பௌத்த-கிறிஸ்தவ மிசனறி ஆதிக்கத்திலிருந்து தமிழினம் மீண்டெழுவது அவசியம்

405

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்க தமிழ் மொழியால் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இல்லையேல் ஆபத்து…!

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனம் அடக்கி ஒடுக்கப்படுவதன் மற்றுமொரு அத்தியாயம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கைத் திருநாடு பாரிய விளைவுகளைச் சந்திக்கக் காத்திருக்கின்றது. அத்துரலிய ரத்தின தேரர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து முஸ்லீம் அரசியல்வாதிகளை தமது பதவிகளிலிருந்து நீக்குவதற்கும், அவர்களுக்கு எதிராக விசாரனைகளை முன்னெடுப்பதற்கும் தியாகி திலீபன் அவர்களின் அஹிம்சை வழியில் இத்தேரர் போராட்டத்தை முன்னெடுத்த தாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் எனலாம். காரணம் தமிழ் மொழியால் ஒன்றுபட்டவர்கள் முஸ்லீம்கள். இத்தகையதொரு நிலையில் தமிழ் மொழியால் ஒன்றுபட்ட இனங்களுக்கு இடையே பிரிவுகளை ஏற்படுத்தி தற்பொழுது அதில் குளிர் காய்கின்றார்கள். வடகிழக்கு இணைந்து தமிழர் தாயகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகவும், அஹிம்சை ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இன்று அராஜக நடவடிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்த ரத்தின தேரர் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

இவர்களுடன் ஒத்து ஊதுகின்ற ஊடகங்களும் விளக்கமின்றி புரிந்துகொள்ளாமல் செய்திகளை வெளியிடுகின்றனர். பௌத்தபிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் வாதிகள், ஒரு சில தமிழ் மக்களைப் பார்க்கின்ற பொழுது இவர்கள் தமிழ்த் தாய்க்குத் தான் பிறந்தார்களா? என்கின்ற சந்தேகம் எழுப்பப்படுகின்றது. கோவணம் கட்டினாலும் கொள்கை மாறக்கூடாது என்பது தமிழனின் பழமொழி. இவ்வாறான நிலையில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிங்களப் பேரினவாத அரசு இந்நாட்டில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் என்பது சர்வதேச நாடுகளின் உதவிகளோடு செயற்படுத்தப்படுகின்றது. இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை உருவாக்கிய நாடுகளில் முதன்மையாக அமெரிக்கா திகழ்கின்றது. இவர்கள் உலகப் பயங்கரவாதிகள். சர்வாதிகாரத்தை தமது கையில் வைத்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த முப்பது ஆண்டுகளில் எந்தவொரு தீவிரவாத சக்திகளும் இந் நாட்டுக்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த காலங்களில் இந்தியாவினுடைய றோ இந் நாட்டுக்குள் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புடவைகளை விற்றுத்திரிந்தார்கள். ஆனால் தமிழீழப் பகுதிகளுக்குள் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆகவே சிங்களப் பேரினவாத அரசு சர்வதேச நாடுகளின் உதவியோடு வடகிழக்கு இணைந்தது தமிழர் தாயகம் என கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் போராடிய தமிழினத்தின் காவலர்களாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். விடுதலைப் புலிகளின் அரசியல் எச்சங்களான இன்று பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் கடந்து வந்த பாதையினை மறந்து செயற்படுகின்றார்கள்.

சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறைகள் இந் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றது. அந்த வன்முறையானது மத ரீதியாகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த வளைவு உடைக்கப்பட்டதன் காரணமாக கிறிஸ்தவ-இந்து மதக் கலவரத்தை மிசனறிகள் தூண்டிவிடப் பார்த்தன. ஆனாலும் தெய்வாதீனமாக திடீரென இலங்கையில் ஏற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலினால் இப் பிரச்சினை திசை திருப்பப்பட்டது.

பௌத்த நாடு எனக் கூறிக் கொள்கின்ற சிங்களவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்துக்களில் இருந்தே பௌத்தம் உருவாக்கப்பட்டது. இவர்கள் வணங்கும் புத்த பகவானுடைய பெயர் சித்தார்த்தன் என்பதே ஆகும். இவர் ஒரு தமிழர். பண்டாரவோ, பண்டாவோ இல்லை. ஆகவே இது ஒரு இந்து நாடு. அதற்காக தமிழினம் இந்த நாட்டைக் கேட்கவில்லை. சிங்கள மக்கள் எவ்வாறு தென்னிலங்கையில் வாழ்கின்றார்களோ அது போன்று ஒரு சமத்துவம் வடகிழக்கில் பேணப்படவேண்டும் என்பதேயாகும். முப்பது ஆண்டு கால பாரிய யுத்த வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு போதும் சிங்கள மக்களைக் கொலைசெய்யவில்லை. இராணுவத்தினருடன் தாக்குதல் நடைபெறுகின்ற பொழுது அதில் அகப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்களே ஒழிய விகாரைகளில் அல்லது சிங்கள மக்கள் கூடி இருக்கின்ற இடங்களில் அவர்கள் குண்டுத் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் இந்த பௌத்த பேரினவாதிகள் மக்கள் கூடியிருந்த இடங்களிலும் தேவாலயங்களிலம் மிளேச்சத்தனமான தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள்.

