பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷொப்பை, அந்நாட்டு பாராளுமன்றில் அமைச்சர் பீரிஸ் சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவ, புலனாய்வு மற்றும் பிரச்சார நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் பாரியளவில் பணம் திரட்டப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இணைத்திருப்பதற்காக நன்றி பாராட்டுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவளிக்காமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் அமைச்சர் பிரிஸ், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கம் அளித்துள்ளார்.