அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் நேற்று சபையில் வாதிட்டபோது அதற்கு இடமளிக்க முடியாது, தெரிவுக்குழுவே தீர்வு என்று ஆளும் தரப்பு வாதிட்ட நிலையில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது சர்ச்சையை ஏற்படுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாபீடம் முன்பாக குவிந்ததுடன் சபை நடவடிக்கைகளை தடுத்தனர். இதனையடுத்து பிற்பகல் 3 மணிக்கே சபை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய வேளையில் வாய்மூல வினாவிற்கான விடை நேரம் முடிந்த பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விவகாரம் சபையில் பூதாகரமாக்கப்பட்டது.
ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர் வாக்குவாதம்
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன :- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 60 துக்கும் அதிகமானவர்கள் கையொப்பமிட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவந்து சபாநயாகரிடம் கையளித்துள்ளோம். அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டீர்கள். இது சாதாரணமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. மிகவும் பாரதூரமான விவகாரமான பயங்கரவாத செயற்பாடுகளுடன் கூடிய ஒன்றாகும், இதனை நீங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இது குறித்து பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும். அதனை நாம் செய்யாது போனால் நாம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த விடயத்தில் சபை முதல்வர் தடுக்க முடியாது. முழுமையான அதிகாரம் சபாநயாகர் உங்களிடம் மட்டுமே உள்ளது. ஆகவே இந்த பிரேரணையை விவாதிக்க வேண்டும். அந்த உரிமை சபைக்கு உண்டு. ஆகவேதான் நாம் கட்சி தலைவர் கூட்டத்திலும் இதனை தெரிவித்தோம். இதனை தடுக்கும் விதத்தில் நடந்துகொண்டால் அது ஜனநாயகத்திற்கு பாரிய அடியாக விழும். தெரிவுக்குழு அமைத்து இந்த பிரச்சினையை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு சபாநாயகர் இடமளிக்காது ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என்றார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் இதற்கு நான் உரிய நடவடிக்கை எடுத்துள்ளேன். சபாநாயகர் என்ற வகையில் எந்த செயற்பாடுகளையும் நான் தடுக்கவில்லை. சபை முதல்வர் இதற்கான திகதியை வழங்க வேண்டும். இதில் என்னால் தலையிட முடியாது என்றார்.
சபை முதல்வர்:- எதிர்க்கட்சி கொடுத்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 2018 ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எவரும் மறுக்க முடியாது. ஆகவே அரசாங்கம் இதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார்.
பந்துல குணவர்த்தன எம்.பி:- இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் தான் இதனை அங்கீகரிக்க வேண்டும். அன்று ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நீங்கள் அப்போதே ஏற்று வாக்களிப்பிற்கு இடமளித்ததை போல இதற்கும் இடமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விமல் வீரவன்ச :- நாட்டு மக்களே எதிர்பார்க்கும் ஒரு விடயம் குறித்தே இன்று பேசுகின்றோம். நாடே நாசமாகியுள்ளது. அதுமட்டும் அல்ல, அமைச்சர் ரிஷாத் குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பாரதூரமானது. ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாள் குறிக்க வேண்டும் . அப்படி வழங்கவில்லை என்றால் நாம் இதற்கு பின்னர் எந்தவொரு தெரிவுக்குழுவிலும் பங்குபற்ற மாட்டோம். அதேபோன்று இதற்கு இடமளிக்காவிட்டால் இலட்சக்கணக்கான மக்களை வரவழைத்து பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க இடமளித்துவிட வேண்டாம் என்றார்.
இதனையடுத்து உரையாற்றிய நாமல் ராஜபக் ஷ:- 21 ஆம் திகதி தாக்குதல் தெரிந்து அதனை தடுக்காத நபர்களை கண்டறியவே தெரிவுக்குழு அமைக்க வேண்டும். மாறாக நம்பிக்கையில்லா பிரேரணையை ஆராய தெரிவுக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் ரிஷாத் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்போம். அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் முதலில் விவாதத்தை நடத்துங்கள் என்று குறிப்பிட்டார்.
