மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு

409

 

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தனியாக இயங்க எடுத்த முடிவினால் மட்டக்களப்பில் அச்சமும் பதட்டமும் நிறைந்திருந்த அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின் தெரிவு செய்யப்படுபவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தொடர்ந்து இருப்பார்களா அல்லது கருணாவின் கீழ் அரசுடன் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் தாங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என கருணாவுக்கு மிக நெருக்கமான ராசன் சத்தியமூர்த்தி தனது தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை கருணா தரப்பினர் கொக்கட்டிச்சோலைக்கு அழைத்து தேர்தல் பிரசாரங்கள் பற்றி விளக்கம் அளித்தனர். ஜோசப் பரராசசிங்கம் தவிர்ந்த ஏனைய 7பேரும் சமூகமளித்திருந்தனர்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களை பேச வேண்டாம் என்றும் மட்டக்களப்பின் அபிவிருத்தி பற்றியே பேசுமாறும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிமேல் கிழக்கு தனியாகத்தான் இயங்கும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் கருணா தரப்பினர் அறிவித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரசாரங்களின் போது முதன்மை படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மறுநாள் ஜோசப் பரராசசிங்கம் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வதாகவும், வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கொள்கையிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை ஒரு போதும் தான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதனையே தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தப்போவதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

கருணா தரப்பினரின் அறிவித்தலை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தந்தை செல்வா காலத்திலிருந்து கொள்கையின் அடிப்படையிலேயே கட்சியில் செயல்பட்டு வருவதாகவும் எந்த காரணத்திற்காகவும் கொள்கையை விலகி செல்ல முடியாது என்றும் அறிவித்தார்.

ஜோசப் பரராசசிங்கத்தின் அறிவிப்பு கருணா தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 8பேரும் தமது உத்தரவுக்கு கீழ் படிந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஜோசப் பரராசிங்கம் அவர்களின் அறிவிப்பால் தவிடுபொடியானது.

கருணா தரப்பின் கட்டளைகளை ஏற்க மறுத்தால் மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என தெரிந்திருந்த போதிலும் ஜோசப் பரராசசிங்கம் துணிச்சலோடு அந்த முடிவை எடுத்தார்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் அரசியல் வரலாற்றில் உறுதியான துணிச்சலான முடிவுகளை எடுத்தது இது முதல் தடவையல்ல. பல சம்பவங்கள் இருந்தாலும் இரு சம்பவங்களை முக்கியமாக சொல்ல முடியும்.
1970ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பில் சுயேச்சையாக களமிறங்கினார் ராசன் செல்வநாயகம். பணபலம், ஆட்பலம், என மட்டக்களப்பை ராசன் செல்வநாயகம் ஆட்டிப்படைத்த காலம். திருமதி சுகுணம் ஜோசப் அவர்களின் மைத்துனர் தான் ராசன் செல்வநாயகம். திருமதி சுகுணம் ஜோசப் அவர்களின் உறவினர்கள் அனைவரும் ராசன் செல்வநாயகத்திற்கு ஆதரவாகவே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் ஜோசப் அவர்களும் அவரின் மனைவி சுகுணம் அவர்களும் தமிழரசுக்கட்சியின் பக்கமே நின்றனர். உறவினராக இருந்தாலும் தந்தை செல்வாவின் வழியில் தொடர்ந்து தமிழ் தேசியக் கொள்கையின் கீழ் தான் தன்னால் செயல்பட முடியும் என ஜோசப் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட செல்லையா இராசதுரைக்காகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பு தொகுதியில் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக செல்லையாக இராசதுரையும், இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராக ராசன் செல்வநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். சுயேச்சைக்குழுவில் வெற்றி பெற்ற ராசன் செல்வநாயகம் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் ஆளும் கட்சியில் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரி என்ற பதவியையும் பெற்றுக்கொண்டார்.joseph

இந்த பதவியை வைத்துக்கொண்டு ராசன் செல்வநாயகம் மட்டக்களப்பில் சில அபிவிருத்திகளை செய்தாலும் தனக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் பழிவாங்கினார். ராசன் செல்வநாயகம் அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஒரு குறுநில மன்னம் போலவும், அடியாட்களை கொண்ட தாதா போன்றும் செயல்பட்டார். அவரின் கீழ் குண்டர் குழு ஒன்றும் இயங்கியது. அதில் ஜோசப் அவர்களும் பழிவாங்கலுக்கு உள்ளானார். ஜோசப் பரராசசிங்கம் அவர்களும் சுகுணம் ஜோசப் அவர்களும் தனது காலடிக்கு வர வேண்டும் என்பதற்காக பல வழிகளிலும் அவர்களுக்கு தொல்லை கொடுத்தார். மட்டக்களப்பு கச்சேரியில் வேலை செய்த ஜோசப் அவர்களை பதுளை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தார். பல வழிகளிலும் பழிவாங்கலுக்கு உள்ளாகி துன்பபட்ட போதிலும் ஜோசப் அவர்கள் தனது அரசியல் கொள்கைகளை கைவிட்டு ராசன் செல்வநாயகத்தின் காலடிக்கு செல்லவில்லை. பின்னர் அவர் தனது வேலையையும் இராசினாமா செய்து விட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்தினார்.
தமிழ் மக்களின் விடுதலை என்ற தந்தை செல்வாவின் கொள்கையிலிருந்து தான் விலகப்போவதில்லை என அன்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பவர் என்பதற்கு இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட முடியும்.

