எழுக தமிழும், தமிழ் மக்கள் பேரவையும்

441

தமிழ் மக்கள் பேரவையினு டைய நகர்வுகள் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் ஆரம்பத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமி ழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், பல சிவில் சமூக அமைப்புக்கள் என இணைந்து ஒரு பலமான ஒரு கூட்டாக செயற்பட்டுக்கொண்டிருந்த போது இதனைப் பல்வேறு துண்டுகளாக உடைக்கும் ஒரு தந்திரோபாயத்தினையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வர்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கையாண்டார்.

தமிழ் மக்கள் பேரவையா னது இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய தேவை கருதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதனு டைய செயற்பாடுகள் பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலா ளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் ஒரு மாகாண சபையின் முதல்வராக இருந்துகொண்டு ஒரு தொழில் இல்லாமல் தமிழ் மக்கள் பேரவையில் அமர்ந்திருக்கவில்லை. வைத்தியர் லக்ஸ்மன், வைத்தியர் சிவ சுதன் ஆகியோர் வேலை வெட்டி இல்லாமல் ஒரு பேரவையை உருவாக்கவில்லை. அது இனத்தின் ஒரு அவசர அவசிய தேவை என்கிற அடிப்படையில் தான் பேரவை உருவாக்கப்பட்டது. அதனால் தான் அவ்வளவு பேரும் அமர்ந்து ஒரு தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த தீர்வுத்திட்டம் என்பது ஒரு இறுதி முழுமையான வடிவம். அதை இலங்கையரசாங்கத்தின் யாப்பு எழுதும் குழுவிடம் கொடுத்துவிட்டு அந்த யாப்பு எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த உள்ளுராட்சி தேர்தல் வருகிறதென்றால் அந்த தேர்தலில் மக்கள் நாங்கள் கொடுத்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள் என்றால் அரசுக் கொரு நெருக்கடி. இவர்கள் இப்படியொரு யோசனையைத் தந்திருக்கின்றார்கள். அங்கே நடந்த தேர்தலில் இவர்கள் இதைத் தான் வைத்து போட்டியிட்டிருக்கின்றார்கள். அதற்காகத் தான் மக்கள் ஆணை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் நாங்கள் இதற்கு மாறாக ஒற்றையாட்சியைக் கொண்டு வந்தால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றதொரு பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இல்லை பேரவை தந்த தீர்வுத் திட்டத்தை நாங்கள் கணக்கெடுக்கத் தேவையில்லை என்று சொன்னால் தயாரித்தவர்களே அந்த நிலைப்பாட்டுடன் இல்லை.

ஆகவே இதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து நீயும் அரசாங்கத்தைத் தள்ளுகின்றாய். ஆகவே இப்படிப்பட்ட ஆட்களை இந்த அரசியல் அரங்கிலிருந்து அகற்றவேண்டும் முழுமையாக. எங்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நாங்கள் அரசியல் விடுதலையை வென்று கொடுப்பதற்கு முதலில், எங்களுடைய மக்களுக்கு இந்த அரசியல் வேடதாரிகளை அம்பலப்படுத்தவேண்டும். ஏனெனில் செல்வநாயகம் ஐயா அந்த மக்களுக்கு ஏதோவொரு வகையில் நேர்மையாக இருந்திருக்கின்றார். இருந்தபடியால் தான் அவர் கடைசியில் பதவியைத் துறக்கின்றார். அதன் பிற்பாடு தலைவர் பிரபாகரன். அந்த மனிதர் மட்டுமல்ல அந்தப் போராட்டமே மக்களுக்கு முழுமையாக நேர்மையாகத் தான் இருந்தது. அது வெறுமனே அரசி யல் பேச்சுவார்த்தை மட்டுமல்ல. நடுச்சாமத்தில் பெண்களின் நடமாட்டம் தொடக்கம் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை எல்லாமே மிகவும் ஒரு உன்னதமானதொரு காலமாக அவருடைய காலம் இருந்தது. எல்லாக் கோணத்திலும் மக்களுக்கு அந்தப் போராட்டம் ஆதரவாக இருந்திருக்கின்றது. ஆகவே அந்த மக்கள் பரிபூரணமாக அந்த இயக்கத்தையும் தலைமையை யும் நம்பினார்கள். அவர்கள் நினைத் தார்கள் என்னவென்றால் அவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக இருக்கு மென்று நம்பி இன்றைக்கு ஏமாந்து கொண்டு போகின்றார்கள்.
நாங்கள் கூட்டுச் சேர்ந்தது தமிழ் மக்களுடைய பேரவை ஒன்றைத் தயாரிப்பதற்கு. கூட்டமைப்பு பிழையென்று மட்டுமல்ல, இது தான் சரியென்று ஒரு நிலைப்பாட்டை வைத்துத் தான் நாங்கள் இணைந்தோம். தீர்வுத் திட்டம் தயாரிப்பதற்காகத் தான் நாங்கள் முதலில் சேர்ந்தது. அந்த தீர்வுத்திட்டத் தயாரிப்பு அந்தத் தீர்வுத் திட்டத் தயாரிப்பில் நாங்கள் எல்லோரும் இணங்கிக்கொண்ட விடயம் ஒன்று இருக்கின்றது தானே. அந்த விடயத்தை விட்டுவிட்டு எங்கு போனீர்கள்? நீங்கள் சரியான ஆட்கள் என்று சொல்லிச் சொன்னால் தனியாக வந்து ஏன் நீங்கள் அந்தத் தீர்வுத் திட்டத்தை வைத்துப் போட்டியிடவில்லை? நீங்கள் ஒரு கயவர்கள், நயவஞ்சகர்கள் என்ற படியால் தானே அந்த விடயத்தை கொண்டு போய் குப்பையில் போட்டு விட்டு வேறு ஒரு விடயத்தை வைத்துப் போட்டியிட்டீர்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப் சிவசக்தி ஆனந்தன் யார்? முப்பது வருடங்களாக இலங்கைப் படையோடும், இந்தியப் படையோடும் சேர்ந்து இந்தப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சொந்த மக்களை படுகொலை செய்ததில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர். அவருடைய வாயில் உண்மை வருமா? அது ஒரு காலமும் உண்மை வராது? அவர்களுக்கு உண்மை என்றால் தெரி யாது. நேர்மை என்றால் தெரியாது. அவர் அவருடைய எஜமான்களுக்காக ஒரு சூழலை உருவாக்குவதற்காக பொய்யைச் சொல்வார்.
பிரச்சினை என்னவென்று சொன்னால் எங்களுக்கு தமிழரசுக் கட்சி உடைவது என்பது இல்லை முக்கியம். தமிழரசுக் கட்சியினுடைய ஒற்றையாட்சியினுடைய நிலைப்பாடு முன்னுக்கு போகக்கூடாது, தோற் கடிக்கப்படவேண்டும் என்பது தான் முக்கியம். அப்படியென்று சொன்னால் எது சரி. தமிழ்த் தேசி யம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வு ஒன்று முக்கியம். அது தான் பேரவையில் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம். இந்தத் தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு மறுத்து ஒற்றை யாட்சியை நிலைப்பாடாகக் கொண்ட சங்கரியுடன் போட்டியிட்டது நாங்க ளில்லையே. தானாகத்தானே போய் போட்டியிட்டவர். நீங்கள் போய் பாருங்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் சங்கரியுடன் போட்டியிடுகிறேன் என்று அறிவித்த பின்பு தான் நாங்கள் நொமினேசன் கொடுக்கின்றோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருக்கின்றது. இந்தா வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகின்றார். இந்தியாவிலிருந்து நவம்பர் 19ம் திகதி வருகின்றார். அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கும் வரைக்கும் ஒழிந்து திரிகின்றார். தேர்தல் அறிவித்த பின்பு சந்திக்கின்றார். சந்தித்த பின்பு தான் யோசித்து சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் போகின்றார். பின்பு பார்த்தால், தான் சங்கரியுடன் போட்டியிடுகின்றேன் என்று கூறுகின்றார். அதன் பின்பு தான் எங்களுக்குத் தெரியும் அவர் சங்கரியுடன் போட்டியிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் என்பது. அது அவர் எடுத்த முடிவு. ஆகவே இவரு டைய முடிவும் தவறாகவிருந்தமையால் நாங்கள் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து பயணிக்க முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசரும், முன்னாள் வடமா காண சபையின் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் கஜேந்திரன் செல்வராசா அவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவியபோது, தற்போதும் நான் அதன் இணைத்தலைவர். மத்திய குழு பெரும்பான்மை அங்கத்தவரின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து இருந்து வருகின்றேன். எனது எழுக தமிழ் பேச்சும் என் கட்சி சார்ந்ததல்ல. அது இணைத்தலைவருரை.
முன்னணி தமிழ் மக்கள் பேரவையில் இருந்து விலகியதாகக் கடிதம் ஏதும் எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. அனுப்பியிருந்தால் அதன் பிரதியை எனக்கு அனுப்பவும். காழ்ப்புணர்ச்சி சிலருக்கு வரத்தான் செய்யும். அவர்கள் காலாதிகாலமா கச் செய்த அரசியலில் இதுவரையில் அவர்களால் செய்ய முடியாததை ஐந்து வருடங்களில் இந்த முதியவர் செய்தார் என்பது அவர்களுக்குக் கோபம், வெறுப்பு, காழ்ப்பு போன்றவற்றை உண்டாக்குவது எதிர்பார்க்க வேண்டியது.
ஆனால் எனக்கும் அவர்க ளுக்கும் இடையில் ஒரு பாரிய வேற்றுமை உண்டு. நான் யோகர் சுவாமி கூறிய வாக்கியங்களை முற்றாக நம்புகின்றவன். ஆகவே இவை யாவும் ‘எப்பவோ முடிந்த காரியங்கள்!’. இதன் உள் அர்த்தத்தை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்றால் காழ்ப்புணர்ச்சி தானாக நீங்கிவிடும். அரசின் தேர்தல் வேட்பாளர்களிடம் எமது கோரிக்கைகளைக் கொண்டு போய் அவற்றை செய்வதாக அவர்களிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெற முயற்சிக்க முடியும். ஆனால் தங்களைக் குற்றவாளிகள் ஆக்கும் எமது கோரிக்கைகளுக்கு அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். இவ்வாறு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். எழுக தமிழானது எதிர்வரும் காலங்களில் மக்களின் எழுச்சியாக இடம்பெறவேண்டும். அவ்வாறு இடம்பெறுமாகவிருந்தால் மட்டுமே அது தமிழ் மக்கள் மத்தியில் பலம் பெறும். மக்கள் சக்தி கொண்டு நாம் போராட்டங்களைப் போராடவேண்டும். தமிழ் மக்கள் பேரவையினைப் பொறுத்தவரை கட்சிகளைச் சார்ந்தவர்கள் இடைத்தரகர்களாக இருந்து செயற்படுவது தமது கட்சியை வளர்க்கும் நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். ஆகவே அதிலிருந்து கட்சித் தலைவர்கள் ஒதுங்கிக் கொள்வதன் ஊடாக தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் புரட்சிகர விடுதலையை நோக்கிப் பயணிக்கும். தியாகி திலீபன் கூறியதைப் போல ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்கிற கோரிக்கை இதிலிருந்து நிறைவேற்றப்படும். ஆகவே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமது கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கில் செயற்படாது, தமது நலனில் அக்கறை கொள்ளாது, தமிழ் மக்கள் பேரவைக்கு துணை நின்று ஒற்றுமையுடன் அனைத்து தமிழ் மக்களது ஆதரவினை யும் திரட்டி இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் பேரவை மக்கள் பேரெழுச்சியை நடாத்தி இலங்கை அரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து தமிழ் மக்களுக்கான வடகிழக்கு இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், கடத்தப்பட்டுக் காணாமல் போனோருக்கானத் தீர்வு, தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை போன்ற பிரச்சினைகளுக்கானத் தீர்வுகளை பெற்றுக்கொண்டு இந்நாட்டில் சுதந்திரமான சுவாசக்காற்றைச் சுவாசிக்க, மக்கள் சக்தியாக நாம் அனைவரும் ஒன்று திரளவேண்டியது அவசியம் என்பதனையே இக்கட்டுரையின் மூலம் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(இரணியன்)

SHARE