( இரா.துரைரத்தினம் )
எதிர்பார்க்கப்பட்டது போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கிறது.
நடப்பாண்டுக்கான, வரவு- செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்திருக்கிறது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ரணில் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து விடாது காப்பாற்றுவதில் பெரும் பாடுபடுகிறது.
ரணில் தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றுவதில் இருக்கும் அக்கறையின் ஒரு வீதத்தை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களில் காட்டவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.
முஸ்லீம் அரசியல்வாதிகள் காலம் காலமாக ஆளும் கட்சியிலேயே இருந்து வருகின்றனர். முஸ்லீம்களுக்கென்று தனியான அரசியல் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1994ஆம் ஆண்டிலிருந்து முஸ்லீம் கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
முஸ்லீம்கள் கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவை வழங்கி பலம் மிக்க அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் அதிகாரம் மிக்கவர்களாக திகழ்வதுடன் தமது பிரதேசங்களை பிரமாண்டமான வகையில் அபிவிருத்தியும் செய்திருக்கிறார்கள்.
அபிவிருத்தி வேண்டாம், தமிழீழம் மட்டுமே வேண்டும் என ஆயுதப்போராட்டம் நடத்திய காலத்தில் தமிழர் பிரதேசம் அழிவை சந்தித்த வேளையில் வடக்கு கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்தன.
முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்த சமகாலத்தில் தமது இனத்தின் உரிமைகளையும் உறுதி செய்து கொண்டார்கள்.
தமிழர்கள் அழிந்து கொண்டிருக்க முஸ்லீம்கள் தங்கள் இனத்தை பெருக்கி கொண்டார்கள். அது அவர்களின் தவறல்ல. தங்கள் இனத்தின் இருப்பையும் பலத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் பாவித்த ஆயுதம்.
அதன் விளைவு கிழக்கு மாகாணத்தில் தமிழர் சனத்தொகை 6 வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. முஸ்லீம்களின் சனத்தொகை 5வீதத்தால் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் 1963ஆம் ஆண்டு தமிழர்கள் 45வீதமாக இருந்தார்கள். முஸ்லீம்கள் 34வீதமாகவும் சிங்களவர்கள் 20வீதமாகவும் இருந்தார்கள்.
2018ஆம் ஆண்டில் கிழக்கில் தமிழர்களின் சனத்தொகை வீதம் 38வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. முஸ்லீம்களின் சனத்தொகை வீதம் 40வீதமாக அதிகரித்திருக்கிறது. சிங்களவர்களின் சனத்தொகை 22வீதமாக அதிகரித்திருக்கிறது.
கிழக்கில் இன்று பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லீம்கள் தான் என்பது கிழக்கு மாகாணம் தென்தமிழீழம் என கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்கு தெரியவாய்ப்பில்லைத்தான்.
யுத்தத்தை ஆரம்பித்த தமிழர்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டதை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை.
இன்று கிழக்கில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமது இனவிகிதாசாரத்தை அதிகரித்த அதேவேளை தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தமக்கான உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.
ஆனால் தமிழர்கள் அபிவிருத்தியும் இல்லை, உரிமையும் இல்லை என்ற கையறு நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்தார்கள்.
விடுதலைப்புலிகள் 2009ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் 2010ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே ஏற்றுக்கொண்டார்கள்.
வடக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் ஏகோபித்த அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வடக்கின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை அரியாசனத்தில் அமர்த்தினர்.
வடக்கு மாகாணசபை பதவி ஏற்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கும் சம்பந்தனுக்கும் முடிசூடி மகிழ்ந்தனர் தமிழர்கள்.
அந்த இருவரும் தமிழர்களுக்கு செய்தது வேறு எதுவும் இல்லை. தங்கள் சுயஇலாபத்திற்காக தமிழர்களின் தலையில் தீ வைத்ததை தவிர விக்னேஸ்வரனும் சம்பந்தனும் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
சுன்னாகத்தில் இயங்கிய நொதேர்ண் பவர் தனியார் நிறுவனம் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஒயிலை கலந்து மக்களின் குடிநீரில் நஞ்சை கலந்தார்கள். இதனால் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரில் நஞ்சு கலந்தது மட்டுமன்றி அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் குடிநீர் மாசடைந்தது.
இந்த விபரம் வெளிவந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரின் கையாளாக செயற்படும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசனும் குற்றச்செயலில் ஈடுபட்ட நொதேர்ண் பவர் நிறுவனத்தை காப்பாற்ற பாடுபட்டனர். போலியான விசாரணை குழுவை நியமித்து நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் மனித நேயம் மிக்க சிங்கள புத்திஜீவிகளால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் போன்ற போலிகளின் முகத்திரையை கிழித்து எறிந்திருக்கிறது.
நொதேர்ண் பவர் நிறுவனம் அப்பகுதியில் கழிவு ஒயிலை நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பதை உறுதி செய்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நிறுவனம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
வடமாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடன் வடக்கில் தமிழர் அரசு மலர்ந்தது என பத்திரிகை ஒன்று தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. அந்த தமிழர் அரசுக்கு தலைமை தாங்கிய விக்னேஸ்வரன் செய்த ஒரே ஒரு சாதனை வலிகாமம் பிரதேசத்தில் மக்களின் குடிநீரில் கழிவு ஒயிலை கலந்து நஞ்சைக்கலப்பதற்கு துணை போனது மட்டும் தான். இதை தவிர வடமாகாணசபை ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை.
விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தனும் தனது சுயநல சுகபோக வாழ்வுக்காக தமிழர்களை நடுக்கடலில் தள்ளி அழித்து விடவே துடித்துக்கொண்டிருக்கிறார். அவர் இறப்பதற்கு முதல் தமிழர்களை முக்கியமாக கிழக்கில் உள்ள தமிழர்களை அழித்து விடவேண்டும் என்பதே அவரின் இலக்காகும்.
தமிழர்கள் தமிழீழம் கேட்டார்கள் – கிடைக்கவில்லை.
சுயாட்சி கேட்டார்கள் – கிடைக்கவில்லை.
மாகாணசபைகளுக்கு அதிகாரத்தை கேட்டார்கள் – கிடைக்கவில்லை.
பிரதேச செயலகம் ஒன்றையாவது தரமுயர்த்தி தருமாறு கோரினார்கள்- அதுவும் கிடைக்கவில்லை.
தமிழ் மக்கள் இரத்தம் சிந்தி போராடிய போராட்டத்திற்கும் இழப்புக்களுக்கும் கிடைத்தது ஒன்று மட்டும் தான்.
சம்பந்தனுக்கு கொழும்பில் பாரிய பங்களாவும் வாகனங்களும் சொகுசு வாழ்க்கையும் மட்டும் தான்.
சம்பந்தனை பொறுத்தவரை இலங்கையில் தமிழினத்தை அழித்தாவது தான் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இலக்கு. அந்த இலக்கை அவர் இன்று அடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் 30 வருடத்திற்கு முதல் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகத்தினை செயற்பட விடாது தடுத்துக்கொண்டிருக்கும் நாசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளை தடுத்து அப்பிரதேச மக்களின் ஆகக்குறைந்த அடிப்படை உரிமையை நிலைநாட்டி தருமாறு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரினார்கள்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்பது கல்முனை தமிழ் மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கையும் ஆகும்.
தமிழர்களின் உரிமையை வழங்க கூடாது. அவர்களின் பிரதேசம் அபிவிருத்தி அடையக் கூடாது என முஸ்லீம் அரசியல்வாதிகள் கங்கணம் கட்டிச்செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். இதனை கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் உணர்வான்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இருந்த ஓட்டமாவடி முஸ்லீம் பிரதேசத்தில் தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட்ட போது அதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை. செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து சில கிராம சேவகர் பிரிவை பிரித்து தனியான ஏறாவூர் பிரதேச செயலகம் அமைக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்க்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தொடர்பு அற்ற காத்தான்குடி, ஏறாவூர் ஒட்டமாவடி பிரதேசங்களை இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் என முஸ்லீம்களுக்கு என தனியான கல்வி வலயம் உருவாக்கப்பட்ட போதும் தமிழர்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் எதிர்த்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக அப்பிரதேச தமிழ் மக்கள் தங்களுக்கான பிரதேச செயலகம் வேண்டும் என போராடி வருகிறார்கள்.
கல்முனை முஸ்லீம் பிரிவு பிரதேச செயலகமும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகமும் 1989ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது.
கல்முனை முஸ்லீம் பிரிவு பிரதேச செயலகம் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இயங்கி வருகின்ற போதிலும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். அந்த தடைகளை உடைத்தெறிந்து அப்பிரதேச தமிழ் மக்களின் உரிமை ஒன்றை நிலை நாட்ட வக்கற்றவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.
கல்முனையில் தமிழர்களுக்கென்று பிரதேச செயலகம் அமைக்கப்படுவதை தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியிருக்கிறோம் என முஸ்லீம் அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து தமது வாக்கு வங்கியை அதிகரிக்கப்பார்க்கின்றனர். அந்த அளவிற்கு கேவலமான நிலையில் முஸ்லீம்கள் மத்தியில் இனவாதம் கிழக்கில் வளர்ந்திருக்கிறது.
13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை திட்டத்தின் கீழ் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் தரமுயர்த்தப்பட்டு நிர்வாகம் பரவலாக்கப்பட்டு பிரதேச செயலகங்களாக இயங்க ஆரம்பித்தன.
அம்பாறை மாவட்டத்தில் 1989ல் 20 பிரதேச செயலக பிரிவுகள் அமைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவாகும். 1993ல் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் இன்று வரை அப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாது காணி நிதி அதிகாரங்கள் கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ளது.
1993ல் இருந்து 2015 வரை தமிழ் அரசியல் தலைமைகள் ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கவில்லை. முஸ்லீம் அரசியல்வாதிகள் தமது அரசியல் பலத்தை வைத்து தடுத்து வந்தனர் என எடுத்து கொள்ளலாம்.
ஆனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 வருடங்களாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சியில் ரணில் தலைமையிலான அரசை தமிழ் தேசியக் கூட்டமைப்பே காப்பாற்றியது.
தற்போது கூட வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து ரணில் தலைமையிலான அரசை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றியிருக்கிறது.
அரசு ஒன்றை காப்பாற்றும் அளவிற்கு முட்டு கொடுக்கும் சம்பந்தனால் தனக்கான சொகுசு வாழ்க்கையை தவிர வேறு எதனை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறார் ?