‘மான்புக்கர் பரிசு’ : ஓமன் நாட்டு எழுத்தாளர் அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ என்ற நாவல் தேர்வானது.

234

இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ ஓமன் நாட்டு எழுத்தாளர் அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படும். இதில், கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் பக நாவல்களை வாசித்து, அவற்றில் சில நாவல்களை அரையிறுதிச் சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர். இந்த நாவல்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளாக இருந்தமை முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், பல மணிநேர பரிசீலனைக்கு பிறகு ஓமன் நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ (புனிதமான உடல்கள்) என்ற நாவல் இப்பரிசுக்கு தேர்வானது.

லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற மான்புக்கர் பரிசுடன் 50 ஆயிரம் பவுண்டுகளை ரொக்கப் பரிசும் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி-க்கு வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

ஓமன் நாட்டில் முன்னர் இருந்த பெண்ணடிமை முறையையும், அந்த காலக்கட்டத்தில் 3 சகோதரிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் திருமண பந்தம் போன்றவை உணர்வுப்பூர்வமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் ‘செலஸ்ட்டியல் பாடீஸ்’ கதைக்களம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக்கத்தில் பழங்கால அரபு கவிதைகள் தொடர்பான பட்டம் பெற்ற ஜோக்ஹா அல்ஹார்த்ஹி, மஸ்கட் நகரில் உள்ள சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். அரபு மொழியில் இதற்கு முன்னர் இரு சிறுகதை தொகுப்புகள், குழந்தைகளுக்கான நூல் மற்றும் 3 நாவல்களை இவர் இயற்றியுள்ளார்.

அத்தோடு, 40 வயதாகும் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி இந்தப் பரிசை பெறும் முதல் அராபிய எழுத்தாளர் என்பதும் இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பது முக்கிய அம்சமாகும் .

SHARE