ஆ.பெரியசாமியாருக்கும் வ.திலகவதியமையாருக்கும் மூத்த புத்திரனாக, 1979.06.02 திகதி அவதரித்த ஸ்ரீகந்தநேசன் அவர்களுக்கு சண்முகதாசன், முகுந்தன் என இரு உடன் பிறப்புக்களும் இருந்தனர். கடைசி சகோதரன் முப்பத்திரண்டு வயதில் வீதி விபத்தில் சிக்கி அகால மரணமானார். இந்த மரணம் இக் குடும்பத்தை இன்றும் வாட்டிவதக்கினாலும் ஸ்ரீகந்தநேசன் அவர்கள், சகோதரனின் மரணத்தின் மூலம் பல வாழ்வியல் தத்துவங்களை உணர்ந்துகொண்டார். இது இவரை இன்னும் வேகமாக எழுத்துத்துறையில் ஈடுபடவைத்தது.
ஸ்ரீகந்தநேசனின் தந்தை ஒரு விவசாயியாகவும் தாயார் அத் தொழிலுக்கு ஒத்தாசையாகவும் செயற்பட்டார். ஆரம்பத்தில் தந்தையின் உழைப்பில் சிறப்பாக வாழ்ந்த இந்த குடுப்பம் 1980 கள் முதல் வன்னியில் அடிக்கக நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், பல இடப் பெயர்வுகளைச் சந்தித்து, இறுதியாக அனைத்து உடைமைகளையும் இழந்து, பூந்தோட்ட அகதி முகாமை வந்தடைந்தது. அங்கு தனது தந்தையுடன் இணைந்து, சிறிய வயதிலிருந்தே முற்போக்குச் சிந்தனையைக் கொண்ட ஸ்ரீகந்தநேசன் அவர்கள் தன்னுடைய வாழ்வில் சந்தித்த பாதைகள் பல துன்பங்கள் நிறைந்தவை. நடை பாதை வியாபாரியாக, மீன் வியாபாரியாக, கூலியாக, தேங்காய் வியாபாரியாக, ஐஸ்பழம் வியாபாரியாக, ஆலைத் தொழிலாளியாக, விறகு வியாபாரி;யாக, கச்சான் வியாபாரியாக, துணி வியாபாரியாக சிறிய வயதிலிருந்து செயற்பட்ட போதும் இவர் தன்னுடைய கல்வியைக் கைவிடவில்லை. பல்கலையில் படிக்கும் போதே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து பலரின் எதிர்ப்புகளுக்குள்ளானார். இருந்தும் ஓயவில்லை. 1991 இல் மாட்டு வண்டியில் பாரிய விபத்துக்கு உள்ளாகி தப்பிப் பிழைத்தவர். 2014 இல் பாரிய சதித்திட்ட விபத்துக்கு உள்ளாகி தப்பிப் பிழைத்தவர்.
கற்ற கல்விக்கு ஏற்ப ஆசிரியர் தொழில் கிடைத்தது. மாதா, பிதா, குரு, ஆளுமை என்ற நம்பிக்கையில் வாழ்ந்த இவர் தன்னுடைய விழைவுக்கு ஏற்ப 2013 ஆம் ஆண்டு அஜந்தா என்ற ஆசிரியையைத் திருமணம் செய்தார். அதன் பயனாக யுரதிஹா என்ற பெண் குழந்தையைம் லஹிந் என்ற ஆண் குழந்தையையும் ஈன்றெடுத்தனர்.
உயர்தரம் வரை தந்தையின் உழைப்பில் முழுமையாக கல்வி கற்ற இவர். பின்னர் தன்னுடைய உழைப்பிலும் தந்தையுடைய உழைப்பிலும் நண்பர்களின் உதவிகள் மூலமும் ஆசியர்களின் உதவிகள் மூலமும் பட்டப்படிப்புக் கல்வியை நிறைவு செய்தார். பட்டப்பின் கல்வியை மனைவியின் உதவி மூலமும் நண்பர்களின் ஒத்தாசையுடனும் நிறைவு செய்தார். இன்று தமிழ்ச் சிறுகதையுலகில் இளைஞர்களுக்கு ஜம்பவானாக திகழும் இவர் தன்னுடைய துன்பம் நிறைந்த வாழ்வையும் சமூகத்தோர் வாழ்வையும் படைப்பிலக்கியமாக படைத்தார்ளூ படைத்துவருகின்றார். இவரது மகுட வாசகம் ‘பெற்றோரை மதிக்காதவர் எப்படிப்பட்டத் திறமைசாலியானாலும் வாழ்வில் நிதானமாக பயணிக்கவும் முடியாதுளூ சாதிக்கவும் முடியாது.’ என்பதாகும். இதன் படி வாழ்ந்தவர் / வாழ்கின்றவர்.
