தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அரசிற்குப் பேரிடி

519

இலங்கையில் இடம்பெற்ற அல்லது இடம்பெறுகிற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அதாவது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அதன் ஒற்றுமை என்பது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே ஏற்படுகிற கருத்து முரண்பாடுகளினால் பிரிந்து செயற்படுகின்ற நடவடிக்கைகளினால் அரசாங்கம் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவும் செயற்படவில்லை.தமிழ் பேசும் மக்களாகிய அனைவரு டைய விருப்பு வெறுப்புக்களையும் நன்கு அறிந்திருக்கின்ற தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பானது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்குவதில் சிங்களப் பேரின வாதிகளிடையே தோல்வியுற்ற நிலை யிலேயே இருக்கிறது. தந்தை செல்வநாயகம் காலம் தொடக்கம் இன்று வரை அத்தகையதொரு நிலைப்பாடே காணப்படுகிறது.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வடகிழக்கில் அதாவது தமிழர் தாயகத்தில் சிங்களக் கட்சிகள் தமது பிரச்சாரங்களில் களமிறங்கியுள்ளன. அதே நேரம் அவர்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகள் ஒரு சிலவும், சில பொது மக்களும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடிக்கும் நோக்கிலேயே இந்தப் பச்சோந்தித்தனமான நடவடிக்கைகள் செயற் படுத்தப்பட்டு வருகின்றன எனலாம். விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த காலங்களில் 22 ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான கட்சியாகச் செயற்பட்டது. அதன் பின்னர் சராசரியாக 17 ஆசனங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வடகிழக்கில் பெற்றுக் கொள்ள முடிந்தது. தமிழ் மக்களுடைய வாக்குப்பலமானது வடகிழக்கில் பாரிய ஒரு வாக்குவங்கியாகவே காணப்படுகிறது. தென்னிலங்கை அரசானது தமது இனவாத கட்சிகளின் வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் அரசியல் தலைவர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே கடந்த காலங்களிலிருந்து இதுவரை செயற்பட்டு வந்தன / வருகின்றன.

யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் எட்டப்படவில்லை. அதற்கான வழிகள் திறக்கப்படவில்லை என்றால் மாற்று நடவடிக்கையினை எடுக்கவேண்டிய சூழல் தமிழ் மக்கள் மத்தியிலே அவசியமாகின்றது. இந்நிலையில் தான் தமிழ்க் கட்சிகள் பிரிவடைந்து முரண்பாடான நிலைமைகள் தோற்று விக்கப்பட்டிருக்கும் தருணத்தில் இக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்கிற நோக்கில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாண வர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக் கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு 05 தமிழ்க் கட்சிகளும் இணைந்துகொண்டமையானது ஒரு வரலாற்றுத் திருப்பு முனைதான். துரதிஷ்டவசமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதிலிருந்து வெளியேறியிருப்பது மறை முகமாக கோத்தபாய ராஜபக்ஷவினை ஆதரிக்கும் செயல் வடிவமாகவே காணப்படுகிறது.

பொது உடன்பாட்டு ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கோரிக்கை களாவன:

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறை யின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறை யின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடன டியாக விடுவிக்கப்படுவதுடன், மீள் குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் படல்வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடன டியாக நிறுத்தப்படவேண்டும்.

வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடு விக்கப்படவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுக ளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணி களையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனி யார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன் றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடன டியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல் வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந் திருப்பது என்பது வரவேற்கத் தக்கதொரு விடயம். அது மட்டுமன்றி எதிர்வரும் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களிலும் இதே கூட்டுடன் இக்கட்சிகள் அனைத்தும் பயணிக்குமாகவிருந்தால் சிறந்ததொரு எதிர்காலத்தை வடகிழக்கில் கட்டியெழுப்ப முடியும் என்பதே இன்றைய நிலைப்பாடு. அதனைவிடுத்து தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை தவறானது எனக்கூறி கட்சிகளுக்குள்ளே பிரிவினைகளை தொடர்ந்தும் ஏற்படுத்தி ஒற்றுமையுடன் செயற்படவிடாது மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் செயற்பட்டு வந்தன. தொடர்ந்தும் தென்னிலங்ககை அரசா னது இனவாதக் கருத்துக்களையே பரப்பி வருகின்றது. இதனால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிங்கள சமூகம் தமிழினத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுடன், ஒரு யுத்த சூனிய வலயத்துக்குள் கொண்டு செல்லவே முயற்சிக்கிறார்கள்.

யுத்தத்தைக் காரணம் காட்டி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை அஹிம்சை ரீதியில் அல்லது ஆயுத ரீதியில் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்திலேயே இந்த நாட்டுக்குள் கடந்த 30 ஆண்டு காலமாக போர் இடம்பெற்றது. எனவே தான் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்கள் போற்றும் தலைவராக மாறினார். ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தமிழினத்தின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களாகவே செயற்பட்டு வந்தனர். அனைத்து கட்டமைப்புக்களைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இறுதி வரை தமிழினத்தின் விடிவுக்காகப் போரிட்டனர். போராட்டம் மௌனிக் கப்பட்டாலும் கூட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பானது இன்றும் விடுதலைப் புலிகளின் சார்பாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தே வருகிறது.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேடைப் பிரச்சாரங் களாக தேசியத் தலைவர் பிரபாகரனது போராட்டமே எமக்குக் கிடைத்த வெற்றி என முழங்குவார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே யுத்தம் என்கிற போர்வையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலர் இன மத வேறுபாடின்றி கொலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தாது வெளி யேறிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையே கண்டனர். விடுதலை நோக்கிய போராட்ட பயணத்தில் தமிழினத்தின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடிய போராளிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். ஆகவே பிரித்தாளும் தந்திரங்களை அரசு மாறி மாறி மேற்கொண்டு வந்தாலும் தக்க தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கவும் தவறவில்லை. நாட்டின் எதிர்க் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் அங்கம் வகித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிபீடத்தில் இருக்கும் அரசுடன் பேரம் பேசும் ஒரு சக்தியாகவே இன்றுவரை திகழ்கின்றனர். அதனா லேயே தமிழ் மக்களது வாக்குகளை, தமிழ் பிரதிநிதிகளை விலை கொடுத்து வாங்கும் நோக்கில் அரசு சூட்சுமமாக செயற்பட்டு வருகிறது எனலாம்.

இரணியன்

SHARE