1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டக்களப்பு தொகுதியில் இருவரை நிறுத்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் செல்லையா இராசதுரையையும், தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் காசி ஆனந்தனையும் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்தியது. இது மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டாக பிளவு பட்டு மோதிக்கொண்ட சம்பங்களும் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இராசதுரையின் வெற்றிக்காகவே ஜோசப் பரராசசிங்கம் பிரசாரம் செய்தார். இராசதுரை வெற்றி பெற்ற பின் 1978ஆம் ஆண்டு சூறாவளியை அடுத்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாறிய போது இராசதுரையின் ஆதரவாளர்கள் சிலரும் ஐக்கிய தேசியக்கட்சிக்கே மாறினர். அந்த நேரத்தில் ஜோசப் பரராசசிங்கம் மிகத்தெளிவாக தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்தே தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அந்த கொள்கைக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அவர் அக்கொள்கையை கைவிட்டு ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்கிறார் என்பதற்காக அவரின் பின்னால் நாம் செல்ல முடியாது. தந்தை செல்வாவின் வழியில் கட்சி கொள்கையில் நான் என்றும் உறுதியோடு நிற்பேன் என தெரிவித்தார்.

எத்தகைய அச்சுறுத்தல்கள் எதிர்ப்புக்கள் நெருக்கடிகள் வந்த போதிலும் தனது கொள்கையில் உறுதியாக செயற்பட்ட ஜோசப் பரராசசிங்கம் கருணா தரப்பின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது துணிச்சலுடன் தனது முடிவை அறிவித்தார்.

தமது உத்தரவுக்கு பணிய மறுத்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களை தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது என கருணா தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.  இதனால் ஜோசப் பரராசசிங்கம் அவர்களால் வீட்டை விட்டு வெளியில் வந்து பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

ஏனைய 7வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கருணா தரப்புக்கு மிக நெருக்கமாக செயற்பட்ட ராசன் சத்தியமூர்த்தி உத்வேகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Rasan sathiyamoorthyஇந்த வேளையில் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தகவர்கள் அரச ஊழியர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவினர் அறிவித்தனர். வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தியிடம் வர்த்தகவர்கள் சென்று முறையிட்டனர். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறத்தான் வேண்டும் என பதிலளித்தார்.
ராசன் சத்தியமூர்த்தி வீட்டில் தேர்தல் பிரசார வேலைகளை ஒருங்கிணைத்து கொண்டிருந்த போது பிரசாரத்திற்கு உதவும் தொண்டர்கள் போல சென்ற இருவர் மார்ச் 30ஆம் திகதி காலையில் இராசன் சத்தியமூர்த்தி மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

இது மட்டக்களப்பு நகரில் மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்தது. உடனடியாக கருணா தரப்பினர் யாழ்ப்பாண மக்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர். அன்று நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு யாழ்ப்பாண வர்த்தகவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர்.

1956, 1983 காலங்களில் தென்னிலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது போல மட்டக்களப்பிலிருந்து வடபகுதி தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

1980களில் மட்டக்களப்பின் பிரதான நகரங்களின் வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் கைகளிலேயே இருந்தது. வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு நகரம், களுவாஞ்சிக்குடி போன்ற நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் குறிப்பாக பலசரங்கு கடைகளும், யாழ்ப்பாணத்தவர்களின் கைகளிலேயே இருந்தது. விநியோகஸ்தர்களாகவும் அவர்களே இருந்தனர்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் தொல்லைகளால் சிலர் தமது கடைகளை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு சென்றனர். 2004ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி கருணா தரப்பின் அறிவிப்பால் வடபகுதி வர்த்தகர்கள் அனைவரும் வெளியேறவேண்டிய அவலம் ஏற்பட்டது.

மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்ட பலர் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அவர்களின் பெற்றோர் அல்லது பாட்டன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவராக இருந்த போதிலும் அவர்கள் காலம் காலமாக மட்டக்களப்பையே தமது சொந்த மண் என எண்ணி வாழ்ந்தவர்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் மரக்காலை, இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ், பரமேஸ்வரி ஸ்ரோர்ஸ், உட்பட பல கடைகளின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரையும் உடனடியாக மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல மட்டக்களப்பு மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மட்டக்களப்பு நகரில் மட்டும் 15ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பல வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். மாவட்ட செயலகத்திலும் பலர் பணியாற்றினர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் உட்பட பெரும்பாலான விரிவுரையாளர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும்.

வடபகுதியை சேர்ந்த அனைவரும் நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இவர்கள் 500ரூபாவுக்கு உட்பட்ட பணத்தை மட்டுமே எடுத்து செல்லலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. Batticaloa city

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் என பலரும் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் வெளியேறினர். காலம் காலமாக மட்டக்களப்பையே தமது பூர்வீகமாக எண்ணி வாழ்ந்த வர்த்தகர்களும் வெறும் கையுடன் 500ரூபா பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். இவர்களை பிள்ளையாரடி போன்ற இடங்களில் நின்ற கருணா குழுவினர் மேலதிகமாக பணத்தையோ அல்லது சொத்துக்களையோ எடுத்து செல்கிறார்களாக என சோதனை செய்தனர்.

மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய யாழ்ப்பாண வர்த்தகர்கள் பலர் தமது வர்த்தக நிலையங்களை கொழும்பில் வைத்து முஸ்லீம் வர்த்தகர்களுக்கு விற்றனர். கருணா குழுவினரின் இச்செயலால் மட்டக்களப்பு நகரில் இருந்த வர்த்தகம் முழுமையாக முஸ்லீம் வர்த்தகர்களின் கைகளுக்கு சென்றது

SHARE