புதுக்குடியிருப்பில் இரசாயன ஆயுதம்? 2009ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 4ம்திகதி, சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதலில்,

1031

 

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வன்னியில் சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளது என்கின்றதான குற்றச்சாட்டுக்கள் தற்பொழுது மீண்டும் எழ  ஆரம்பித்துள்ளன.

மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாய ஆயுதங்கள்(chemical weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று அழைக்கப்படுகின்ற கொத்தனிக்குண்டுகள் (cluster bombs) போன்றனவற்றை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தங்களின் பொழுது சிறிலங்காப் படைகள் பாவித்ததற்கான ஆதாரங்கள் சர்வதேச அமைப்புக்கள்; உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தற்பொழுது எழ ஆரம்பித்துள்ளன.

வன்னியில் கிளஸ்டர் குண்டுகள்; பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கியநாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் அலென் பொஸ்டன் சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பான ஒரு விசாரணையை தாம் மேற்கொள்ள இருப்பதாக, கிளஸ்டர் குண்டுகளின் பாவனையைத் தடை செய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அனைத்துலக அமைப்பான கிளஸ்டர் குண்டுகள் ஒழிப்புக் கூட்டணியின் பணிப்பானர் லோறா சீஸ்மன் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் இந்த விவகாரம்; எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவில்லை.
தமிழ் ஊடகங்களில் இந்த விடயம் பேசப்பட்ட அளவிற்கு சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு இது கொண்டுசெல்லப்படவில்லை என்பது உலகத் தமிழர்களின் இராஜதந்திரச் செய்பாடுகளைப் பொறுத்தவரையில் ஒரு பின்னடைவு என்றுதான் கூறவேண்டும்.

காலத்தின் தேவை
இந்த தடைசெய்யப்பட்ட ஆயுதவிடயம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்கு சில முக்கிய தரப்புக்கள் தடையாக இருக்கின்றதோ என்கின்றதான சந்தேகம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் மேடையில்; மேற்குலகம் எதிர்பார்த்த ஏதோ ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்திருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சர்வதேச மட்டத்தில் இன்று மனித உரிமை பேசிக்கொண்டிருக்கின்ற குறிப்பட்ட சில நாடுகள் இந்தக் கிளஸ்டர்குண்டுகளை பாவித்த குற்ற உணர்வு மற்றொரு காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் சிறிலங்கா தேசத்தின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காண்பிப்பதற்கு உலகத்தமிழர் கரங்களில் மேலதிகமாகக் கிடைத்துள்ள நல்லதொரு ஆதாரம் என்கின்ற வகையில் இந்த தடைசெய்யப்பட்ட ஆயுத விவகாரத்தை நாம் முன்னுரிமை கொடுத்து நகர்த்திச் செல்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
இந்த இராஜதந்திர நகர்வை எவ்வாறு மேற்கொள்வது, யார் அதனைச் செய்வது என்பது பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் சில முக்கிய விடயங்களை ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

Untitled-1 copyஇந்த தடைசெய்யப்பட்ட ஆயுத விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சில கேள்விகள் இருக்கின்றன.

உலகில் நடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் சிறிலங்காப் படைகள் வசம் இருப்பது உண்மையா?

அவற்றை சிறிலங்காப் படைகள் உண்மையிலேயே பாவித்ததா?

சர்வதேச மட்டத்தில் தடை செய்யப்பட்ட இந்தக் கிளஸ்டர குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை உலகம் எவ்வாறு பார்க்கின்றது?
இந்த ஆயுதங்களைப் பாவிப்பதற்கு சர்வதேச மட்டத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றன?
கோத்தாவின் யுத்தத்தின் பொழுது வன்னியில் இந்தத் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சிறிலங்காப்படைகள் பாவித்திருப்பது நிரூபிக்கப்பட்டால் எப்படியான நிர்ப்பந்தங்களை, நெருக்கடிகளை சிறிலங்கா அரசாங்கம் சந்திக்கவேண்டியிருக்கும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை முதலில் நாம் பார்ப்போம்.

சிறிலங்காப் படைகள்வசம் இரசாயணக் குண்டுகள்?

