கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

482

 

கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

கடந்தகால வரலாற்றுப்பார்வை

கிறீஸ் மனிதன், (மர்ம மனிதன் அல்லது க்ரீஸ் பூதம், Grease devil) எனும் பெயரில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் பயங்கர நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகளின் பின்னனி ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் நாடு தழுவிய வகையில் இடம்பெற்று வருவதால் இது ஒரு கும்பலோ, அமைப்போ செய்யும் விடயமல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட ஏதோ காரணத்திற்காக உள்நோக்கின் அடிப்படையிலேயே இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

greees

“நாட்டின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாத அரசாங்கம் கிறீஸ் பூதம் என்றதொரு மாயையை தோற்றுவித்து மக்களை திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது என்பது பல்வேறு நிகழ்வுகளின் பின்னனியில் தெளிவாகிறது.” என்பதனை ஜே. வி. பி. யின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி என்பவரும் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறான மர்ம மனிதன் அச்சுறுத்தல்கள் தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம மனிதன் அச்சுறுத்தல்களின் போது ஊர் பொது மக்கள் ஒன்று திரண்டு விரட்டி பிடிக்க முற்பட்ட நிகழ்வுகளின் போது, மர்ம மனிதன் போர்வையில் மக்களை அச்சுறுத்தலில் ஈடுப்பட்ட நபர் அருகாமையில் உள்ள போலிஸ் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து கொண்ட நிகழ்வுகளும், மர்ம மனிதன் பெயரில் அச்சுறுத்துவோரை பொது மக்கள் பிடித்து போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், போலிஸாரால் அவர்கள் விடுவிக்கப்படுவதும் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்து வருவதுடன், பொது மக்களுக்கும் பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்ற நிகழ்வுகளும் உள்ளன.

மர்ம மனிதன் எனப்படுவோர் பொது மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகளின் போது பொது மக்கள் மடக்கி பிடிக்க முற்படும் போது வழுக்கி ஓடுவதற்கு வசதியாக உடம்பில் கிறீஸ் களிம்பு பூசிக்கொண்டிருப்பதனால் அவர்களை கிறீஸ் பூதங்கள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றனர். கிரீசுக் களிம்பு பூசிய மர்ம மனிதர்களும், விதம்விதமான ஆடைக்கவசங்களை அணிந்த மர்ம மனிதர்களும் இரவு நேரங்களில் குறிப்பாக இலங்கையின் கிராமியப் புறங்களில் ஆங்காங்கே பெண்களை குறிவைத்து நடமாடி, மக்களை அச்சமடையச் செய்து வருகின்றனர். இவ்வாறான மர்ம மனிதர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளினால் மக்கள் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு யூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்திலும் பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்துவிடும்.

மக்களிடையே பேசப்பட்டுவரும் கிறீஸ் மனிதன் எனும் வதந்தியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுமே தாமே பூதம் போன்று வேடமிட்டு மக்களை ஏமாற்றி மிகவும் சாதுரியமாக தமது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனரே தவிர, உண்மையில் நாட்டில் அவ்வாறான கிறிஸ் மனிதர்கள் இல்லையென இலங்கை காவல்துறைத் தலைவர் என். கே. இலங்கக்கோன் தெரிவித்தார்.

