சிறிசேன – விக்கிரமசிங்க தலைமைத்துவம் படுமோசமாகத் தோல்வி கண்டிருக்கிறது என்பதே எனது ஆய்வின் முடிவாக இருக்கிறது

361

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத முறையில் ஜனாதிபதி சிறிசேன செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு படாதபாடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியுமென்ற நினைப்பில் அவர் கானல்நீரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அகங்காரம், நிர்வாகத் திறமையின்மை, ஆட்சி முறையின் முக்கியமான பிரச்சினைகளை அற்பமாகக் கருதுகின்ற சிறுபிள்ளைத்தனமான போக்கு ஆகியவற்றை பிரதமர் விக்கிரமசிங்கவிடம் காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, கடந்த வருடம் ஜனவரியில் ராஜபக்‌ஷ அரசாங்கத்தை இலங்கை வாக்காளர்கள் வீழ்த்திய பிறகு, இப்போது ஊழல்தனமும் எதேச்சாதிகாரப் போக்கும் கொண்ட ராஜபக்‌ஷ சகோதரர்கள் நாட்டின் அரசியல் பாதையையும் அரசியல் விவாதத்தின் போக்கையும் மீண்டும் நிர்ணயிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் மெய்யானவையாக வந்துகொண்டிருக்கின்றன. அதனிடையே சுமார் இரு வருடங்கள் பதவியில் இருக்கின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் இருண்ட பக்கம் படிப்படியாக அமைப்பு முறைக்கு உட்படுத்தப்படுவதையும் அதேவேளை பெருமளவுக்கு அம்பலமாக்கப்பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது. பெரும் மனச்சஞ்சலத்துடன் இலங்கையின் தற்போதைய அரசியலை நோக்கவேண்டியிருக்கிறது. கவலைதருகின்ற நான்கு போக்குகளை இந்த அரசியலில் நான் காண்கிறேன்.

முதலாவதாக –

அரசாங்கம் அதற்கு ஆதரவான வாக்காளர்களிடமிருந்து கட்டுப்படுத்த முடியாத வகையில் தனிமைப்பட்டுக் கொண்டு போகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அரசியல் சீர்த்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சிக்கான ஆணையை வாக்காளர்கள் இன்றைய அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தார்கள். அதன் இரு தலைவர்களும் அமைச்சர்களும் (அவர்களின் உண்மையான எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை) அந்த ஆணையைத் தொடர்ந்து அலட்சியம் செய்துகொண்டு போவதால் மக்களிடமிருந்து தனிமைப்படும் போக்கு துரிதப்படுத்தப்படுகின்றது. அதன் சொந்த வாக்குறுதிகள் மீதான அரசாங்கத்தின் பற்றுருதியில் அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கின்ற மெத்தனமான போக்கை இனிமேலும் மறைக்க முடியாது.

இரண்டாவதாக –

அரசாங்கம் அரசியல் திசைமார்க்கம் இல்லாததாக இருக்கிறது. அரசியல் வழிகாட்டலை வழங்குவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவரும் கிரமமாக நிகழ்த்துகின்ற உரைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, ஆட்சியதிகாரத்தில் தாங்கள் இழைக்கின்ற தவறுகளையும் அதன் விளைவான தோல்விகளையும் புரிந்துகொள்வதற்கான அரசியல் மற்றும் அறிவு ஆற்றல் கூட இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சுயவிமர்சனத்தைச் செய்வதில் தங்களுக்குள்ள இயலாமை குறித்து இவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறார்கள் போலவும் தெரிகிறது.

மூன்றாவதாக –

கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கம் பிரகடனம் செய்த முக்கியமான கொள்கைக் கடப்பாடுகளை மீளவடிவமைப்பதிலும் மலினப்படுத்துவதிலும் பாதுகாப்புத் துறை பிரதான பாத்திரமொன்றைச் சந்தடியில்லாமல் வகிக்கின்ற போக்கு மீளத் தலைகாட்டியிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் இலங்கையில் முன்னர் நிலவிய ஏறுமாறான சிவில் – இராணுவ உறவுகளை ஜனநாயக அமைதி நிலைக்கு அனுகூலமான முறையில் மீளச்சீரமைத்தது என்று சொன்னால், இப்போது அந்த முக்கியமான நல்லாட்சிப் போக்கு ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பெருமளவுக்கு தடுக்கப்படுகிறது போலத் தோன்றுகிறது.

