பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோக்­கு எதிரான மனு 31 ஆம் திகதி பரிசீலனைக்கு

227

தெளி­வான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட  தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யதன் ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் பொதுமக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக கூறி  தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவை எதிர்­வரும் 31 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள நேற்று உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது.

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் தமது பிள்­ளைகள் இரு­வரை இழந்த தந்­தை­யான  சமன் நந்­தன சிறி­மான்ன, சுற்­றுலாத்துறை வர்த்­தக நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள நபர் ஒருவர் என இருவர் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் மீதான  பரி­சீ­ல­னை­களே அந்த திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

நேற்­றைய தினம் இந்த மனுக்கள் உயர் நீதி­மன்றின் நீதி­யரசர்­க­ளான புவ­னேக அலு­வி­கார, எல்.டி.பி. தெஹி­தெ­னிய மற்றும்  ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட  நீதி­யர­சர்கள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு வந்­தது.

இதன்­போது  முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஷ பிரே­ம­ரத்­னவும்,  கட்­டாய விடு­மு­றையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர சார்பில்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி  வர்­ண­சூ­ரி­யவும் ஆஜ­ரா­கினர்.

மனு­வா­னது பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டபோது, முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னா­ண்டோ சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஷ பிரே­ம­ரத்ன,  தனது சேவை பெறு­ந­ருக்கு உரிய முறையில்  அறி­வித்தல் கிடைக்­க­வில்லை எனவும்  பத்­தி­ரிகை செய்­தி­களைப் பார்த்தே தான் மன்றில் ஆஜ­ரா­ன­தா­கவும் கூறினார்.

இந்­நி­லையில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக மனுவில் பெய­ரி­டப்­பட்­டுள்ள   பொலிஸ் மா அதிபர் பூஜித் மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோருக்கு உரிய முறையில் அறிவித்தலைக் கையளிக்குமாறு மனுதாரர் தரப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன்  மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி ஆராய்வதாக அறிவித்தது.

SHARE