வதந்திகள்
கிறீஸ் பூதங்கள் எனப்படும் மர்ம மனிதர்கள் பற்றிய வதந்திகள் 2011 யூலை இறுதிப் பகுதியில் பரவ ஆரம்பித்து. ஆகஸ்ட் நடுப்பகுதியில் உச்சநிலையை அடைந்தது. ஆரம்பத்தில் க்ரீஸ் களிம்புகளைப் பூசிக்கொண்டு சில மர்ம மனிதர்கள் இரவு நேரங்களில் கிராமப் புறங்களில் நடமாடுவதாகவும் இவர்கள் பெண்களுடன் தகாத முறையில் நடக்க எத்தனிப்பதாகவும் வதந்திகள் பரவின. அதைத் தொடந்து இந்த மர்ம மனிதர்கள் பெண்களின் முகம், மற்றும் மார்பகப் பகுதிகளை நகங்களால் அல்லது கூரிய ஆயுதங்களால் காயப்படுத்துவதாக வதந்திகள் பரவின. இரவு நேரங்களில் வீட்டிலுள்ளவர்களை வெளியே எடுப்பதற்காக வெளியிலுள்ள நீர்க் குழாய்களில் தண்ணீர்த் திறந்து விடுவதாகவும் கதவுகளைத் தட்டுவதாகவும் இந்த வதந்திகள் அமைந்திருந்தன. இன்னும் ஒரு சாரார் இது இராணுவ பயிற்சி நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் என்றும் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இத்தகைய வதந்திகளால் இலங்கையின் பல மாவட்டங்களிலும் கிராமப்புற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறாகத் தாக்குதலுக்கு உள்ளான சில பெண்களும், மர்ம மனிதர்களைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான சில பெண்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இளைஞர்களும் ஆண்களும் காவல்.
வீடுகளினுள் பெண்களை அமர்த்திவிட்டு இளைஞர்களும், ஆண்களும் இரகசியமாக தத்தமது வீடுகளிலும் பிரதேசங்களிலும் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பங்களில் சில மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஏற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு இளைஞர்களால் நையப்புடையப்பட்டு பிரதேச காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு சில பிரதேசங்களில் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட இத்தகைய சந்தேக நபர்களை காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் விடுவித்தது பலவிதமான சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், மர்ம மனிதர்கள் பற்றிய செய்திகள் பலகோணங்களில் திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியன.

முஸ்லிம் கிராமங்கள் பாதிப்பு.
கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிலை கண்டி மாவட்டத்தில் அக்குறணை, புளுகோஹத்தென்ன, நீரெல்ல, குருகொட, அலவதுகொடை போன்ற பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்பு.
ஆகஸ்ட் 1ம் 2ம் வாரங்களில் மர்ம மனித நடமாட்டம் காரணமாக மலையக தோட்டப் பகுதிகளில் பல இடங்களில் முகங்களில் கீறல் காயங்களுடன் ஏனைய அதிர்ச்சி நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்கள் வேலைகளுக்குச் செல்லாமல் தமது பெண்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டதினால் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அரசியல்வாதிகளின் தலையீடு.
நிலைமை உச்சகட்டத்திற்குச் சென்ற பிறகு மலையக அரசியல் தலைவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் அக்கறை காட்டினர். குறிப்பாக இது விடயத்தை அரசியல் உயர்மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு நிலைமை உச்சநிலைக்கு சென்ற பின்பே இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் மர்ம மனிதர்கள் என்பது போலியாக சோடிக்கப்பட்ட ஒரு வதந்தி என்றும் அப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் இல்லையென்றும் திருடர்களும் காம வெறியர்களும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் இவர்களை கைது செய்ய காவல்துறையினர் உயரிய மேற்கொண்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் வெளியிட்டனர். வாரங்ளாக நாட்டில் பல மாவட்டங்களில் கிறீஸ் பூதங்கள் தொடர்பான 30 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இது வரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் பீதியை இல்லாதொழிக்கமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நிகழ்வுகள்.
*ஆகஸ்ட் 9, 2011: செவ்வாய்க்கிழமை கிழக்குப் பகுதிக் கிராமமான ஓட்டமாவடியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்திருந்தனர். இவர்களில் இருவர் பொலிஸார் ஆவர். கிறீஸ் பூதச் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முற்றுகையிட்டிருந்தனர்.

*ஆகஸ்ட் 11, 2011: மலையக நகரான அப்புத்தளை தொட்டலாகலத் தோட்டத்திற்குச் சென்ற இரு நபர்களை மர்ம நபர்கள் எனச் சந்தேகித்த தோட்டத் தொழிலாளர்கள் அந்நபர்களை வெட்டி, தாக்கி கொன்றனர். கொலை செய்யப்பட்ட இருவரும் பின்னால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எல்ல பகுதியைச் சேர்ந்த கினளன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.மகேந்திரன் என்பவரும் கோணக்கலை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவன் பீட்டர் என்ற இருவருமே மர்ம மனிதர்கள் என்று கருதப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களாவர். தொட்டலாகலை பெருந்தோட்டத்திற்கு அருகாமையிலுள்ள காட்டில் மழைக்குருவிகளைப் பிடிக்க சென்ற போதே இக்கொலை இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

