அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூடி மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அதற்கு ட்ரம்ப் நேற்று முன்தினம் புதன்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நான் மூடி மறைக்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என அவர் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
அமெரிக்கப் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் முகமாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே ட்ரம்பின் மேற்படி விமர்சனம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஜராவதற்கான ஆணைகளை அலட்சி யம் செய்தமை, ஆவணங்களை நிறுத்தி வைத்தமை மற்றும் தற்போதைய மற்றும் முன்னாள் ஆலோசகர்களின் சாட்சியங்களுக்கு முட்டுக்கட்டை போட்டமை என்பனவற்றின் மூலம் ட்ரம்ப் பாராளுமன்ற விசாரணைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் நான்ஸி பெலோஸி மற்றும் செனட் சபை தலைவர் ஆகியோருடன் குறுகிய நேர சந்திப்பை மேற்கொண்டமைக்கு ஒரு சில நிமிட நேரத்திலேயே தான் எதனையும் மூடி மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபடவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக கட்சி தலைவர்களுடனான அந்த சந்திப்பின் போது ட்ரம்ப் எவருட னும் கைகுலுக்கிக் கொள்ளவோ அன்றி அமர்ந்து உரையாடவோ முயற்சிக்கவில் லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு எதிரான விசாரணைகளை ஜனநாயகக் கட்சியினர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மட்டும் தெரிவித்து விட்டு எது தொடர்பிலும் கலந்துரையாடாது சந்திப்பு இடம்பெற்ற அறையை விட்டு ட்ரம்ப் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் போது ட்ரம்ப், “ஜனநாயகக் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் போலியான விசாரணைகளுக்கு நான் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். தனது அரசியல் எதிராளிகள் தனக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வர அணி திரண்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகக் கட்சியினர் தனக்கு எதிரான விசாரணைகளை கைவிடாத வரை தான் அவர்களுடன் அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.