பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிசார் உள்ளிட்ட முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போலியான வதந்திகளை கண்டு அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவினரின் ஊடாக கொழும்பிலுள்ள இரு பிரபல பாடசாலைகள் தொடர்பில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதில் பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலை தொடர்பாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
அதற்கமைய அந்த பாடசாலையை அண்மித்த பகுதியில் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வேலிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலையின் களஞ்சிய சாலையினுள் கழிவு நீர் ஊற்றப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இது தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிசாரால் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், குருந்துவத்தையில் அமைந்துள்ள பாடசாலை ஆரம்பநேரத்திலும் முடிவடையும்நேரத்திலும அதன் முன்னால் பெருமளவிலான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலை கருத்தில் கொண்டு இவ்வாறு வாகனங்களை நிறுத்தவதை குறைத்துக்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.