*ஆகஸ்ட் 11, 2011: பொத்துவில் ஊறணி கிராமத்தில் இரவு மூன்று மர்ம மனிதர்கள் நடமாடியதைக் கண்ட பொதுமக்கள் அவர்களைப் பிடித்தனர். இந்த மூவரையும் பின்னர் படையினர், கைது செய்ததுடன் அவர்களை விடுவித்தனர். எனினும் இவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொத்துவில் நகரில் ஆகஸ்ட் 12, 2011: கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்கு படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது இருவர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் வாகனம் ஒன்றைத் தாக்கிச் சேதப்படுத்தினர். மக்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். நிலைமை மோசமடையவே மாலை 4 மணியளவில் வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எம்.ஏ.மௌசூன் (32 வயது) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

*சம்மாந்துறை கோறக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரைத் தாக்க முற்பட்ட மர்ம மனிதனை பெண்ணின் கூக்குரலைக் கேட்ட குழுவினர் விரட்டி வந்தபோது சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளவுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்ட செய்தியை அடுத்து சம்மாந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

*ஆகஸ்ட் 11, 2011: இரவு பொத்துவில் 2 ஆம் குறிச்சியில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவர் மர்ம மனிதரால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து பொத்துவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் அவ்விடத்தில் காணப்பட்ட சீருடையில் நின்ற இருவரும் தாக்கப்பட்டு காயமடைந்து பொத்துவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*ஆகஸ்ட் 12, 2011: டொரிங்டன் அலுப்புவத்தைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் நிரை பிடிப்பதற்காக மட்டக்கம்பினை தேயிலைச் செடியின் மீது வைத்துள்ளார். அந்தக் கம்பு இழுக்கப்படவே திடீரென தேயிலைச் செடிக்கு அடியிலிருந்து மர்ம மனிதன் ஒருவன் தோன்றியுள்ளான். அவனைக் கண்டு பீதிக்குள்ளாகிய பெண் கதறியபடி மயங்கி கீழே விழுந்துள்ளார். இவரது கதறலைக்கேட்ட ஏனைய பெண் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு தேயிலை மலையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறுவதற்கு முற்பட்ட போது அவர்கள் கீழே விழுந்ததால் காயமடைந்துள்ளனர். இவ்வாறான சம்பவமொன்று நியூபோர்ட்மோர் தோட்டப் பகுதியிலும் ஏற்பட்டதால் பெண் தொழிலாளர்களுக்குக் காயமேற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

*ஆகஸ்ட் 12, 2011: திருக்கோவில் விநாயகபுரத்திலும் வெள்ளிக்கிழமை மாலை இரு மர்மமனிதர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதையடுத்து அங்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கலைக்க பொலிஸார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.

*ஆகஸ்ட் 12, 2011: அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் மர்ம மனிதர்கள் என்ற வதந்தியால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் விஜே குணவர்த்தனவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். பொத்துவில், திருக்கோவில் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுள்ளார். இச் சம்பங்களால் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

*திருகோணமலை 91 ஆம் கட்டையில் (கிரிஸ் மனிதன்) சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்து கந்தளாய்ப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இவரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

*ஆகஸ்ட் 12 இரவு கண்டி கடுகண்ணாவ இலுக்குவத்தை பகுதியில் மர்ம மனிதர் என்ற சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் நையப்புடைக்கப்பட்டதுடன், அவரது டிபென்டர் ரக ஜீப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.படுகாயமடைந்த சாரதி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

*ஆகஸ்ட் 15 நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட , ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் நடமாடிய நபரொருவரை அந்தப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப்பகுதியில் உள்ள தொலைபேசி கம்பமொன்றில் கட்டி வைத்தனர். ஏனைய மக்களுக்கும் தகவல் பரவியதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த சந்தேக நபரைக் காணுவதற்கு காலை 6 மணிவரை கூடியிருந்தனர்.

*ஆகஸ்ட் 15 மர்ம மனிதன் பீதி காரணமாக கிண்ணியாவில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து 25 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா அண்ணல் நகரில் ஞாயிறு இரவு 8 மணியளவில் வீடொன்றின் சமையலறைக்குள்ளிருந்த பெண்ணை முகமூடி அணிந்த ஒருவர் யன்னல் ஊடாக கூப்பிட்டுள்ளார். அவரைக் கண்ட அப்பெண் அவலக் குரலெழுப்பவே அயலவர்கள் அங்கு வர முகமூடி மனிதன் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேநேரம், இரவு 11 மணியளவில் பைசல் நகரில் வீடொன்றில் தனிமையிலிருந்த பெண்ணை ஒருவர் யன்னல் ஊடாகக் கத்தியைக் காட்டி மிரட்டவே அப்பெண்ணும் அவலக் குரலெழுப்பியுள்ளார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வரவே அவர் தப்பியோடியுள்ளார். எனினும் அவரை இளைஞர்கள் உட்பட பலரும் துரத்திச் செல்லவே தப்பிச் சென்று கிண்ணியா பழைய ஆஸ்பத்திரிக்கு முன்னால் உள்ள கடற்படை முகாமினுள் நுழைந்ததை அப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு முகாமை முற்றுகையிட்டதுடன், மறைந்திருக்கும் மர்ம மனிதர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட மூன்று காவல்துறையினரும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஜீப் வண்டியும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

