யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுதலை!

209

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத்தில்  இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது   யாழ் பல்கலைக்கழகத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் சில போராளிகளின் புகைப்படங்களை வைத்திருந்த   குற்றத்தில் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை  நடத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் குறித்த வழக்கு இன்று  யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே தமது நோக்கமென்றும் பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் குறித்த மூவரையும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் குறிப்பிட்டார்.

இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான், மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது.

SHARE