மஹிந்தானந்த அளுத்கமகே :- ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயத்தை நிராகரிக்க முடியாது. அமைச்சர் ரிஷாத்தின் இணைப்பாளர், ஆலோசகர் மற்றும் அவரது சகோதரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் அல்ல கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்தார் என இராணுவ தளபதி கூறியுள்ளார். இதைவிட வேறு என்ன காரணம் தேவை, இது முழு முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்வைத்த பிரேரணை அல்ல. இது ஒரு குற்றவாளிக்கு எதிராக கொண்டுவந்துள்ள பிரேரணையாகும். ஆகவே இதனை தடுக்க சபை முதல்வருக்கு உரிமை இல்லை. முதலில் இவர்கள் குறித்த பொலிஸ்மா அதிபரின் அறிக்கையை பெற்று ஆராய வேண்டும் என்றார்.
சபைக்குள் நுழைந்த அமைச்சர் ரிஷாத்
இந்த நிலையில் சபைக்குள் வந்த அமைச்சர் ரிஷாத் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி மஹிந்தானந்த எம்.பியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தார்.
ரிஷாத்தை அமைதிப்படுத்திய பிரதமர்
இதன்போது ஆக்ரோஷமாக உரையாற்ற ஆரம்பித்த அமைச்சர் ரிஷாத்திடம் ஓடிவந்த பிரதமர் ரணில் அவரை அமைதியாக இருக்கும்படி ஆசுவாசப்படுத்தி ஆசனத்தை விட்டு நகர்ந்தார். அதன்பின்னர் அமைதியடைந்தார் அமைச்சர் ரிஷாத்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சுசில் எம்.பி :- தெரிவுக்குழு அமைத்து பிரச்சினையை மூடி மறைக்க அரசாங்கம் முயட்சிக்கின்றது. ஏற்கனவே மத்தியவங்கி ஊழல் விடயத்தில் அரசாங்கம் செய்த சதித்திட்டம் நன்றாகவே தெரியும். ஆகவே இப்போதும் அதற்கு இடமளிக்ககூடாது
இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய ஆசு மாரசிங்க:- தெரிவுக்குழு அமைப்போம் என்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர். 21 ஆம் திகதியின் பின்னரான சகல விடயங்கள் குறித்தும் ஆராயவே இந்த தெரிவுக்குழு அமைத்தோம். இதில் அமைச்சர்கள் குறித்தும் ஆராயலாம். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றே முழு நாடும் நினைக்கின்றது. ஆகவே தெரிவுக்குழு அவசியம். அதன் மூலமாகவே உண்மைகளை கண்டறிய முடியும். அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானவையாகும். ஆகவே அதனை நிருபிக்கவும் தெரிவுக்குழு அவசியம் . நான் இராணுவ தளபதியை தொடர்புகொண்டு இது குறித்து வினவினேன், ஆனால் அவர் ஒருபோதும் அமைச்சர் ரிஷாத் மீது குற்றம் சுமத்தவில்லை. அமைச்சர் ரிஷாத் முன்வைத்த கோரிக்கை தவறில்லை. அது அவரது உரிமையாகும். அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது என்றார்.
ரோஹித அபேகுணவர்த்த:- இந்த தாக்குதலில் அரசாங்கம் பலவீனமாக இருந்தது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. அதேபோல் ஆளுநர்கள் இருவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமக்கு அமைச்சர் குறித்தே நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகவே அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்துள்ளோம். இவரது அமைச்சர் பதவியை வைத்துகொண்டு தப்பித்து வருகின்றார். ஆகவேதான் அவரது அமைச்சுப்பதவியை நீக்க வேண்டும் என்று கூறுகின்றோம். இதில் தெரிவுக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று ஐக்கிய தேசிய கட்சியே இந்த தாக்குதல் குறித்து அதிருப்தியில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் குற்றவாளிகளை காப்பற்ற வேண்டாம். கொல்லப்பட மக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியாது. ஆனால் நியாயத்தை கையாள முடியும். அதற்கு இடமளிக்க வேண்டும் என்றார்.
அனுர பிரியதர்சன யாப்பா :- இதற்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த பொது எவரும் ஒழியவில்லை. அமைச்சர் அஷ்ரப் விடயத்தில் மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த பொது அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்ற முன்னுதாரணங்கள் உள்ளன என குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய ஜெயம்பதி எம்.பி :- அமைச்சர் ரிஷாத் குற்றவாளி என்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. இவை உண்மை என்றால் அமைசர் ரிஷாத் சிறையில் இருக்க வேண்டும். ஆகவே இவற்றை கண்டறிய முதலில் தெரிவுக்குழுவில் காரணிகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஆராய முடியும். முதலில் தெரிவுக்குழு அமைத்து அதில் இடைக்கால அறிக்கை ஒன்றினை தயாரித்து ஒரு வாரத்தில் ஆராயலாம் என்று கூறினார்.
