மஸ்கெலியா கவரவில வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

325

மஸ்கெலியா கவரவில வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் இருவர் ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடந்த விதமும் தாக்குதலின் பின் கவரவில பகுதியைச் சேர்ந்த சிலரின் நடத்தை தொடர்பில் ஆசிரியர்களிடையே பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கவரவில ஆசிரியர்களும், பெற்றோர்களும் தமது வித்தியாலயத்தை சுற்றி வேலியமைத்தனர்.

ஆனால் இவர்களின் இப்பணி, பாடசாலையின் அயலில் வசிக்கும் ஒரு சிலரால் எதிர்க்கப்பட்டது.

அவர்களின் குற்றச்சாட்டு, மேற்படி வேலியானது தமது வீட்டுக்குரிய பாதையை மறைப்பதாக உள்ளது என்பதாகும்.

இத்தகைய குழப்பகரமான சூழ்நிலையிலேயே மேற்படி ஆசிரியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நடந்தது யாதெனில் தாக்குதலுக்கு மறுநாள் 300க்கும் அதிகமான தொழிலாளப் பெற்றோர்கள் இத் தாக்குதலுக்கு எதிராக ஒரு கண்டன போராட்டத்தை பாடசாலை வளாகத்தில் முன்னின்று நடத்த, தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சிலர்,  குறித்த பெற்றோரின் போராட்டத்தில் பங்குக்கொள்ளச்சென்ற சிலரை தடை செய்வதில் மிகுந்த கவனம் எடுத்திருக்கின்றது.

தாக்குதலை கண்டித்து மலையக ஆசிரியர் ஒன்றியம் இன்று  28.05.2019 இன்று, ஹட்டன் கல்வி வலய கோட்டம் 03 பாடசாலைகளில் கறுப்புப்பட்டி போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.

இன்றைய நாள் முழுவதும் கறுப்புப்பட்டி அணிந்து எமது எதிர்ப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத்திக் காட்டுவோம் எனும் தொனியில் மலையக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் சுமார் 35 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE