தொலைத்தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள், வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (முஸ்லிம் காங்கிரஸ்) ஷாபி ரஹீமை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 7ஆம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்லையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது மக்கள் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட, முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்பாடலை இடையூறு செய்யக்கூடிய அதிசக்தி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்கள்(ஜேமர்) மற்றும் வாகனத்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றுடன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
அடுத்த நாள் புதன்கிழமை சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரால் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது நேற்று முன்தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்பட்போதே எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.