சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பில்- மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்

601

 

மக்களை பிழையான பாதையில் கட்சிகள் வளிநடத்தகூடாது -இரா.சம்பந்தன்
இனப்படுகொலை தொடர் நாம் தெளிவாக உள்ளோம் ஜ.நா விசாரனை
பிற்போடப்பட்டமையானது தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை
ஜனாயக ரீதியாக நாம் சரியான திட்டங்களை வகுத்து வருகிறோம்-இரா.சம்பந்தன்

யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞரணியினை சேர்ந்தவர்கள் வீதி வழியாக கட்டி இழுத்துவரப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவியை தீக்கிரையாக்கினர். அவ்வேளையில் கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்தினிற்கெதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

 

 காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் – TNA
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்  தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள்  தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் வெளியேற வேண்டும், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும், ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும், உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது.     அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் இதனைத்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள்  பல்வேறு வடிவங்களில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று கடந்த அரசினால் உருவாக்கப்பட்டது. குறித்த குழுவிற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள்  மனுக்கள்  சமர்ப்பிக்காமல் இருக்கலாம்.
ஆகவே காணாமல் போனவர்கள் என்ற விடயம் வடக்கு கிழக்கில் பாரிய கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

இந்தநிலையில் புதிய அரசு உருவாக்கப்பட்டு காணாமல்  போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குழுவின் கால எல்லை 6 மாதத்திற்கு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த 6 மாதத்திற்குள் முழுமையான விசாரணை ஒன்றை செய்ய வேண்டும்  என கேட்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2 வருட காலமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் என்ன ?  , மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நடைபெற்றதா? , விசாரணை மூலம் யாரையாவது கண்டுபிடிக்கப்பட்டதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு ஒரு இடைக்கால அறிக்கையினை சமர்ப்பிப்பதன் ஊடாக  முன்னேற்றம் இருக்கின்றதா இல்லையா என்பதனை பொதுமக்கள் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் பல்வேறுபட்ட இரகசிய முகாம்கள் இருப்பதாக அறிகின்றோம். யாருக்கும் தெரியாது அது அம்பாந்தோட்டை, திருகோணமலை , மட்டக்களப்பு என உள்ளது. எனவே எங்கே அவை இருக்கின்றது என விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளோம். விசாரணை மேற்கொண்டு குறித்த முகாம்கள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

எனினும் காணாமல் போனவர்களின்  உறவினர்கள் இன்னும் தமது உறவுகள்  உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

எனவே அவர்களுக்கு முடிவுகளை கூறவேண்டிய பொறுப்பு புதிய அரசுக்கு இருக்கிறது.  ஜனநாயம், வெளிப்படைத்தன்மை , புதிய ஆட்சி என கூறுனின்ற இந்த அரசு முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா?: கண்ணீரில் மிதக்கும் யாழ் நகர்

 

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

காணாமற் போனோரின் உண்மை நிலைமையை தெளிவுபடுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், ஐ நா மனிதவுரிமை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தி்னை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் யாழ் நகரில் இருந்து பேரணியாக சென்று நல்லூர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் வரை சென்று, பின்னர் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் மகஜரும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கையினை மார்ச் மாதம் வெளியிடக் கோரியும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களை கண்டறியக்கோரியும் இன்றைய தினம் யாழ்.நகரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம் ஒன்றிணை நடத்தியுள்ளனர்.

யாழ்.நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் ஆஸ்பத்திரி வீதி வழியாக நகர்ந்து பின்னர் பிரதான வீதிக்குச் சென்று, அங்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின்  முன்பாகவுள்ள உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்தின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறும் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலையினைக் கண்டறியுமாறும் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மேலும் ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கை உரியகாலத்தில், வெளியிடப்பட வேண்டும். எனவும் அவர்கள் அங்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப்பொம்மைக்கு தீயிட்டு தங்கள் எதிர்ப்பினைக் காண்பித்தனர்.

SHARE