2001ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி தென்னிலங்கை ஆங்கில ஊடகமான சண்டே லீடர் (Sunday Leader) பத்திரிகை, சிறிலங்கா இராணுவத் தலைமையின் ஊழல் நடவடிக்கை ஒன்றினை அம்பலப்படுத்தியிருந்தது.
தோழில் வைத்து இயக்கக்கூடிய இரசாயனக்குண்டுகளைச் செலுத்தக்கூடிய ஏவுககைளை (RPO-A Shmel infantry flamethrower) சிறிலங்கா இராணுவத்தினர் கொள்வனவு செய்திருந்ததாகவும், அதில் பாரிய அளவு பண மோசடி நடைபெற்றிருந்ததாகவும், அந்தப் பத்திரிகை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.
சிறிலங்காப் படையினர் பெருமளவு இரசாயன ஆயுதங்களைக் கொள்வனது செய்திருந்த விpடயம் இதன் மூலமே முதன் முதலில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த நேரத்தில் சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் லயனல் பல்லேகல்ல (Lt. General Lionel Ballagalle) இந்த இரசாயன ஆயுதங்களை பெற்றதாகவும், லன்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் Gladstone Industrial Holdings என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அந்த ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ரஷ்யாவின் டுலா என்ற இடத்தில் KBC Instrument Design Bureau என்ற நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த இரசாயன ஆயுதங்களை, உக்ரேனிடம் இருந்து சிறிலங்கா இராணுவம் கொள்வனவு செய்திருந்தது.
1000 இரசாயனக் குண்டுகளை 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி சிறிலங்கா தனியானதொரு விமானம் மூலமாக இலங்கைக்குக் கொண்டு வந்திருந்து என்பதை, அந்தத் தென்இலங்கை ஆங்கில ஊடகம் ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தது.

RPO-A Shmel infantry flamethrower என்ற இந்த இரசாயனக் குண்டுகள், thermo baric வகையைச் சேர்ந்ததாகவும், பாதிக்கப்படுபவருக்கு பாரிய எரிகாயங்களை விளைவிக்கக் கூடியதாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
செச்னிய யுத்தத்தின் போது ரஷ்யா இந்த வனை இரசாயனக் குண்டுகளைப் பாவித்து, மனித உரிமைகள் அமைப்புக்களின் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த வகை குண்டுகள் பொதுமக்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடியன என்று தெரிவித்து அமெரிக்கா இந்த வகைக் குண்டுகளை தடைசெய்துள்ளது.
இப்படிப்பட்ட இரசாயனக் குண்டுகளை சிறிலங்கா இராணுவம் கொள்வனவு செய்துள்ளது என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவைத் தவிர உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட இந்த வகை இரசாயனக் குண்டுகளை, அதுவும் பெரும் எண்ணிக்கையில் சந்திரிக்கா அரசாங்கம் கொள்வனவு செய்தது, பெரிய பரப்புக்கு உள்ளானது.
ஊடகவியலாளர்கள் சிறிலங்கா இராணுவத்தை கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டார்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் பதில்கள்:
தாம் கொள்வனவுசெய்தது இரசாயன ஆயுதமல்ல. அதிக சேதத்தை விளைவிக்கக் கூடியதான இரசாயனம் சிறிதளவு கலக்கப்பட்ட ஆயுதம் மட்டுமே அது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பல்லேகல்ல ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக்கொண்டார்.

பிபீசி செய்தி நிறுவனத்திற்கு இது தொடர்பாக செவ்வி வழங்கிய அப்போதைய சிறிலங்கா இரர்ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் கருணரட்ட, ‘உலகின் பல நாடுகளும் இரசாயன ஆயுதங்களைத் தமதாகக் கொண்டிருப்பதாகவும், சில நாடுகள் அனு ஆயுதங்களைக்கூட தம்மிடம் வைத்திருப்பதாகக் கூறி, தாம் இரசாயன அயுங்களைக் கொள்வனவு செய்தது தவறல்ல’ என்று நியாயப்படுத்தியிருந்தார்.

இந்த இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்து சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கிய புடயனளவழநெ ஐனெரளவசயைட ர்ழடனiபௌ என்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி லெப். கேணல் உபாலி கஜநாயக்க (Lt. Col. Upali Gajanayake) சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்துக்கூறும் பொழுது, ‘சிறிலங்கா இராணுவம் கொள்வனவு செய்தது இரசாயன ஆயுதமே’ என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

புலிகளின் கண்டனம்:
சிறிலங்கா இராணுவம் இரசாயனக் குண்டுகளைக் கொள்வனவு செய்தது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான கண்டனத்தை அந்த நேரத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தார்கள்.
16.08.2001 அன்று விடுதலைப் புலிகள் வெளிட்ட கண்டனத்தில், சிறிலங்கா இராணுவத்தின் இரசாயன ஆயுதப் பாவனையை கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளிடம் கோரிக்கையும் முன்வைத்திருந்தார்கள்.

