அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் – சி.சிவமோகன்

261

அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் அல்லது அந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் அதாவது அவர்கள் இவர்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் அதற்காக அந்த அரசியல்வாதிகள்  ஐ.எஸ். தீவிரவாதத்தை ஆதரித்து தான் அவர்களை சந்தித்தார்கள் என்று நிச்சயமாக கூற முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எஸ். தீவிரவாதம் எங்கு இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியாமல் தான் இருந்தது. நேரடியாக அதை நாம் காணவும் இல்லை. பல பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த விடயம் இன்று ஒரு சிறிய தீவில் அமைதியை சீரழித்துள்ளது.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, அரபு நாடுகளில் காணப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதம் எவ்வாறு இங்கு இழுதுக் கொண்டுவரப்பட்டது என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இளைஞர்களிடையே ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் குறித்து அதாவது அரச இயந்திரம் இளைஞர்கள் மீது நடத்துகின்ற அடக்கு முறையின் வெளிப்பாடே இளைஞர்களின் தற்கொலை தாக்குதல்கள். இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் தன்னையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வவுணதீவில் பொலிசாரை கொலை செய்ததாக முன்னாள் போராளிகளை கைது செய்து ஒரு மாவீரர் தினத்துடன் தொடர்பு படுத்தி அவர்கள் தான் செய்தார்கள் என முடிவெடுத்து தாங்களே கற்பனைகளைக் கட்டி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். ஆனால் இன்று கதை மாறிக்கொண்டு வருகின்றது.

அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்பது தெரியவந்து கொண்டிருக்கின்றது. தற்போது உண்மை தெரியவந்துள்ளதென்றால் அன்று இந்த அரசு பாரிய பிழையை விட்டுள்ளது.

அந்த பிழையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சம்பவத்தை சரியாக விசாரித்து உண்மையை கண்டு பிடித்திருந்தால் இன்று இந்த தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருக்காது.

எனவே ஐ.எஸ். தீவிரவாதம் தன்பாட்டில் உள்ளே வர எப்பொழுது, எது நடந்தாலும் தமிழ் மக்கள் மீது பழியை போடும் நிலையே காணப்படுகிறது.

அரசியல்வாதிகள் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் அல்லது அந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள்.

அதாவது அவர்கள் இவர்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்காக அந்த அரசியல்வாதிகள்  ஐ.எஸ். தீவிரவாதத்தை ஆதரித்து தான் அவர்களை சந்தித்தார்கள் என்று நிச்சயமாக கூற முடியாது. எனவே அரசாங்கம் உண்மையை கண்டறிய வேண்டும் என்றார்.

SHARE