அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் நடுநிலையில் இருந்து விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இஸ்லாமிய சமூகம் மீது இன்று விழுந்த அவப்பெயருக்கு விரைவில் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் ஆதார பூர்வமாகவே முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் தமது இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாட்டின் அடிப்படைவாத அமைப்பு எந்தளவிற்கு பலம் பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்துள்ளதோடு, இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அனைவரதும் கோரிக்கையாகவுள்ளது என்றார்.