அந்த வருடத்தின் இறுதியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு, 2002 இல் சமாதானம் என்ற மாயை வந்ததைத் தொடர்ந்து, இந்த இரசாயன ஆயுத விவகாரம் அப்படியே மறக்கப்பட்டுவி;ட்டிருந்தது.
தொடர்ந்து மறைக்கப்பட்டும் விட்டது.

ஆக ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.

கடந்த 2001ம் ஆண்டு முதல் சிறிலங்காப் படைகள் வசம் இரசாயன ஆயுதங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கின்ற விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதுவும் அந்த நேரத்திலேயே 1000 இற்கும் அதிகமான இரசாயன ஆயுதங்கள் சிறிலங்காப் படைகள்வசம் இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வன்னியுத்தத்தில் இரசாயன ஆயுதம்?

இது இவ்வாறு இருக்க, வன்னி யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கும் நோக்கம் சிறிலங்கா இராணுவத்தினருக்கு இருந்திருக்கின்றது என்கின்ற உண்மையும், ஒரு சந்தர்பத்தில் வெளிப்பட்டடு நின்றது.

2008ம் வருடம் செப்டெம்பர் மாத்தின் முதல் வாரத்தில் இரசாயன ஆயுதம் பற்றி, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துசென்ற புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா பிரஸ்தாபித்திருந்தார். ‘வன்னியில் பின்னடைவைச் சந்தித்துவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு அங்கு இரசாயன ஆயுதங்களைப் பாவித்துத் தாக்குதல் நடாத்தத் தயாராகிவருவதாக’ கருணா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
கருணாவின் இந்தக் கூற்று சர்வதேச ஊடகங்களில் எல்லாம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கருணாவின் அன்றைய நிலையைப் பொறுத்தவரையில் அவர் முழுக்க முழுக்க சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்துவந்தார். அவருக்குப் பொறுப்பாக இருக்கும் சிறிலங்காப் படைத்துறை அதிகாரியின் அனுமதியின்றி அவரால் மட்டக்களப்பில் உள்ள அவரது குழு உறுப்பினரைக்கூடத் தொடர்புகொள்ள முடியாது. அந்த நேரத்தில் கருணாவின் அனைத்து மெய்பாதுகாவலர்கள் கூட, முழுக்க முழுக்க சிங்கள படைவீரர்களே. அப்படி இருக்க, விடுதலைப் புலிகளின் தலைமை இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கத் தீர்மானித்த விடயம் கருணாவிற்கு தெரியவர அந்த நேரத்தில் சந்தர்ப்பம் இல்லவே இல்லை.
அப்படி இருக்க, இந்த இரசாயன ஆயுத விவகாரத்தை கருணா எதற்காக சர்வதே ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்?
இங்குதான் முக்கிய சந்தேகம் உதயமாகின்றது.

உண்மையில் கருணா மூலம் இந்த இரசாயன ஆயுத விவகாரம் வெளியே வரவேண்டும் என்ற சிறிலங்காப் படையினரின் விருப்பத்தையே, அந்த நேரத்தில் கருணா நிறைவேற்றி வைத்திருந்தார். அன்றைய நிலையில், கருணா என்ன செய்யவேண்டும், எங்கு போகவேண்டும், என்ன பேசவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கும் தரப்பாக, சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவே இருந்து வந்திருக்கின்றது. அந்தப் பிரிவினரின் உத்தரவின் பெயரிலேயே, புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்க இருக்கின்றார்கள் என்ற தகவலை கருணா வெளியிட்டிருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை.

