உலகில் மிகவும் வயதான நபர் தானே என உரிமைகோரி வந்த ரஷ்யாவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ஜோர்ஜியாவுக்கு அருகிலுள்ள இங்குஷிதியா பிராந்தியத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான அப்பாஸ் லலியெவ் என்ற மேற்படி வயோதிபர் தனது 123 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் உலகப் போரில் பணியாற்றிய தனக்கு தனது அதிக வயதைக் காரணம் காட்டி இரண்டாம் உலகப் போரில் போரிட அனுமதியளிக்கப்படவில்லை என அவர் உயிருடன் இருந்த போது அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவரது பிறப்புத் தொடர்பான பதிவுகள் காணாமல் போயுள்ளதால் உலகின் மிகவும் வயதான நபர் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.
தினசரி 11 மணி நேரம் உறங்குவதே தனது நீண்ட ஆயுளின் இரகசியம் என அப்பாஸ் லலியெவ் குறிப்பிட்டிருந்தார். அவர் 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.