யாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
திட்டமிட்டு ஒரு சில தினங்கள் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குத் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணுடன் அன்பாகப் பேசி நடித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண்ணின் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுவிட்டார்.
இத் தந்திரமான திருட்டு சுதுமலை தெற்கு மாவடி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றிக் கூறப்படுவதாவது
பல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு இரு தினங்கள் அடுத்தடுத்துச் சென்ற முன்பின் அறிமுகமில்லாத வாலிபரொருவர் அப்பெண்ணுடன் அன்பாகப் பேசி தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார்.
மூன்றாவது தினம் அங்குச்சென்ற வாலிபர் வழமை போல் அப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட அப் பெண் பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைப்பதாக எழுந்து சென்ற பொழுது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் கட்டிலின் மேல் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 3 பவுன் எடையுள்ள ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.