நால்வர் உயிர் இழப்பு.
மர்ம மனித வதந்தி காரணமாக ஆகஸ்ட் 13 2011 திகதி வரை நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவர் மலையகப் பகுதியில் பொது மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர். பொத்துவில், திருகோவில் பகுதிகளில் ஆகத்து 12 வெள்ளிக்கிழமை மர்ம மனிதர்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர். இந்தக் கிறீஸ் பூதத்தை தேடிச்சென்ற 22 வயதுடைய இளைஞர் ஒருவர் காட்டுக்குள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.

சந்தேகம்.
இவ்வாறான ஒரு வதந்தி நாட்டில் பல மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் பரவியமை குறித்தும், பல மாவட்டங்களிலும் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருப்பது குறித்தும் மக்கள் மத்தியில் பலவித சந்தேகங்கள் நிலவியன. இதன் பின்னணியை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.அரசியல் இலாபத்தினை அடைந்து கொள்ளும் நோக்கிலான திட்டமிடப்பட்ட செயற்பாடே இதுவெனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். எது எவ்வாறிருந்தும் இவ்விடயம் குறித்து இப்பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் குறித்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கிறீஸ் மனிதனின் பெயரால் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதானமாக இருக்குமாறு மத அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம்.
பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்வதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் நாட்டில் கிறீஸ் பூதங்களோ மர்ம மனிதர்களோ இல்லை. சில இடங்களில் மனநோயாளிகள் ஏதாவது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு யாராவது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டால் அவர்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். மாறாக, பிரதேச மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டு.
இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். அதேநேரம் “கிறீஸ் பூதம் சகல இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு மாதகாலத்திற்கும் மேலாக மகியங்கனை, கண்டி, கந்தளாய், ஹட்டன், இப்போது கிழக்கு என கிறீஸ் பூதங்கள் தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையை இதுவரை பொலிஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் சமாதானம் ஸ்திரத்தன்மை என்பவற்றை இந்த விடயம் மோசமாக பாதித்துக் கொண்டிருக்கின்றது” என்றும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராததற்கும் பொலிஸாரைக் கட்டுப்படுத்தி வைத்திராததற்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என்றும் ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் கவனத்திற்கு.
மர்ம மனிதர் நடமாட்டம் தொடர்பில் பொத்துவில் பிரதேசத்திலும், ஏனைய இடங்களிலும் நடைபெற்றுள்ள அசம்பாவித சம்பவங்களையிட்டு பூரண விசாரணை நடாத்துமாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். நடந்துள்ள சம்பவங்களையிட்டு தாம் பெரிதும் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவை தொடர்பான பூரண விசாரணைக்கு இணக்கம் தெரிவித்ததோடு அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கு தீய சக்திகள் மேற்கொள்ளும் சதியாக இவை இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

காவல்துறை அவசர பிரிவு வேண்டுகோள்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கு அல்லது 119, 118 ன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு காவல்துறை அவசர பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

காவல்துறையினர் யாரைப் பாதுகாக்கின்றனர்?.
காவல்துறையினர் பொதுமக்களை பாதுகாக்கின்றார்களா அல்லது மர்ம மனிதர்களைப் பாதுகாக்கின்றார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்படுவதாலேயே காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் ஏற்படக் காரணமாக அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் மர்ம மனிதரின் அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்படுமெனவும் அவர் தெரிவித்தார்]

பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் அச்ச நிலை காரணமாக அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் பொது மக்கள் பகலில் தூங்கி இரவில் விழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தொழிலுக்குச் செல்வோர் இரு வேளையும் விழித்திருக்க வேண்டிய நிலையில் சிறுவர்கள் பலமான பீதியிலும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி வருவதாகவும், பெண்கள் தமது ஆண் துணைகளை வலுக்கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் முடக்குகின்றனர் எனவும், நோன்பு காலமாகையால் பள்ளிக்கு தொழுகைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளதாகவும், 3 வருடங்கள் படித்த உயர்தர மாணவர்கள் திருப்தியாக பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் மர்ம மனிதன் பற்றிய கதையே நடக்கிறது எனவும், மக்களின் மன நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தினமும் புதுப்புதுச் செய்திகள் உண்மையாகவோ, வதந்தியாகவோ குவிகின்றன. பலர் கேட்டுக் கேட்டு, அலுத்துப் போயுள்ளனர்.