பத்ம உயதசாந்த :- இந்த நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய அடிப்படைவாத முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாராளுமன்றம் வரையில் சந்தேகநபர்கள் உள்ளனர். பலர் கைத்செய்யபட்டுள்ளனர். இது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கவில்லை என்றால் இது என்ன பாராளுமன்றம்? அமைச்சர் ரிஷாத் மற்றும் சிலர் மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் குறித்து தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என்றார்.
ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வாக்குவாதம்.
ஷேஹான் சேமசிங்க, சரத் நிசங்க, விஜயசேகர, அனுருத்த ஹேரத், சமிந்த விஜயசிறி, கனக ஹேரத், மனுஷ நாணயகார, நிமல் லஞ்சா, நிரோஷன் பெரேரா, ஆனந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, நிரோஷன் பெரேரா, விஜாலேந்திரன் , சரல்ஸ் நிர்மலநாதன், முஜிபூர் ரஹ்மான், அமீர் அலி , லக்ஸ்மன் யாப்பா, சாந்த பண்டார, பிரசன்னா ரணவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி -ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாத விவாதங்களில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த தலையிட்டார்
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தெரிவுக்குழு அவசியமில்லை ஒரு பத்து நிமிடங்களை ஒதுக்கி கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டி இதற்கு தீர்மானம் எடுப்போம் என்றார்.
ஆளும்தரப்பு பிடிவாதம்
சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதற்கு எதிர்ப்பை முன்வைத்தார். கட்சி தலைவர் கூட்டம் நாளைய தினமே கூட்டப்படும். இன்று அதற்கு அனுமதிக்க முடியாது. மிரட்டி காரியத்தை சாதிக்கப்பார்க்க வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம், நீங்கள் என்ன கூறினாலும் இன்று கட்சித்தலைவர் கூட்டம் கூடாது என்றார்.
சபாநாயகர் நிலைப்பாடு
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சபையில் கூச்சலிட்டு உடனடியாக கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது சபாநாயகர் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியமைக்கு, எனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளேன். இந்த பிரேரணைக்கு ஏற்ப விவாதம் நடத்த நாள் ஒன்று வழங்கப்பட வேண்டும். நேற்றும் இன்றும் நாளையும் நான் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன் என்று குறிப்பிட்டார்.
எனினும் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சிகள் இதில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். சபை முதல்வர் உறுதியாக நின்று இன்று கட்சி தலைவர் கூட்டத்தை நடத்த முடியாது என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் சபாநாயகரும் நாளை (இன்று ) கட்சி தலைவர் கூட்டத்திற்கு நேரம் கொடுப்பதாக கூறியதுடன் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க அங்கீகாரம் கொடுத்தார்.
சபாபீடம் நோக்கி நிரந்த விமல் வீரவன்ச
எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்ததுடன் சபாபீடம் முன்பாக வந்து சபை நகர்வுகளை குழப்ப நடவடிக்கை எடுத்தனர். விமல் வீரவன்ச எம்.பி முதலில் சபாபீடம் நோக்கி விரைந்தார் , பின்னர் மஹிந்தானந்த, வாசுதேவ, தினேஷ், ஷேஹான் எம்.பிகளும் பின்வரிசை எம்.பிகளும் சபை நடுவே சபாடீடம் முன்பாக வந்து குழப்ப ஆரம்பித்தனர், இதன்போது அழுத்தம் கொடுத்து எதனையு சாதிக்க முடியாது என சபாநாயகர் குறிப்பிட்டார். மறுபக்கம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனகளில் இருந்து எழுந்து தமது எதிர்ப்பைவும் வெளிபடுத்திக்கொண்டிருந்தனர்.
வெளியேறிய எதிர்க்கட்சி தலைவரும் சபை ஒத்திவைப்பும்
உடனே எதிர்க்கட்சி தலைவர் சபையை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்பம் சபையில் அதிகரித்ததை அடுத்து சபை முதல்வர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சபையை ஒத்திவைத்தார்.