கடந்து போகுமா கறுப்பு ஜூலை?

364

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் மிகுந்த கணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நேற்றல்ல, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் அதி உச்சமே இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய சம்பவம் என பல்வேறு தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும், மறையாமல் அடி மனதில் கறையாக படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.

ஜூலைக் கலவரம் நடந்தேறி 31 வருடங்கள் உறுண்டோடினாலும் தமிழரின் மனத்தோடு ஆழமாக பதிந்துவிட்டது. வருடத்தில் மாதங்கள் பல கடந்தாலும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83 இன் கறைபடிந்த கறுப்பு ஜூலையே நினைவிற்கு வருகின்றது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்படுகின்றார்கள். இதன் எதிரொலியாக தலைநகரில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள்மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டனர்.

நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனக் கலவரத்தால், தமிழ் மக்கள் செய்வதறியாது அல்லோல கல்லோலப் பட்டார்கள். தமது உயிர்களை பாதுகாக்க எங்கு செல்வதென தெரியாமல் ஏக்கத்தோடு நின்றார்கள்.

ஜூலை 23இல் ஆரம்பித்த இனக்கலவரம் மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரத்தில் 400 முதல் 3,000 வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழரின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் ஜூலைக் கலவரம் சம்மந்தமான தரவுகள் குறிப்பிடுகின்றன.

தலைநகரில் இனக் கலவரங்கள் இடம்பெற்ற அதே சம காலப்பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்களக் கைதிகளால் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன. சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் 53 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு 1983 ஜூலையில் யாருமே எதிர்பார்த்திராத, முழுநாட்டையுமே கலங்க வைத்த சம்பவங்கள் நிகழ்தேறின. இது தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமான உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். இவ்வாறான இனக்கலவரத்தை இன்று நினைத்தாலும் இதயமே விறைத்து விடுகிறது.

83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல் – சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. இக் கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள்.

1983 ஜூலைக் கலவரங்களை மீண்டும் நினைவுபடுத்தும் முகமாக நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களைக் கூறலாம். அன்று தமிழர்களுக்கு தலைநகரில் என்ன நடந்ததோ அதே போல் இன்று சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் நடக்கிறது. 1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலை நிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது. இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில்பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது. காலத்திற்கு காலம் பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை நிம்மதியாக வாழவிடாமல் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர். சிறுபான்மை இனத்தவர் தலையெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை பெரும்பான்மை இனத்தவர் கொண்டு இருந்தால் நாட்டில் அவ்வப்போது கலவரங்களும் முறுகல் நிலையும் தவிர்க்க முடியாது.

1983களில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது சொந்தப் பணத்தில் வீடுகளையும், நிலங்களையும், சொத்துக்களையும் வாங்கி சுயமாக கௌரவமாக வாழ்ந்தார்கள். யார் நிலத்திலும் அவர்கள் அடாத்தாக குடியேறவில்லை. ஆனாலும், அவ்வாறு வாழ்ந்தவர்களையே அன்று தலைநகரில் இருந்து விரட்டினார்கள்.

இன்று வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திட்டமிட்ட வகையிலே அபகரிக்கப்படுகிறது. அதேநேரம் தமிழர்கள் மட்டுமே பாரம்பரியமாக வாழ்ந்த பூமியில் சிங்கள மக்களை அடாத்தாக குடியேற்றி இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை இன்றைய அரசு மேற்கொண்டு வருகின்றது. வடக்கிலே நாவற்குழி,முல்லைத்தீவு, வவுனியா என பல்வேறு இடங்களில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், அதேயிடத்தில் நீண்ட காலங்களாக வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு காணி உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தமிழர்கள் பாரம் பரியமாக வாழ்ந்த நிலங்கள் இராணுவத் தேவைக்கு என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக அண்மைய நாட்களில் பல போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு வடக்கில் மிக வேகமாக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதும் தமிழர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் வடக்கில் மீண்டும் இனக் கலவரங்கள் உண்டாகி தமிழர்கள் தமது சொந்த நிலங்களில் இருந்தே விரட்டப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் இப்போதே தோன்ற தொடங்கி விட்டது.

ஏனென்றால், கடந்த வருட இறுதிப் பகுதியில் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு காணிகளை பங்கீடு செய்ய அளவீடுகளை மேற்கொண்டிருந்த சமயம், அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை சிங்கள மக்கள் இனத்துவேசத்தோடு விரட்டியடித்த சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இவ்வாறான நிலைமையை நோக்குகின்றபோது நாட்டில் இன்றும் கறுப்பு ஜூலையை நினைவுபடுத்துகின்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழுமா? என்ற வினா தமிழர்கள் மத்தியில் இன்று காணப்படுகின்றது.

இலங்கையில் இனங்கள் அனைத்தும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால் மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழ விடவேண்டும். இல்லையேல் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைக்கின்ற கறை படிந்த கறுப்பு ஜூலை மீண்டும் மீண்டும் நினைவுகளில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

கிஷோர்

SHARE