ஹட்டன் தொடக்கம் கண்டிவரை பயணிக்கும் தனியார், அரச பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு

239

ஹட்டன் தொடக்கம் கண்டிவரை பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பஸ்கள் இன்று போக்குவரத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களை நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பஸ்கள் இன்று போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பை ஹட்டன் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் மையமாக வைத்து ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் அட்டன் தொடக்கம் கினிகத்தேனை, நாவலப்பிட்டி ஆகிய வழியாக கண்டிக்கு செல்லும் தனியார் போக்குவரத்து சபைக்கான பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் ஹட்டன் தொடக்கம் கண்டி வரையிலான பயணிக்கும் அனைத்து பயணிகளும் பஸ் சேவையின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அசௌகரியங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.

கடந்த காலங்களில் ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி வழியாக கண்டிக்கு செல்லும் அனைத்து பஸ் சேவைகளையும் நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்து நாவலப்பிட்டி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாவலப்பிட்டி நகரில் உள்ள பயணிகளை குறித்த அட்டன் பகுதியிலிருந்து செல்லும் பஸ்களுக்கு ஏற்றவிடாமல் செய்யும் ஒரு சூழ்ச்சியாக இந்த விடயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளுக்கு பரீட்சியம் இல்லாத இடத்தில் பஸ் நிறுத்தப்படுவதால் பயன் எதுவும் இல்லை என பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய மாகாணத்தின் தனியார் போக்குவரத்தின் ஹட்டன் கிளை காரியலயத்திற்கு பொறுப்பான அதிகாரி பி.ஜீ. காமினி தலைமையிலான குழு ஒன்று நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் பிரதான பஸ் நிலையங்களுக்கு உரித்தான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து சுமூகமான தீர்வு ஒன்று எட்டும்வரை இந்த போக்குவரத்து சேவையை தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

குறிப்பாக ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பு நிலையம் வழியாக கண்டிக்கு செல்லும் பஸ் அனைத்தும் நாவலப்பிட்டி பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கான சுமூகமான தீர்வையே எட்டப்பட வேண்டும் என ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் இவர்களுடன் இ.போ.ச பஸ் சாரதிகளும், அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE