செயற்கையாக மனித தோலை உருவாக்கிய கூகுள்

480
இணையதள ஜாம்பவனான கூகுள் நிறுவனம் செயற்கையாக மனித தோலை உருவாக்கியுள்ளது.இணையதளம் முதல் கைப்பேசி வரை பல தொழில்நுட்ப, மருத்துவ சேவைகளை வழங்கி வருவதில் கூகுள் நிறுவனம் முன்னனியில் உள்ளது.

உடல் ஆரோக்கியம் குறித்த தொழில்நுட்ப ஆராய்ச்சியில் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை கொண்டு பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக உடலில் உள்ள புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கும் வகையில் ’செயற்கை தோல்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து பேசிய கூகுள் நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சி துறையின் தலைமை நிர்வாகி Andrew Conrad, நானோ துகள்கள் அடங்கிய மாத்திரைகளை மாதம் இருமுறை உட்கொள்ள வேண்டும்.

மாத்திரையை விழுங்கிய உடன் அதிலுள்ள துகள்கள் பிரிந்து உடல் முழுவதும் பரவ தொடங்கும்.

உடலில் எந்த உறுப்பிலாவது புற்றுநோய் செல்கள் இருந்தால், அதனுடன் நானோ துகள்கள் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.

பின்பு, புற்றுநோய் செல்களின் தன்மை, வளர்ச்சி, வீரியம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியை தொடங்கும்.

இந்த பணி நடைபெறும்போது செயற்கையான தோல் போன்ற ஒரு பட்டையை கை மணிக்கட்டில் ஒட்ட வேண்டும்.

அந்த பட்டையில் உள்ள அதிநவீன சிறிய காந்தங்கள் புற்றுநோய் செல்களில் ஒட்டியுள்ள நானோ துகள்களை கவர்ந்திழுக்கும்.

இவ்வாறு இழுக்கப்பட்ட நானோ துகள்களை ஆராய்ந்தால், அதில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சையை தொடரலாம் என தெரிவித்துள்ளார்.

கூகுளின் இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என்றும், தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE