எமனாகும் டெங்கு காய்ச்சல்

447
கொசுக்கள் மூலம் பரவும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்று தான் டெங்கு.வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடெஸ் ஏஜிப்டி(Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இந்நோய் பரவுகிறது.

மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை, குறிப்பாக பகலில் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை.

பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நம் ரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை.

அது நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கும் அபாயமும் உள்ளது.

நோய் அறிகுறிகள்

* காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.

* சருமத்தில் வேனற்கட்டிகள் அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.

* தசை, மூட்டுகளில் வலி, தலைவலி.

அறிந்து கொள்ளும் வழிமுறைகள்

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ்(Leukocytes) என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு(4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்டிபயாடிக்(Antibiotic) என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

சிகிச்சை

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை நன்றாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவு வகைகளை அதிகம் உடலில் சேர்த்துக்கொள்வதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென்(Acetaminophen) மாத்திரைகள் ஆகியவை அவசியம்.

ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம்.

இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்களின் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த பிளாஸ்மா, அதாவது பி.ஆர்.பி(Platelet-Rich Plasma) ஏற்றப்படும்.

செய்ய வேண்டியவை

* டெங்கு கொசுவின் வாழ்விடமே, சுத்தமான நீர் தேங்கும் இடம்தான். எனவே வீட்டுக்குப் பயன்படுத்தும் நல்ல நீர் நிரம்பிய பாத்திரங்களை நன்றாக மூடிவைக்கவும்.

* மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கொசு புகாதவாறு பாதுகாப்பாக மூடிவைக்கவும். அதோடு, வாரம் ஒருமுறை சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

* வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள இடங்களில் 30 மி.லி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க, கொசுவின் லார்வாக்கள் இறந்துவிடும்.

* கிணறுகளில், சிறுசிறு மீன்களை விடலாம். அது கொசுவின் லார்வாக்களைத் தின்றுவிடும்.

* தேவையற்ற பொருட்களை வீட்டின் உள்ளே அல்லது வெளியே சேமித்துவைத்து, கொசுவை விருந்தாளியாக அழைப்பதை விட, ஒரேயடியாக அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்.

* வீட்டின் தோட்டம், ஜன்னல், பழைய பொருட்கள் இருக்கும் இடம், டயர் இருக்கும் இடம் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மூலிகை மருத்துவம்

* நிலவேம்பு இலைகளை, மிளகு மற்றும் இஞ்சியுடன் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். இதன் கசப்புத் தன்மையைக் குறைக்க கொஞ்சம் தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவரலாம்.

* 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்சவேண்டும். நீர் கொதித்து 50 மி.லியாக, வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும்.

* பப்பாளி இலையின் நரம்புகளை நீக்கி, சுத்தமான தண்ணீரில் இலையைக் கழுவி நீர்விடாமல் அரைத்து, சுத்தமான துணியில் சாறு பிழிய வேண்டும். 10 – 15 மி.லி சாறுடன் தேன் கலந்து குடித்துவர, டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.

SHARE