“இதுவரை பிடிபட்ட கிறீஸ் மனிதர்கள்
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக உடல் முழுவதும் கிரீஸ் பூசிய மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்ற செய்தியினால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் நித்திரையில்லாமல் கண்விழித்திருக்க வேண்டிய பரிதாப நிலையொன்று தோன்றியுள்ளது.
வாழைச்சேனையில் பிடிக்கப்பட சந்தேக நபர்

அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் இரவில் மக்கள் நடமாடுவதற்கு தயங்குவதுடன் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடாததனால் முழுமையாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கண்டறிவதில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் காவல் காத்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் மக்கள் புனித நோன்பினை நோற்று வருவம் இக்காலத்தில், இரவு வேளைகளில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பள்ளிவாசல்களுக்கு சென்று மார்க்க கடமைகளில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதனால் வீடுகளுக்குள்ளேயே தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

கல்முனையில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்

வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளிலேயே இம்மர்ம மனிதர்கள் தமது கைவரிசையினை காட்டுவதாக உலவும் செய்தியினால் ஆண்களும் தமது வேலைகளின் நிமித்தம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கிரீஸ் தடவிய மனிதர்கள் பற்றி பிரதேசங்களில் உலவும் செய்தியினால் இரவில் செல்லும் சாதாரண கிராம வாசிகளைக்கூட சந்தேகிக்கும் அளவிற்கு மக்களிடையே பீதி அதிகரித்துக் காணப்படுகின்றது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக கூட்டாக இணைந்து கல்வி கற்கும் மாணவர்கள் தமக்குத் தேவையான பாடக்குறிப்புகளை தமது நண்பர்களின் வீடுகளுக்குக் கூட சென்று வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் சந்தேகமும், பயமும் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று இலங்கை இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

குருணாகலில் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள்

பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகலை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தனர் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுளை பகுதியில் தலைமறைவாகியிருந்த ஆறு பேரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோன்று இவ்வாறான மர்மமனிதர்களின் நடமாட்டம் நாடு முழுவதிலும் காணப்படுவதாகவும், மக்கள் பீதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 நாவலடியில் கைது செய்யப்பட்டுள்ள ஏறாவூர் மிச் நகரைச்சேர்ந்த அசனார் இதாஸ் என்ற ரியாஸ்
நாட்டின் பல பாகங்களில் பேசப்படும் மர்மமனிதர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அல்லது இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது வெறும் கட்டுக்கதைகளே தவிர அதில் எவ்வித உண்மையுமில்லை என்று பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். மேற்படி மர்மமனிதர் தொடர்பாக விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபர் தயார் நிலையில் இருப்பதாகவும் இது விடயமாகப் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இது ஒரு திட்டமிட்ட பிரசாரமே தவிர உண்மையில்லை என அவர் குறிப்பிட்டார்.
பிடிக்கப்பட்ட இன்னொரு சந்தேக நபர்

இதுவரை கிறீஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அங்காங்கே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே கிறீஸ் மனிதர்கள்தானா என்று இன்னமும் உறுதி செய்யப்பட்டவில்லை. இருப்பினும் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தி்ல் ஆண்கள் இரவு, பகலாக மர்ம மனிதர்களைத் தேடிவருகின்றனர். மலையகத்தில் பொலிஸாரால் கண்டு பிடிக்காமல் போய்விட்டதால் விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறையில் பிடிக்கப்பட்ட வெள்ளத்தம்பி ஆதம்பாவா (மஜீத்)
மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

பதுளை தல்தென பிரதேசத்தில் பிடிக்கப்பட்டவர்கள் 

மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களாக இருப்பின் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கூட அதன் ஊடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

பொலநறுவையில் பிடிபட்ட மனிதன்

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமான விடயமல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் பிரஜைகள் முன்னணி மக்களின் ஆதங்கங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒலிக்கச் செய்கின்ற போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரித்தானது எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE