தமிழ் மக்களின் உரிமைக்காக, அரசாங்கங்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவாகிய அமைப்புதான் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழ்த் தேசி யம், சுயநிர்ணய உரிமைக்காக, தமது எதிர்கால சந்ததியாவது தமி ழனாய், தலைநிமிர்ந்து, தம்மைத் தாமே ஆளவேண்டும் என்கிற உயரிய இலட்சியத்திற்காக பல இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் விடுதலைப்புலிகளுடன் கைகோர்த்தனர்.
இதற்காக தமது வாழ்வை முழுமையாக இப் போராட்டத்திற்கு என அர்ப்பணித்த வீர மறவர்கள் அவர்கள். தமது உயிரை துச்சமென மதித்து போராடத் துணிந்தார்கள். தமது உயிரை மாய்த்தேனும் எமது எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக தமது பூர்வீக நிலத்தில் அனைத்து உரிமை களையும் பெற்று வாழவேண்டும் என்கிற இலட்சியத்தை தமது கனவாக வரித்துக்கொண்டு போராடி னர். தேசியத் தலைவர் பிரபா கரனின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தவர்கள். தேசியம், சுயநிர்ணய உரிமையை தமது தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்ட தமிழ் மக்களின் காவலர்கள் அவர்கள். இந்தப் போராட்டக்களத்தில் பல்லாயிரம் வீரர்கள் தமது உயிரை மாய்த்துள்ளனர். அதனால் தான் இன்றும் அவர்கள் எம் மக்கள் இதயத்தில் வைத்து பூசிக்கும் நாயகர்களாக வலம் வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் உக்கிரமடைந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசினால் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர், ஆயிரக்கணக்கான போராளிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறையில டைக்கப்பட்டனர். மக்கள் தஞ்ச மடைந்திருந்த முகாம்களுக்குச் சென்ற அரச புலனாய்வாளர்கள் பலரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இதற்குள் பலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு அல்லது இதர சலுகைகளுக்காக காட்டிக் கொடுத்தவர்களும் இல்லாமல் இல்லை. இன்றும் இந்நிலை தொடராமலும் இல்லை.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட அல்லது கைது செய்யப்பட்டவர்களுக்கு நாம் புனர்வாழ்வு அளிக்கப்போகிறோம். அதன் பின்னர் விடுதலை செய்வோம் என்றது மஹிந்த அரசு. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் சுமார் 11000இற்கும் மேற்பட்டவர்கள் என அறிய முடி கிறது. ஆனால் அரசு இவர்களை சமூக மயப்படுத்துகிறோம் என்பதன் மூலம் நடு வீதியில் விட்டிருக்கிறது.
யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் இப்போராளிகளை விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினர் உரிய முறை யில் கையாளத் தவறிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டு தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் உண்மையும் இல்லாமலில்லை. புனர்வாழ்வளித்த அரசு இவர்கள் தற்போது எவ்வாறு வாழ்கின்றனர். அவர்களது பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்கத் தவறிவிட்டனர். இவர்களுக்குரிய விடயங்களை தாமும் செய்யவில்லை அல்லது புனர்வாழ்வளித்த அரச தரப்பிடமிருந்தும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்குரிய அழுத்தங்களை அரசுக்கு வழங்கத் தவறிவிட்டனர். இரு தரப்பினரின் போலி யான வாக்குறுதிகளால் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மாறாக அரசு இவர்கள் இன்னமும் விடுதலைப்புலிகள், பயங்கரவாதிகள் தான் என்கிற கண்ணோட்டத்தில் இவர்களைத் தொடர்ந்தும் கண்கானித்தே வருகிறது.
வெறுமனே தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசப்படும் நபர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள். வாக்குறுதிகளால் மாத்திரம் அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாப்பும் பூர்த்தி செய்யப்படாது. செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கென தனியாக அல்ல, சமூகத்துடன் இணைந்ததான வேலைத் திட்டங்கள் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களைக் கடக்கவுள்ள நிலையிலும் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை. எனினும் பல நல்லுள்ளம் கொண்டோர் இவர்களுக்கு அவ்வப்போது வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். எனினும் இவர்கள் அனைவரையும் உள்வாங்கி ஒருங்கிணைத்து வேலைத் திட்டங்கள் செய்யப்படவேண்டும்.
