பதுளை சிறைச்சாலையிலிருந்து மகியங்கனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம்

213

பதுளை சிறைச்சாலையிலிருந்து மகியங்கனை நீதிமன்றத்திற்கு சிறைக் காவலர்களினால் கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

நாரம்மலையைச் சேர்ந்த ஒருவரே  இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இந்நபர் தப்பியோடிய வேளையில் ஹெரோயின் போதைவஸ்துடன் கைதுசெய்யப்பட்ட பிறிதொரு நபரும் தப்பியோடிய போதிலும் சிறிது நேரத்தில் அந் நபர் மீளவும் கைதுசெய்யப்பட்டார்.

தப்பியோடிய கைதி இரு இளம் பெண்களை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுகளுக்குட்படுத்தி அப்பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றமை குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்டு மகியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மகியங்கனைப் பகுதியைச் சேர்ந்த மாப்பாகடவெவ என்ற இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 24 வயதுகளுக்குட்பட்ட திருமணமான இரு இளம்பெண்களை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுகளுக்குட்படுத்தியதுடன் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க இரு தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றுள்ளமை குறித்த குற்றச்சாட்டுக்களே தப்பியோடிய கைதி மீது சுமத்தப்பட்டவைகளாகும்.

தப்பியோடிய கைதியை கண்டுபிடித்து கைதுசெய்ய சிறைக்காவலர்களும், மகியங்கனைப் பொலிசாரும் இணைந்து துரித தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE