மஹிந்த ராஜபக்ச கோரினால் வாய்ப்பு வழங்கத் தயார் – டிலான் பெரேரா

357
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால்  வாய்ப்பு வழங்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பி அது தொடர்பில் மஹிந்த கோரிக்கை விடுத்தால், கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தத் தயார்.

மஹிந்தவிற்கு பிரதமர் வேட்பாளர் பதவி தேவையென்றால் அது குறித்தும் கவனம் செலுத்தத் தயார். பிரதமர் வேட்பாளராக போட்டியிட விரும்பினால் அது குறித்து சரியான முறையில் கட்சிக்கு அறிவித்து, கோர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு சொந்தமில்லாத கட்சிகளின் ஊடாக சந்திக்கு சந்தி கூக்குரல் இடுவதனால் எவ்வித பயனும் கிடையாது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்றதன் பின்னர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க சுதந்திரக் கட்சி முயற்சித்தது. அதனை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரை இணைத்துக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முனைப்புக்களை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என டிலான் பெரேரா சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை போட்டியிடச் செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் டிலான் பெரேரா, மஹிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமான விசுவாசமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அண்மைக்காலமாக மஹிந்தவை மறைமுகமாக அரசியலிலிருந்து ஓரம் கட்டும் வகையில் டிலான் கருத்துக்களை தெரிவித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

SHARE