தற்போது யாழ் கொழும்புத்துறையில் வசித்து வரும் இவர், பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டு பல ஆக்கங்களை எழுதி வந்துள்ளார். இது பற்றி அவர் ‘காகங்களும் மைனாக்களும்’ என்னும் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பின்வருமாறு குற்ப்பிட்டுள்ளார் ‘சிறிய வயதில், எனது தந்தையார் படிப்பதற்கு நிறையவே அம்புலிமாம புத்தகங்களை வாங்கித்தருவார். அவற்றைப் படித்ததினால், எனது கற்பனைத் திறன் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்தது. ஆனால், நான் கற்பனைத் திறன் வாய்ந்த சிறுகதைகளை எழுதுவதைவிட யதார்த்தத் தன்மை வாய்ந்த சிறுகதைகளையே எழுத விரும்புகின்றேன்’ 2000 ஆம் ஆண்டு முதல் ‘புயல்’ என்னும் புனை பெயரில் எழுதி வருகின்றார். சிறுகதை, ஆய்வு, கட்டுரை, ஊடகம், நாடகம், பட்டிமன்றம், பேச்சு என பல்துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவரால், ‘ஏமாற்றம்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட முதற் சிறுகதையே பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் விருதைப் பெற்றுக்கொண்டது.
2005 இல் ‘செழிப்பைத் தேடும் பறவைகள்,’ 2006 இல் ‘காகங்களும் மைனாக்களும்,’ 2014 இல் ‘ஆகாயத்தாரைகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் 2016 இல் ‘நான் ஓர் எழுத்தாளன்’ என்னும் கவிதைத் தொகுப்பினையும் 2018 இல் ‘போர்க்காலச் சிறுகதைகள்’ என்னும் ஆய்வு நூலினையும் வெளியிட்டுள்ளதுடன், பல்துறை ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் இலங்கை, இந்திய, ஐரோப்பிய தமிழ் இதழ்கள் பத்திரிகைகளில் எழுதி வருகின்றார். இவரது ஆரம்பகாலச் சிறுகதையான ‘ஆகாயத்தாமரைகள்’ சிறுகதை 2008 இல் இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘பாக்கியா’ சஞ்சிகையில் வெளிவ்ந்த போது தமிழ் நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றது.
இவரது படைப்புக்கள் அனைத்தும் அடிப்படையில் வட பகுதி மக்களின் வாழ்வியலை வரலாற்று ஆவணமாக எடுத்துக்காட்டுகின்றன. 2003 முதல் இற்றை வரை இவரால் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் விருதுகளும் குவிந்துள்ளன. பல்துறை எழுத்தாளராகிய இவரது சேவையினைப் பாராட்டி ஊவா மாகாணத்தில் நடைபெற்ற சாஹித்திய விழாவில் ‘கலையருவி’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் வவுனியாவில் ‘தாய்மொழி வளர்ச்சி மன்றம்’ ஒன்றினை 2012 இல் காலஞ்சென்ற சகோதரன் சமூக சிற்பி முகுந்தனின் உதவியுடன், ஸ்தாபித்து அதனூடாக இலக்கயப் பணியாற்றியுள்ளார். இற்றை வரை இவரது இலக்கியப் பணி தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இவ் ஆளுமையின் சிறுகதைத் துறையைப் பாராட்டி வடக்கு மாகாண கல்வி, கண்பாட்டலுவல்கள், விளையட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவலகள் திணைக்களம் 2019 ஆம் ஆண்டிற்கான ‘இளங்கலைஞர்’ விருது வழங்கி கௌரவித்தமை இவரது அயராத முயற்சிக்குக் கிடைத்த பயன் ஆகும். துன்பக்கடலை நீந்திக் கடந்தவர்தான் எழுத்தாளர் புயல்.
கட்டுரையாளர்:- ஊடகவியலாளர் சசிகரன்