவர் தேசியப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டுள்ள சுமந்திரன் என்றும் கூறலாம். நடைபெற்றுமுடிந்த இலங்கையின் 67வது சுதந்திர தின வைபவத்தில் இவர் கலந்துகொண்டமையை ஊடகங்கள் பல விமர்சனங்களின் மூலம் வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் அவர் ஒரு திறமை மிக்க சட்டத்தரணி. மேற்குலகத்திற்கேற்ப அவருடைய அரசி யல் நகர்வுகள் நகர்த்திச்செல்லப்படும். ஆகமொத்தத்தில் அவரது அரசி யல் நடவடிக்கைகளும் அவ்வாறே அமையப்பெறும். சுமந்திரன் அவர்களை உள்வாங்கிக்கொள்வது அரசிற்கு பெரிய விடயமுமல்ல. ஏற்கனவே கடந்த அரசிற்கு ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய ஆயுதக்குழுக்கள் தமது கட்சிக்கு பாதகமான நிலைமை ஏற்படுகின்றபொழுது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து விலகிச்செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் தமது கட்சியை பலப்படுத்திக்கொண்டு விலகிச்செல்வதை குறைகூறமுடியாது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் மற்றும் ஊடகவியலாளர் டி.சிவராம் போன்றவர்களினால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. அவ ருடைய நெறியாண்மையின் கீழ் தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்துக்களின்படியும் இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை அசைக்கமுடியாத நிலையே தோன்றியுள்ளது. அவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள வர்கள் பிரிந்துசெல்லமுற்பட்டால், தமிழரசுக்கட்சி அவர்களுக்கு ஆசனங்களை வழங்காத சூழ்நிலை உருவாகும். அதனையே இந்த கூட்டுநரிகள் எதிர்பார்க்கின்றன. ஆயுதப் போர்முனையில் இருந்து வந்த இந்தக்கட்சிகள், கிடைத்த சந்தர்ப்பத்தினை நழுவவிடாது அக்கட்சியின் இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் இக்கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ளும். அமெரிக்காவின் பின்னணியிலிருந்துகொண்டு செயற் பட்டுக்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், கருணா-பிரபா பிரிவினை ஏற்படுத்தியதனைப்போல, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினது கட்ட மைப்பினை பிளவுபடுத்துவதற்கு முழுமூச்சாக செயற்படுவார். அதனது தாக்கம் இன்று பெருவாரியாக காணப்படுகின்றது.
கருணா-பிரபா ஒற்றுமையாக விருந்த காலப்பகுதிகளில் தமிழர் பிரதேசங்களில் ஓரடி மண்ணைக்கூட பெற்றுக்கொள்ள அரசாங்கத்தினால் இயலாத நிலை காணப்பட்டது. அதுபோன்றதொரு செயற்பாட்டினையே தொடர்ச்சியாக இவ்வரசாங்கம் செயற்படுத்தும். சுகபோக வாழ்வினை அனுபவித்துக்கொள்வதற்கு சமாதான காலம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ, அதேபோல இந்த 100நாள் திட்டத்தினைக்கொண்டு தமிழ் மக்களுக்கு அனைத்து சுகபோக வாழ்க்கையினையும் வழங்கி, அதனூடாக அரசு தமிழ் மக்களின் நலனில் அக்கறைகாட்டுகின்றது என சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தி, தமிழ்மக்களுக்கான சொற்ப கொடுப்பனவுகளை வழங்கி, தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றையும் மழுங்கடித்து செயற்படுத்துவதற்கான திட்டங்களை இந்த அரசு வடிவமைத்துள்ளது. இதனை கவனத்திற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மிக வும் அவதானத்துடன் செயற்படுமாகவிருந்தால் இந்த கூட்டுநரிகளின் சதிவலைக்குள் சிக்கிக்கொள்ளாது தமிழ்மக்களுக்கு விடிவினைப் பெற்றுக்கொடுக்கமுடியும். இல்லாது போனால் ஆண்டான்டு காலமாக தமிழினம் அடிமையான வாழ்க்கைநிலையினை தொடரவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
– இரணியன் –