வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம் மலிங்காவின் மிரட்டல் பந்துவீச்சு…

389
 

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான் மற்றும் லஹிரு திரிமான்னே களமிறங்கினர்.

இருவரும் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். மொர்டசா வீசிய முதல் ஓவரில் திரிமான்னே கொடுத்த பிடி வாய்ப்பை ‘சிலிப்’ பகுதியில் கோட்டை விட்டனர் வங்கதேச வீரர்கள். இதைப்பயன்படுத்திக் கொண்ட திரிமான்னே அரைசதம் கடந்தார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போது லஹிரு திரிமான்னே 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சங்கக்காராவும், டில்ஷானும் அசத்த ஆரம்பித்தனர். வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக கையாண்டனர். சங்கக்காரா தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார்.

மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷானும் அரைசதம் கடந்தார். சங்கக்கரா 60 ஓட்டங்களில் கொடுத்த எளிய வாய்ப்பை நழுவவிட்டார் மோமினுல் ஹக்.

இதனால் சங்கக்காரா சதம் அடித்தார். இருவரும் ஜோடி சேர்ந்து 210 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டில்ஷான் ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஓட்டங்களை எட்டினார். இவர் 146 பந்துகளில் 161 ஓட்டங்களை குவித்தார். சங்கக்காரா 105 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து வங்கதேசம் 333 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.

வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2வது பந்திலே மலிங்காவின் வேகப்பந்து வீச்சில் போல்டானார் தமிம் இக்பால்.

அவர் டக்-அவுட்டாக வெளியேற பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. அனமுல் ஹயூ (29), சர்கார் (25), மொமினுல் ஹயூ (1), மக்முத்துல்லா (28), ஷாகிப் அல் ஹசன் (46), ரஹீம் (36),  ஆட்டமிழந்தனர்.

ரஹ்மான் (53) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். கடைசியில் டஸ்கின் அஹட்டை முதல் பந்திலே வீழ்த்தி மலிங்கா போட்டியை முடித்து வைத்தார்.

வங்கதேசம் 47வது ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ஓட்டங்களை மட்டும் குவித்தது. இதனால் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில், பந்துவீச்சில் மிரட்டிய மலிங்கா 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல், டில்ஷான் 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், திசர பெரேரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

161 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டை கைப்பற்றிய இலங்கையின் டில்ஷான் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.;

SHARE