நான்காவதாக –

அரசுக்குள்ளும் சமுதாயத்துக்குள்ளும் மீள அணிதிரட்டப்படுகின்ற சிங்கள தேசியவாத சக்திகளின் ஆதரவுடன் ராஜபக்‌ஷ சகோதரர்கள் அரசாங்கத்தை ஒரு குழப்பநிலைக்கும் முடக்கநிலைக்கும் தள்ளிவிடக்கூடிய சாத்தியம் அதிகரித்திருக்கின்றது. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து முறியடிப்பதற்கான எந்தவொரு திறமையோ, ஏன் ஆர்வமோ கூட நல்லாட்சி அரசாங்கத் தலைமைத்துவத்தினால் வெளிக்காட்டப்படுவதாக இல்லை.

இத்தகையதொரு பின்புலத்தில் இலங்கையில் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்ற அரசியல் நெருக்கடியை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதற்கு பதில்தேட, உதவக்கூடிய இரு ஆய்வுப் பொருள்கள் குறித்து ஆராயவிரும்புகின்றேன்.

வழமை நிலையாக்கல்

இலங்கையின் சமகால அரசியல் மாற்றத்தின் மிகவும் முக்கியமான ஒரு தறுவாயிலேயே 2015 ஆட்சிமாற்றம் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணி அரசாங்கம் இலங்கையின் எதேச்சாதிகார அரசியலை புதியதொரு கட்டத்துக்கு அதாவது மென்மையான எதேச்சாதிகாத்துக்கு எடுத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த தருணம் அது. பலவீனப்பட்டதொரு ஜனநாயகக் கட்டமைப்புக்குள் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதையே மென்மையான எதேச்சாதிகாரம் என்கிறோம். அது அரசின் ஜனநாயக அத்திபாரங்களைத் தூக்கியெறியாமல் அரசாங்கத் தலைவர்களினாலும் அதிகாரிகளினாலும் முன்னெடுக்கப்படுகின்ற எதேச்சாதிகார நடத்தையுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால் அதை அரசாங்க எதேச்சாதிகாரம் என்று அழைக்கலாம்.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறானதாக வன்மையான எதேச்சாதிகாரம் அமைந்திருக்கிறது. அரசின் எதேச்சாதிகார உருமாறுபாட்டுடனேயே அது நிகழ்கிறது. மென்மையான எதேச்சாதிகார அரசாங்கங்களை ஜனநாயக ரீதியாக, தேர்தல் வழிமுறைகளின் ஊடாக அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். வன்மையான எதேச்சாதிகார அரசை மாற்றுவதற்கு பெரும் அரசியல் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். அதை வன்முறையின் ஊடாகவே செய்யவேண்டியிருக்கும். பெரும் இரத்தக்களரியும் சிலவேளைகளில் அரசியல் புரட்சியும் இடம்பெறக்கூடும். எமது நாட்டில் வன்மையான எதேச்சாதிகாரத்தை நோக்கிய விதிவசமான அரசியல் உருமாறுதலைத் தடுத்துநிறுத்தியமைக்காக சகல ஜனநாயக சக்திகளையும் அரசியல் முதிர்ச்சிகொண்ட இலங்கை வாக்காளர்களையும் பாராட்டியேயாக வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷ 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது பதவிக் காலத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருப்பாரேயானால், அவர் இலங்கையை தெற்காசியாவின் துருக்கியாகவும் தன்னை இன்னொரு தஜிப் எர்டோகானாகவும் (தற்போதைய துருக்கி ஜனாதிபதி) மாற்றியிருப்பார். அத்தகையதொரு ஆட்சியாளரின் கீழான அரசாங்கத்தை தேர்தல்களினால் அல்ல நீண்ட வன்முறைப் போராட்டத்தினாலேயே மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