தமிழ் மக்களது பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக கொண்டு செல்லப்படவேண்டும். அரசியல் அரங்கில் தமிழ் மக்களது இருப்பும் அவசியம் எனக்கருதிய பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனால் தொடர்;ச்சியான ஏமாற்றங்களால் தாம் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும் என்கிற நோக்கோடு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றை முன்னாள் விடுதலைப் புலிகளின் போரா ளிகள் இணைந்து ஆரம்பித்துச் செயற்படுகின்றனர். ஆனாலும் அரச புலனாய்வாளர்களின் கெடுபிடிக்குள் இவர்கள் சிக்குண்டுள்ளமையினால் சமூக மட்டத்தில் சுதந்திரமாக செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்னமும் தொடர்கின்றது. இவர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய நிலையில் தான் தமது வாழ்வினை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
தாம் வாழும் சமூகத்தில் எவ்வித பாதுகாப்புமின்றியே வாழ்ந்து வரும் இவர்கள், ஏமாற்றங்கள், காலம் தாழ்த்தல், துரோகங்களால் சிக்குண்டுள்ளனர். அடிப்படை வசதிகளைக் கூட இன்னமும் இவர்களுக்கு அரசு வழங்க முன்வரவில்லை. தமிழ்த் தரப்பும் இவர்களின் விடயத்தில் பாரா முகமாகவே இருந்து வருகிறது. தமிழ் அரசியல் கைதிகள் வருடக் கணக்கில் இன்னமும் சிறையில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களது கைகளில் பலமிருந்தும் அரசு பலமிழந்திருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனை அடிப்படையில் செய்ய வேண்டிய காரியங்களைக் கூட செய்யவில்லை. வாழ்வாதாரப் பிரச்சினைகள் கண்முன்னே விரிந்திருக்கிறது. எவ்வாறு இன்றைய நாளைக் கடத்தப்போகிறோம் என்கிற அச்ச சூழ்நிலை தொடர்கின்றது. இரவு வேளைகளில் வீடுகளில் வசிப்பதற்குக் கூட பயம். எந்த நேரத்தில் புலனாய்வாளர்கள் வருவார்கள் என்கிற நிலை. வெளியில் நடமாடும் போது யாரோ ஒருவரால் தாம் கண்கானிக்கப்படுவதாக மனத ளவில் உணரும் நிலை எவ்வளவு மோசமானது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர்கள் மீது தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வரும் நெருக்குதல்கள் காரணமாக அவர்கள் மிகவும் மோசமான விரக்தி நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். சமூகத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கூறினாலும் சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை யினை வாழ முடியாமல் தவிக் கின்றனர். ஏனெனில் இந்தச் சமூகம் இன்னும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற நிலை. அரச இராணுவப் புலனாய்வாளர்களால் தற்போதும் இவர்கள் விசாரணைக்கென அழைக்கப்படுவதும் தொடர் கின்றது.
வீடுகளுக்குள் முடங்கிப்போய் கிடப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை. இவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கான பாதைகள் கூட தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. தொழில் தரக் கூடாதென தொழில் தருனர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சாதா ரண காவலாளி வேலைக்குக் கூட போக முடியாது என்று அவர்கள் கூறுவது உண்மைதான்.
பெருமளவிலான பெண்கள் கண்ணிவெடி அகற்றல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என அறிய முடிகிறது. அதனால் தான் அவர்களது வீடுகளில் அடுப்பு எறிகிறது. இவர்களையும் அரச புலனாய்வினர் விட்டுவைப்பதாக இல்லை. இதேவேளை சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் புனர்வாழ் வளிக்கப்பட்ட முன்னாள் போரா ளிகள் மீது சுமத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
சர்வதேச மட்டத்திற்கு தெரியப் படுத்துவதற்காக புனர்வாழ்வளித்துவிட்டு மறை முகமாக அவர்களது செயற்பாடு களை அடக்கியாளும் நோக்கில் அரச புலனாய்வுத் துறை செயற்படுவது சமூக மட்டத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இவர்கள் கொண்டிருக்கக்கூடிய திறமை களை இனங்கண்டு, அதற்கேற்ப தொழில் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வகையிலும், அவர்களுக்கு ஏதுவான தொழில் பயிற்சிகளை வழங்கி, அத் தொழில் முயற்சிகளை இவர்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளத்தக்க வகையில் நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கான பாதுகாப்பு விடயங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
கரிகாலன்