பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட கோ வொறன்டோ நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுக்காது மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கியது.
அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி, பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதால், அவரால் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரிவித்து, நீதிக்கான பெண்கள் அமைப்பின் இணைத் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான ஷர்மிளா கோனவல இந்த மனுவை பிரதமர் ரணிலுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார். முதலில் இந்த மனு அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், ஆராயப்பட்டது. இதன்போதே தனிப்பட்ட காரணங்களால் இம்மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என அப்போதைய பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர, தான் அங்கம் வகிக்காத வேறொரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படியே அம்மனு நீதிபதிகளான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டு வந்தது.
கடந்த தவணையின் போது இம்மனு தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பான பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரனும் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர்.
இதன்போது மனுதாரர், குறித்த மனு தொடர்பில் சாட்சியங்களாக முன்வைத்துள்ள ஆவணங்கள் மூலப் பிரதிகளல்ல என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன், அவ்வாறான சாட்சியங்களை மையப்படுத்திய மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு விசாரிக்க முடியாது என வாதிட்டார். அதனால் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள் ளுபடி செய்யவேண்டும் எனவும் அவர் கோரினார். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டே நேற்று மேன் முறையீட்டு மன் றம், குறித்த மனுவை விசாரணைக்கு ஏற் காது தள்ளுபடி செய்தது.