கடந்த வருடம் ஜனவரிக்குப் பிறகு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களின் முன்னாலிருந்து வந்த பணி அவர்களை அதிகாரத்துக்குக் கொண்டுவந்து மென்மையானதோ அல்லது வன்மையானதோ எந்தவிதமான எதேச்சாதிகாரமும் மீண்டும் ஏற்படாமல் தடுத்துநிறுத்திய அரசியல் மாற்றத்தை நிறுவனமயப்படுத்த வேண்டியதாகவே இருந்தது. இது விடயத்தில் சிறிசேன – விக்கிரமசிங்க தலைமைத்துவம் படுமோசமாகத் தோல்வி கண்டிருக்கிறது என்பதே எனது ஆய்வின் முடிவாக இருக்கிறது. தயக்கத்துடன் என்றாலும் தங்களது தோல்விகளை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் அவர்கள், இப்போது ராஜபக்‌ஷ சக்திகளுடன் நேர்மையற்ற கூட்டணிகளைச் செய்துகொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் போலத் தெரிகிறது. படுமோசமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளையும் நீதித்துறைச் செயன்முறைகளையும் மலினப்படுத்தும் வகையில் அரசாங்கத்தலைவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர வேறு நம்பகமான விளக்கம் ஏதும் இதற்குக் கிடையாது. அரசாங்கத்தில் இருக்கின்ற இரு அதிகார மையங்களும் ஒன்றை மற்றது ராஜபக்‌ஷ முகாமுடன் பேரம் பேசும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றபோது உண்மை நிலைவரம் சுலபமாகவே தெரிகிறது. பேரம் பேசும் அரசியலில் ஈடுபடுகின்ற விடயத்தில் இரு அதிகார மையங்களுமே குற்றப் பொறுப்புடையவையாகும்.

மிகவும் அண்மைய உதாரணமாக, பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட விவகாரமொன்றைக் கூறமுடியும். ராஜபக்‌ஷ முகாமுடன் தொடர்புடைய ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார். அவர் கைதுசெய்யப்படமாட்டார் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு ஊடகங்களின் தொலைக்காட்சி கமராக்களுக்கு முன்பாக நின்று கொண்டு பொலிஸ்மா அதிபர் உறுதிமொழி வழங்கினார். அவரின் கோமாளித்தனத்தையும் அறவே ஏற்றுக்கொள்ள முடியாத அமைச்சரின் நடத்தையையும் காண்பிக்கும் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன. நல்லாட்சி அரசாங்கம் எந்தளவு தூரத்துக்கு அரசியல், தார்மீக மற்றும் நிறுவன ரீதியான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை இது பிரகாசமாக அம்பலப்படுத்தியருக்கிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் வேண்டியவர். பிரதமரின் உள்வட்டத்தின் ஒரு உறுப்பினர். இந்த அமைச்சரைப் பொறுத்தவரை நல்லாட்சியை விடவும் ராஜபக்‌ஷ முகாமுடன் தொடர்புடையவர்கள் கூடுதல் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் போலும்.

சீர்த்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் ஒன்று மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறும்போது அது ‘ஆட்சி வழமைநிலையாக்கல்’ என்று குறிப்பிடப்படுகின்ற ஒரு போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். சீர்த்திருத்த அரசாங்கமொன்று ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நெறிமுறையான ஆட்சியையும் தருவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகிச்சென்று முன்னைய ஆட்சியைப்போன்று மாறும்போது அது ‘வழமைநிலைக்கு’ வருகிறது. முன்னைய ஆட்சிக்கும் புதிய ஆட்சிக்கும் இடையிலான பண்பு வேறுபாடு தேய்ந்து அழிக்கப்படுகின்ற செயன்முறையே ‘ஆட்சி வழமைநிலையாக்கல்’ எனப்படுகிறது. ஏனென்றால், அரசியல் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் மனித உரிமை மீறல்களும் விதிவிலக்கானவையாக அன்றி வழக்கமானவையாகி விடுகின்றன. இலங்கை மாத்திரம் இத்தகைய இடர்பாட்டு நிலைக்குள்ளாகியிருக்கிறது என்றில்லை. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா என்று பல ஆசிய நாடுகளில் அண்மைய வருடங்களில் இது நடந்திருக்கிறது. இந்த ‘வழமை நிலையாக்கல்’ பாதையில் பர்மாவும் மெதுமெதுவாக செல்லத்தொடங்கியிருக்கின்றது என்றே தெரிகிறது. இந்தத் தோற்றப்பாடு குறித்து தத்துவ ரீதியான ஆழமான ஆய்வொன்றை இன்னொரு கட்டுரையில்தான் செய்ய முடியும்.