கருணா என்கின்ற நபர், வன்னியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்குத் தலைமைதாங்கியவர். அந்த நடவடிக்கைகளை ஒருகிணைத்தவர். எனவே அவரது வாயில் இருந்து, புலிகள் தொடர்பான, அதிலும் குறிப்பாக வன்னியில் புலிகள் மேற்கொள்ளக்கூடியதான நடவடிக்கை குறித்ததான செய்திகள் வெளிவந்தால் அவற்றிற்கு ஒரு பெறுமதி நிச்சயம் இருக்கும். இது சிறிலங்காப் புலனாய்வுத்துறைக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இந்த இரசாயன ஆயுதம் பற்றியதான தகவலை கருணாவின் வாயில் இருந்து வெளியே கசியவிட்டிருந்தார்கள்.

இதேபோன்று, 17.09.2008 அன்று அக்கராயனில் விடுதலைப் புலிகள் வாயுத் தாக்குதலை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் பல சிறிலங்காப் படையினர் பாதிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த இந்தச் செய்தியும், சர்வதேச ஊடகங்களைக் குறிவைத்தே வெளியிடப்பட்டிருந்தது நோக்கத்தக்கது.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநானயக்காரவும் இதனை ஊடகவியலாளர்களுக்கு பின்னர் உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டுவருவதாக தமிழர் தரப்பினரால் கூற்றம்சாட்டப்படுகின்ற ஏசியன் ரிபியூன் (Asian Tribune) என்ற ஆங்கில இணையத்தளம், புலிகள் இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை பாவிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதாகவும் பல்வேறு தலைப்புக்களில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

தொடர்ச்சியாக சிறிலங்காப் படையினரால் அந்த நேரத்தில் வெளியிடப்பட்டுக்கொண்டிருந்த இரசாயன ஆயுதம் பற்றிய செய்திகள்தான், உண்மையிலேயே சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கத் தயாராகின்றார்களா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக இருந்தது.

அந்தக் காலம் முதல் சிறிலங்கா அரசாங்கமும், அதன் படைத்துறையும் மேற்கொண்டு வந்த நகர்வுகளைப் பார்க்கும் பொழுது, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்கள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கத் தயாராகி வந்தார்கள் என்கின்றதான சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் இருந்தது.

தொண்டர் அமைப்புக்களின் வெளியேற்றம்
அதிலும் குறிப்பாக, வன்னியில் தங்கியிருந்து பணியாற்றிக்கொண்டிருந்த சர்வதேச தொண்டர் அமைப்பு பணியாளர்களை சிறிலங்கா அரசு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து, இந்தச் சந்தேகம் மேலும் அதிகரித்திருந்தது.
யுத்தம் நடைபெறும் ஒரு இடத்தில் சர்வதேச நியதிகளின் ஒரு அடையாளமாக, சர்வதேச தொண்டர் அமைப்புப் பணியார்களே இருந்து வருவார்கள். சண்டையிடும் இரண்டு தரப்புக்களும் சர்வதேச நியதிகளைக் கடைப்பிடிக்கின்றார்களா என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிக்கும் பொறுப்பை பெரும்பாலும் இந்த தொண்டர் அமைப்பு பணியாளர்களே மேற்கொண்டு வருவார்கள். ‘சண்டையிடும் தரப்பினர் சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றார்களா?’ என்பது முதல், ‘பொதுமக்களைக் குறிவைத்து வேண்டுமென்றே தாக்குகின்றார்களா?’, ‘சர்வதேச நியதிகளை மீறி நடந்துகொள்கின்றார்களா?’ என்றெல்லாம் கண்காணித்து சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நாவுக்கும் தகவல் வழங்கும் தரப்பாகச் செயற்படுபவர்கள் இந்த தொண்டர் அமைப்புப் பணியாளர்கள்தாம்.
அதிலும் குறிப்பாக, யுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஏதாவது ஒரு தரப்பு, உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அல்லது கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்தால், அதனை உலகின் கண்களுக்குக் கொண்டு செல்லும் பணியையும் கூட, இந்த தொண்டர் அமைப்பினரே மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட தொண்டர் அமைப்புப் பணியாளர்களை முழுவதுமாகவே வன்னியில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேற்றியிருந்ததானது, வன்னியில் சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கப் போகின்றார்களா என்கின்றதான சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாகவே அந்த நேரத்தில் இருந்தது.