தற்பொழுது இலங்கையில் பௌத்த தீவிரவாதமும், மிசனறி தீவிரவாதமும் ஒன்றாகத் தலைதூக்கியுள்ளது. இதனை மிகவிரைவில் தமிழ் இனம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையேல் வடகிழக்கில் தமிழ் இனம் வாழ்ந்த வரலாறே இல்லாது அழிக்கப்படும். கிறிஸ்தவ நாடாக இந்த நாடு உருவாக்கப்படுவதை மேற்கத்தேய நாடுகள் விரும்புகின்றன. தேசியத் தலைவர் பிரபாகரனுடைய போராட்டத்தை இந்த மிசனறிகள் தான் சீர்குழைத்தார்கள். ஆகவே இந்தியாவில் ஒரு சு.ளு.ளு அமைப்பு இருப்பது போன்று இலங்கைத் தமிழ் பேசும் மக்களை மையப்படுத்தி ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதென்பது அவசியப்படுகின்றது. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தொடர்பில் இனி தமிழினத்திற்குக் குரல் கொடுப்பதற்கு எவரும் இல்லை என்று தான் கூறவேண்டும். அனைவரும் யுத்தத்திற்குப் பின்னர் தமது சுகபோக வாழ்க்கைகளை அனுபவித்து வருகின்றார்கள். போரின் வடுக்களை உணராதவர்களாக வலம் வருகின்றார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுடைய இயல்பு வாழ்க்கை இன்னமும் சரியான நிலைக்குத் திரும்பவில்லை. அதற்கிடையில் இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகளால் யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் சம்பவங்களில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

முஸ்லீம் தரப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஊது குழலாகவே செயற்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தன்மானம் உள்ள ஒரு முஸ்லீம்களாய், தமிழ் பேசும் முஸ்லீம்களாய் இந் நாட்டில் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் அனைவரும் தமிழ் மொழியால் ஒன்றுபடவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அதனை ஒரு சவாலாகக் கொண்டு எமது போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். வெறுமனே ஆயுதப் போராட்டத்தினால் மட்டுமல்ல அகிம்சைப் போராட்டத்தினாலும் பல விடயங்களைச் சாதிக்கமுடியும். இதனை மகாத்மா காந்தி, தியாகி திலீபன் போன்றோர் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர். முஸ்லீம் அரசியல் வாதிகளும் முஸ்லீம் மக்களும் இனியாவது சிங்களக் கடும்போக்குவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்று இறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் நானூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் போராட்டக் களத்தில் இருந்தார்கள். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்காக மடிந்தார்கள். அவர்களின் இலட்சியமும் தமிழர் தாயகமே. தளபதி கிட்டு உட்பட பன்னிரெண்டு வேங்கைகள் இந்தியாவிற்கு சமாதானத்திற்காக கடல்புறாவில் சென்றவேளை இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட முற்பட்டபோது கப்பலை வெடிக்கவைத்து தம்மைத் தாமே ஆகுதி ஆக்கிக் கொண்டார்கள். அதில் அப்துல்லாவும் ஒருவர். இந்த வேங்கைகளின் இலட்சியக் கனவு என்னவாக இருந்தது. சர்வதேச இரகசியங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த தொடர்பாடல்கள் எதுவுமே எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக ஒரு இலட்சியத்தின் வழியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள் இந்தப் போராளிகள்.

2009ம் ஆண்டு காலப் பகுதியிலும் போராட்டத்திற்கு எத்தனையோ முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். போராளிகளாகப் பிடிபட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றையும் ஒரு கனம் நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே முஸ்லீம் தரப்பினர் இவ்விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஒற்றுமையே பலமென சர்வதேச உள்ளூர் ரீதியாக எடுத்துக் காட்டவேண்டும். எமது தமிழ் பிரதேசங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. இவ்வாறான பாதுகாப்பை ஏற்படுத்துகின்ற போது தான் எமது இனத்தின் இருப்பை நாம் தக்கவைத்துக் கொள்ள முடியும். தொடர்ந்தும் எம் தமிழினம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அரசாங்கம் தமது தேவைக்காக தமிழ் அரசியல் தலைமைகளின் கால்களில் விழவும் தயாராக இருக்கின்றார்கள். இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை என்பதில் இருந்து இன்று அரசாங்கத்தைக் காப்பாற்றியதும் தமிழ்த் தலைமைகளே. தொடர்ந்தும் தவறுகளை நாம் இழைக்கக்கூடாது. நாம் மொழியால் ஒன்றிணையவேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே பௌத்த இனவாதிகளிடத்திலிருந்தும் கிறிஸ்தவ மிசனறி ஆதிக்கத்திலிருந்தும் தமிழினம் மீண்டெழ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனையே முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்த துறவிகளினால் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. அதுமட்டுமன்றி கடந்த முப்பது ஆண்டுகாலமாக பல இலட்சம் மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்த சிங்களக் காடையர்களின் செயற்பாடுகளுக்கு மிக விரைவில் முடிவுகட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இனியாவது தமிழ் பேசும் மக்களாகிய நாம் சிந்திந்துச் செயற்படவேண்டும் என்பது தலையாயக் கடமையாகும்.

  • நெற்றிப்பொறியன்
SHARE