ஜனநாயக பாதுகாப்பு அரண்கள்

கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவந்த ஜனநாயக – சீர்த்திருத்த சக்திகளுக்கும் அவற்றின் ஆதரவு வாக்காளர்களுக்கும் இருக்கக்கூடிய தெரிவுகள் எவை? இந்தக் கேள்விக்கான முதல் பதில் மிகவும் எளிதானது. இப்போது அதன் இருண்ட பக்கத்தை மாத்திரமே காட்டக்கூடியதாக இருக்கின்ற அரசாங்கமொன்று குறித்து நேர்மறையான எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கும் காரியங்களுக்காகவும் செய்யாதிருக்கும் காரியங்களுக்காகவும் கடுமையான கண்டன விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதனிடமிருந்து எந்தவிதமான பச்சாதாப உணர்வும் வெளிப்படுவதாகவும் இல்லை. இந்தியாவில் கூறப்படுவதைப் போன்று நல்லாட்சி அரசாங்கம் அதன் நெறிமுறை மற்றும் நியாயப்பாட்டை பொறுத்தவரை இப்போது இலக்குமணக் கோட்டைத் தாண்டிவிட்டது. தன்னைச் சீர்த்திருத்திக்கொள்வதற்கான திறமையோ அல்லது துணிவாற்றலோ அல்லது அறிவுபூர்வமான நிலையோ அதனிடம் இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி செய்வதைப் போன்று அரசாங்கத் தலைவர்கள் பொது விமர்சனங்களை அற்பமாகக் கருதி நிராகரிக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குறியதாகும். அதேவேளை, தங்களது குறுகிய நோக்குடனான தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுகூலமாக அமையுமென்றால், சில விமர்சனங்களை அரசாங்கத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனநாயகத்தின் பின்னடைவே கிரமமானதும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றதுமான யதார்த்த நிலையாக அரசியலில் இருக்கிறதென்றால், நேர்மறையான அரசியல் மாற்றத்தில் நம்பிக்கையை வைப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எனது பதில் ‘ஆம்’ என்பதேயாகும். ஜனநாயகப் பாதுகாப்பு அரண்களை மீளக்கட்டியெழுப்புவதற்கும் மீள வலுப்படுத்துவதற்குமான திறமையையும் துணிவாற்றலையும் எமது சமுதாயம் கொண்டிருக்கும் வரை நேர்மறையான அரசியல் மாற்றத்தில் நம்பிக்கை வைப்பதில் பயன் உண்டு என்பதே எனது அபிப்பிராயம். இலங்கையில் தற்போது காணப்படக்கூடியதாக இருக்கின்ற விரக்தியான ஒரு மனநிலைக்கு மத்தியிலும் கூட மிகவும் சாதகமான சமிக்ஞை ஒன்றை நான் அவதானித்திருக்கிறேன். அதாவது, அரசாங்கத்தின் தவறான நடத்தைகளுக்கு சமூகத்திடமிருந்து எதிர்ப்புக் கிளம்பிக்கொண்டேயிருக்கிறது. அந்த நடத்தைகள் இடையறாது அம்பலப்படுத்தப்படுகின்றன. நல்லாட்சி பரீட்சார்த்தத்தின் தோல்விகளை ராஜபக்‌ஷ முகாம் அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கக்கூடிய முறையில் சில சமூக ஊடகங்களும் மாற்றுப் பத்திரிகைகளும் தற்போதைய அரசாங்கம் மீதான விமர்சனங்களை தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக சீர்த்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான ஆற்றல் ராஜபக்‌ஷ முகாமிடம் இல்லை. இவ்வாறு அவர்கள் செய்யக்கூடிய சூழ்நிலை தோன்றக்கூடிய அறிகுறி எதையும் கூட காண முடியவில்லை. இது ஒரு வகையில் விசித்திரமான நல்ல பக்கமாகும். அதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்கான தங்களது முயற்சியில் ராஜபக்‌ஷ குடும்பத்தவர்கள் மக்களின் ஜனநாயக அபிலாசைகளைப் பயன்படுத்துவதாக இல்லை. அவ்வாறு அவர்களால் செய்யவும் முடியாது.

இலங்கைச் சமூகத்தின் ஜனநாயகப் பாதுகாப்பு அரண்களை மீளக்கட்டியெழுப்பி மீள வலுப்படுத்தி நிலைபேறானதாக்க வேண்டும். இலங்கை அரசியலில் நல்லாட்சி அரசாங்கத்துக்குப் பின்னரான கட்டமொன்றில் நேர்மறையானதும் கூடுதலான அளவுக்கு ஆக்கபூர்வமானதுமான மாற்றங்களைக் காண்பதற்கு இதுவே எமக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த தந்திரோபாயமாகும். அரசாங்கங்கள் வரும், போகும். ஆனால், நாம் பாடுபட்டுப் போராடிப் பெறக்கூடிய பெறுமதியுடைய அரசியல் இலக்குகளை பாதுகாப்பதற்காக ஜனநாயகப் பாதுகாப்பு அரண்கள் உறுதியானவையாகத் தொடர்ந்து இருக்கவேண்டும்.

 

SHARE