மீண்டும் கோத்தாவின் குருதி வேட்டைக்கு களம் அமைக்கும் மைத்திரி

372

30 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு ஒருபக்கமிருக்க அதனது வடுக்கள் இன்னமும் ஆறாமல் இருக்கிறது. சிங்கள இனவெறிபிடித்த காடை யர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் ஏராளம். ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தொடக்கம் மைத்திரிபால சிறி சேன வரை அந்த நிறைவேற்று ஆட்சியதிகாரம் தமிழ் மக்கள் மீது முற்றாகப் பிரயோகிக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

சமாதான ஒப்பந்தம் நிலவிய காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுடைய சிவில் நிர்வாகம் இடம்பெறுவதற்கு அரசாங்கம் வழிவகுத்தது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய செயற்பாடுகள் நாளடைவில் சர்வதேச ரீதியில் காத்திரமான இடத்தை பிடித்துவிடும் என்கிற காரணத் தினாலும் அது உலக வல்லரசுகளுக்கு சவாலாக வளர்ந்துவிடும் என்கிற காரணத்தினாலும் விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கர வாதிகள் எனச் சித்தரித்து இடைக்கால நிர்வாகம் ஒன்றை செவ்வனவே நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை முத்திரை குத்தியது.

அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் போரை ஆரம்பிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் சர்வதேச நாடுகளின் உதவி யுடன் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட 57 நாடுகள் இதற்கு ஆதரவாக தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் எனக் களமிறங்கினர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் 1990களிலிருந்து தமிழ் மக்களை படுகொலை செய்த அரசாங்கம் தொடர்ந்தும் 2009 வரை தமிழினச் சுத்திகரிப்பை மேற்கொண்டது.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையி லான அரசாங்கமே குறித்த காலப் பகுதியில் ஆட்சியில் இருந்தது. இதில் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய செயற்பட்டார். இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா செயற்பட்டார். இவர்களுடைய மூர்க்கத்தனமான நடவடிக் கைகள் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் இலட்சக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதற்கு காரண மாக அமைந்தது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர். பொஸ்பரஸ் குண்டுகள் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டது. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் தமிழ் மக்கள் மீது பாவிக்கப்பட்டது. அப்பொழுது ஐ.நா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளும் மௌனிகளாகவே இருந்தனர்.

இதுவரை நடந்த தமிழினத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இலட்சக் கணக்காக பொது மக்கள் கொலை செய்யப்பட்டும், காயமடைந்தும், அங்க வீனர்களாகவும், பலர் இன்னமும் சிறைகளிலும் என தமது வாழ்வைத் தொலைத்தவர்களாக நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, பெரும்பாலானோர் கொலை செய்யப்பட கோத்தபாய ராஜபக்ஷவின் திட்டமிட்ட நடவடிக்கைகளே காரணமாக அமைந்திருந்தது. தற்போது மீண்டும் இராணுவத்தளபதியாக கொலைக்குற்றவாளிகளில் ஒரு வராக காணப்படும் சர்வேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டிருப்பதும், கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்வதும் இந்த நாட்டில் சுமுகமான நிலை எதிர்காலங்களிலும் உருவாக வேண்டும் என மைத்திரிபால சிறி சேன நினைக்கவில்லை, மாறாக அவரது எண்ணம் சிறுபான்மை சமுதாயத்தை அடிமைக ளாக வைத்திருக்கவேண்டும் என்பதுவே. மைத்திரிபால சிறி சேன அவர்கள் நாட்டின் தலை வராக திகழ்வார் என்றே கடந்த காலத்தில் தமிழ் – முஸ்லீம் மக்கள் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து இவரை ஆட்சி பீடமேற்றினார்கள். ஆனால் நடந்தது என்ன?

சிங்களவரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழ் பேசும் மக்கள் மீது வன்முறைகளையே கட்டவீழ்த்து விட்டுள்ளார். இன்று கோத்தபாய ராஜபக்ஷவை இவர் முன்னிலைப்படுத்தும் முகமாக செயற்படுவது கண்டனத்துக்குரியது. மீண்டும் இந்நாட்டில் கிறீஸ் பூதம், வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கி சிறுபான்மை மக்களை அடியோடி இந்நாட்டிலிருந்து அழித்துவிடும் நோக்குடன் தான் கோத்தா களமிறக்கப்படுகிறார். மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு இவர்களது செயற் பாடுகள் இருக்கப் போகிறது என்பதுதான் இன்றைய யதார்த்த பூர்வமான உண்மை. ஆனாலும் முஸ்லீம் அரசியல்வாதிகளும், முஸ்லீம் மக்களும் ஒருபோதும் கோத்தபாயவுக்கோ அல்லது அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர் களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதை அண்மைய குண்டுத் தாக்குதலின் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட சம்பவங்கள் எடுத்துரைக்கின்றது.

முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதிகள் தாக்குதலை ஏற்படுத்தியதால் அனைத்து முஸ்லீம் மக்களும் தீவிரவாதிகள் போல இலங்கை அரசினால் பார்க்கப்படுவது ஏற்புடையதல்ல. எனினும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருக்கிறது. அதற்காக மீண்டும் இந்நாட்டைக் குருதி வேட்டைக்காரனிடம் ஒப்படைத்துவிடக்கூடாது.

மைத்திரிபால சிறி சேனவை அரசியல் சார்ந்த புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் நம்பினார்கள். தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு அவருக்கே வாக்களிக்குமாறு தமிழ் மக்களைப் பணித்தது. இது உண்மையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தமிழ் மக்க ளுக்குச் செய்த பாரிய துரோக மாகும். அதனையும் சகித்துக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நாடு போகின்ற போக்கைக்கண்டு வியந்து போயிருக்கிறார்கள். மீண்டும் ஒரு இரத்தக்களறி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரால் உருவாக்கப்படுமா என தினமும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இவ் விடயத்தில் சர்வதேச நாடுக ளின் சூழ்ச்சியும் பின்னணியில் இருக்கிறது.

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களைக் கடந்துள்ள நிலையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இன்னமும் தீர்வுகள் இல்லை. வடகிழக்கு இணைப்பு இல்லை, காணி மற்றும் பொலிஸ் அதி காரம் வழங்கப்படவில்லை, இந்த நல்லாட்சியும் தீர்வு வழங்கவில்லை. அப்படியாக விருக்கும் போது தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? தீர்வுகளை வழங்குவது யார்? இந்நாட்டில் அடுத்த தலைமுறை யும் பாரிய அழிவினை சந்திக்கும் நிலைமைகள் ஏற்படுத்தப்படப் போகின்றது. அடுத்த பத்தாண்டுகள் சமாதானத்தை ஏற்படுத்துகிறோம் என சர்வதேச நாடுகளுக்கு தம்மை வெளிப்படுத்தி தமிழினத்தின் விடிவிற்காக இந்த நாட்டில் போர் இடம்பெற்றது என்கிற தடயத்தினை அழித் தொழிக்கும் நோக்கிலேயே சிங்கள பேரின வாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜே.ஆர் தொடக்கம் மைத்திரிபால சிறி சேன வரை இதனையே செய்து வந்தார்கள், செய்து வருகிறார்கள், செய்வார்கள். வாழையடி வாழையாக மீண்டும் இந்நிலையே தொடர்கின்றது.

இவர்களது குருதி வேட்டையை மானமுள்ள தமிழனால் மாத்திரமே மாற்றியமைக்க முடியும் என்பதுவே உண்மை. இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் சிந்தித்து தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டிருக்கின்றோம் என்பதையே கோத்தாவின் மீள்வருகை எடுத்துக் காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் மீள் வருகை உணர்த்தி நிற்கிறது.

மீண்டும் ஒரு குருதி வேட்டை இந்நாட்டில் ஆரம்பிக்கப் படுமாகவிருந்தால் சிங்கள இனம் இலங்கையில் பாரிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய நிலை வரலாம். அவ்வாறானதொரு நிலைப்பாடு இந்நாட்டில் உருவாக்கப்படும். இனிவரும் காலங்களிலாவது தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்கக்கூடிய வகையில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளிலிருந்து யாரேனும் ஒரு தலைவர் வரும் போது, தமிழ் மக்களது பிரச்சினைகளை புரிந்துகொண்டு, அதற்கான செயற்பாடுகளை முன் னெடுத்து, தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குரிய முழுமை யான தீர்வுகளை வழங்கக்கூடிய வகையில் அவர் செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த நாடு சுடுகாடாக மாறும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளுமில்லை.

இரணியன்

SHARE