அரச புலனாய்வாளர்களும், வடகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலையும்

477

ஊடகத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகச் செயற்படுகிறது. அதன் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஒரு நாட்டின் அரசு தீவிரமாகச் செயற்படுவது வழக்கம். குறிப்பாக ஒரு நாட்டுக்குள் இரண்டு அல்லது மூவின மக்கள் வாழும் நிலை ஏற்படுமாகவிருந்தால் பெரும்பான்மை வகிக்கின்ற குறித்த இனத்தினர் ஏனைய சிறுபான்மை இனத்தை அடக்கியாள்வர். இதில் ஊடகங்கள் மற்றும் அதில் பணிபுரிபவர்கள், குறித்த பெரும்பான்மை அரசி னால் அச்சுறுத்தப்படுவதும் அடக்கியா ளப்படுவதும் தொடர்கின்றது. பொதுவாக நாட்டில் வாழும் மக்களின் குரலாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவது வழக்கம். இது அரசுக்கு பெரும் தலை யிடியாக அமைவதால் அரசு ஊடக அடக்குமுறையை மேற்கொள்கிறது.

உதாரணமாக இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால யுத்தம். சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையில் பாரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் சிங்கள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிங்கள மக்களிடம் ஒரு புரிதலை உருவாக்கத் தவறிவிட்டனர் என்றே கூறவேண்டும். அதிலும் ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழினத்திற்காக குரல் கொடுத்து வந்தபோதிலும் அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டது என்பதே வரலாறு. லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, மஞ்சுள வெடிவர்தன, வாஷன போன்ற ஊடகவியலாளர்கள் கூட தமிழினத்தின் விடுதலைக்காக பெரிதும் குரல் கொடுத்து வந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்த தெளிவை, இரு இனங்களுக்கிடையிலான புரிதலை ஏற்படுத்த இவர்கள் முயன்றனர். அரசின் ஊழல்கள் குறித்தும் பகிரங்கமாக எழுதி வந்தனர். இவர்கள் அரச கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதைவிட தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்த ஜோசப் பரராசசிங்கம், சிவராம், நிமலராஜன் என 35 தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்கள். சிலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம டைந்திருக்கின்றார்கள். குறித்த இந்த ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வாளர்களுக்கோ அல்லது சர்வதேசத்திற்கோ காட்டிக்கொடுப்பைச் செய்யவில்லை. தமிழினத்தின் விடிவிற்காக தமது பேனாவைப் பிடித்தவர்கள். அவர்களின் பேனா முனைகள் நசுக்கப்பட்டது.

வடகிழக்கின் தமிழ் ஊடகவியலாளர்கள் எமது தேச விடுதலைக்காக எமது மக்களின் நிலைமைகளை, அரசின் அடக்குமுறைகளை உள் நாட்டிலும் சர்வதேச ரீதியா கவும் எடுத்துச் சொல்பவர்களாக பாதிக்கப்பட்ட பாதிக்கப்படும் மக்களின் குரலாக எந்தவித சலுகையும் ஊதி யமும் எதிர்பாராமல் தமது வாழ்வை ஊடகப் பணிக்கு அர்ப்பணித்து செயற்பட்டனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இலங்கை அரசின் மற்றும் அரச கைக்கூலிகளின் திட்டமிட்ட படுகொலைகள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவர்களும் இவர்கள் தான். இதனால் தான் பலர் கொல்லப் பட்டனர்.

ஆனால் தற்போது வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய பல தமிழ் ஊடகவியலாளர்கள் அரச புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்படுவதுடன், எமது தாயகத்தைக் காட்டிக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை பணத்திற்காக மேற்கொள்ளத் துணிந்துள்ளனர் என்பது வேதனையானது. இந்த நிலைமைகள் மாற்றப்படவேண்டும். அரசியல்வாதிகளின் போக்கு வௌ;வேறு திசைகளில் சென்றாலும் ஊடகவியலாளர்கள் அனைவரும் நேர்த்தியான முறையில் பயணித்து தமிழ் மக்களது உரிமைகளுக்காக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிக்கொணரவேண்டும்.

தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை எந்த அரசியல் கட்சிக்கு கடமையாற்றினாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு. ஆனால் தமிழ் மக்களது இலக்கை திசைதிருப்பும் நோக்கில் குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் செயற்படக்கூடாது. கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப அல்லது கட்சி சொல்வதற்கேற்ப செயற்படுமிடத்து அது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஏனெ னில் ஊடகவியலாளர் என்பவர் மிகுந்த பொறுப்பு வாய்ந்தவர். வெகுவிரைவில் இவ்வாறானவர்களின் முகத்திரைகள் கிழித்தெறியப்படவேண்டும்.

தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை எமது இனத்தில் பற்றுவைக்க வேண்டும். எமது தமி ழினம் அழிந்துபோவதற்கு நாம் பங்காளிகளாக அமைந்;துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும். ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது மிக மிக அவசியம். தமக்கிடையில் அற்ப விடயங்களுக்காக சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்தவேண்டும்.

ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தனி நபர் மீது அல்லது தமிழ் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், அவ தூறு ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிடுவதையும் தவிர்க்கவேண்டும். இது ஊடகவியலாளர்களுக்கு ஏற் புடையதல்ல.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்கிற நோக்கில் அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும். அரசியல் என்பது ஒரு சாக்கடை தான். ஆனால் அதனை சாக்கடையாகவே வைத்திருக்க முடியாது. தொடர்ந்தும் சாக்கடைக்குள் இருக்க நினைக்கவும் கூடாது. மாற்றங்களை நோக்கியே எங்களது செயற்பாடுகளும் அமையவேண்டும்.

வடகிழக்கில் பணிபுரியும் ஊடகவியலாளர்களில் சிலர் இன்னமும் மறைமுகமாக அரச புலனாய்வாளர்களிடமிருந்து சம்பளம் பெறுவதாக அறிய முடிகிறது. இத்தகைய செயற்பாடுகளை இவர்கள் உடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிடின் ஊடகச் செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அஹிம்சை ரீதியான போராட்டங்களால் தமி ழினம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இவ்வாறு நிற்பதன் ஊடாகவே எதிர்காலங்களிலாவது எமக்கான தொரு வெற்றியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

அரசியல்வாதிகள் தாம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஊடக வியலாளர்களைப் பயன்படுத்தி தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அற்ப சொற்ப தேவைகளுக்காக ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளின் அல்லது அவர்களின் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பது சிறந்ததொன்றல்ல. இவ்வாறானவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறுபான்மை இனத்தை முடக்குகின்றதாக இருக்கும் நிலை யில், அதேநேரம் தமிழ் அரசியல் வாதிகளினாலும் ஊடகவிய லாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுகின்றது. அரசியல் வாதிகளின் பேச்சைக் கேட்கும் நிலையில் ஊடகவிய லாளர்களின் செயற்பாடுகள் அமைவது வேடிக்கைக்குரியது.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களின் கருத்துக்களை பக்கசார்பின்றி ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்கின்றபோது, இவர் களினால் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைத்துவிடும் என்கிற நோக்கில் அரசி னால் குறித்த ஊடகவியலாளர்கள் கையாளப்படுகின்றார்கள். அரசின் வேலையும் இதுதான். மக்கள் சார்;பாக குரல் கொடுப்பவர்கள் அல்லது ஊடகவியலாளர்களின் மீது அரசு அடக்குமுறையைப் பிரியோகிக்கும். சிங்கள அடக்குமுறைகளுக்குள் இருந்துகொண்டு துணிச்சலாக ஊடகப் பணியாற்றியவர்களினாலும் தான் இன்று சர்வதேச அளவில் போராட்டம் பற்றிப் பேசப்படுகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் தமக்குத் தாமே ஊடகவியலாளர்கள் எனப் பெயர் சூட்டிக்கொண்டு, இணைய பக்கங்களை நடாத்தி வருகின்றனர் பலர். இதில் அதிகமாக குடும்பப் பிரச்சினைகளும், தமிழ் மக்களிடத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தர்மமற்ற வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஊடகம் என்றால் என்ன? அதனது செயற்பாடுகள் பற்றி அறியாதவர்களாக சமூக வலைதளங்களில் தம்மை மாத்திரம் பிரபல்யப்படுத்தி வருகின்றனர். தாம் ஊடகவியலாளர்கள் எனக் குறிப்பிடும் இவர்கள் தேசியம், சுயநிர்ணய உரிமை, காணி சுவீகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சம் நீக்கப்படாமை அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசிடம் பேசுதல், அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் இதுபோல தமிழ் மக்களுக்குத் தேவையானதை நோக்கி இவர்களது தற்போதைய செயற்பாடுகள் அமையப் பெறுகிறதா என்றால், இல்லை.

மூத்த மற்றும் மறைந்த ஊடகவியலாளர்களை அவர்களின் ஊடகச் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தும் ஊடகவியலாளர்களாகவே இவர்கள் வலம் வருகின்றனர். இதுவரையில் இலங்கையில் 35 தமிழ் ஊடகவியலாளர்கள் மரணித்திருக்கிறார்கள். இவர்களின் தியாகம் மதிக்கப்படவேண்டும். இத்தியாகத்தினை புரிந்த ஊடகவியலாளர்கள் எவராவது பக்கத்து வீட்டுப் பிரச்சினையை எழுதி தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொண்டார்களா?, இதன் மூலம் உரிய நபர்களை அச்சுறுத்தி பணம் பெற்றார்களா? என்பதை ஊடகவியலாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சிந்திக்கவேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தல், எமது இனத்திற்குள் முறுகல் நிலை யைத் தோற்றுவித்தல், அச்சுறுத்தி பணம் பெறல் போன்ற சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் ஊடகப் பணியிலிருந்து அகற்றப்படவேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் நோக்கிய பயணத்தில் ஊடகவியலாளர்களாகிய நாம் காத்திரமாக, எமது பொறுப்பு ணர்ந்தவர்களாக செயற்படுவதே நாம் ஊடகத்துறைக்குச் செய்யும் மகத்தான செயலாகும்.

மறவன்

SHARE