இரசாயன ஆயுதங்கள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்பது பாரிய அழிவினை எதிரிக்கு ஏற்படுத்தக் கூடியது. கொடுரமான மரணத்தை எதிரிக்கு ஏற்படுத்தக் கூடியது. உலகில் இப்படியான ஆயதங்களின்; பாவனைக்கு எதிராகக் கடுமையான தடை இருக்கின்றது. இப்படிப்பட்ட ஆயுதங்களைப் புலிகள் பாவிக்கப் போகின்றார்கள் என்கின்ற சிறிலங்காவின் கூற்று உண்மையாக இருந்தால், அல்லது இதனை சிறிலங்காப் படையினர் உண்மையாகவே நம்பியிருந்தால்;, நிச்சயமாக இந்த விடயத்தை சர்வதேசத்திற்கு நிரூபித்து, எந்தவொரு சந்தர்பத்திலும் புலிகள் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைக்க முடியாத அளவிற்கு புலிகளை நிரந்தரப் பயங்கரவாதிகள ஆக்கிவிடவே முயன்றிருப்பார்கள்.

புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதனை அம்பலப்படுத்தி, அதனை நிரூபிக்க சிறிலங்காத் தரப்பிற்கு இருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம்தான், – வன்னியில் இருந்த சர்வதேச தொண்டர் அமைப்புப் பணியாளர்கள்.
யுத்தமுனைகளில் சர்வதேச நியதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்று கண்காணித்துக்கொண்டிருக்கும் ஐ.நா. தொண்டர் அமைப்பு பணியாளர்கள் வன்னியில் பிரசன்னமாகி உள்ள நிலையில் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தால், அது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சர்வதேச சமூகம் முற்றாகவே தடைசெய்வதற்கு ஏதுவானதாக அடைந்துவிடும். இது சிறிலங்காவிற்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்த நிலையிலும், வன்னியில் இருந்து சர்வதேச தொண்டர் அமைப்புப் பணியாளர்களை பலவந்தமாக வன்னியில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேற்றியதானது, சிறிலங்கா அரசு தொடர்பான பலமானதொரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.

சிறிலங்கா கூறுவது போன்று வன்னியில் இரசாயன ஆயுதத்தைப் பாவிக்கப் போவது புலிகள் அல்ல என்றும், சிறிலங்காப் படைகளே அங்கு இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கப் போகின்றார்களோ என்கின்றதாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அது இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், வன்னியின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்ததான செய்தி 2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகியிருந்தது.

புதுக்குடியிருப்பில் இரசாயன ஆயுதம்?
2009ம் ஆண்டு ஏப்பரல் மாதம் 4ம்திகதி, சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதலில், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதுஷா, கேணல் துர்கா, கேணல் நாகேஷ் உட்பட சுமார் 200 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
அறிவித்ததோடு மாத்திரம் நின்றுவிடாமல், தம்மால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடலங்களின் புகைப்படங்களையும், ஒளிப்படங்களையும் – அது வெளியிட்டும் இருந்தது.
ஆனால், சிறிலங்கா இராணுவம் ஆரம்பத்தில் வெளியிட்ட அந்தப் புகைப்படங்கள், அருகில் இருந்து எடுக்கப்படாமல், சற்று தொலைவில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகவே காணப்பட்டன. அந்தப் புகைப்படங்களில் காணப்படும் உடலங்கள் வழமைக்கு மாறாக கருகிய, அல்லது திராவக எரிகாயங்களுடனான காட்சியினைக் கொண்டவைகளாக இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பாவித்திருந்தார்களா என்கின்றதான கேள்வி, உலகத் தமிழர் மனங்களில் ஏற்பட ஆரம்பித்தன. இந்தச் சம்பவம் நடைபெற்று 3 வருடங்களின் பின்னர் தற்பொழுது வெளியான சில புகைப்படங்கள் புதுக்குடியிருப்பில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன என்பதை நிரூபிப்பதாகவே இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் மீது இரசாயன ஆயுதங்களைப் பாவித்துத் தாக்குதல் நடாத்திய சிறிலங்காப் படையினர், தொடர்ந்து அங்கு தங்கியிருக்கும் பொதுமக்கள் மீதும் இந்த இரசாயன ஆயுதத் தாக்குதலை அல்லது கிளஸ்டர் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளுவார்களா என்கின்றதான சந்தேகமும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களை அந்த நேரத்தில் வாட்டிவதைக்க ஆரம்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்கால் போன்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் நிற்பதாகக் கூறிக்கொண்டும், அந்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தொகையை மிக மிகக் குறைவாக வெளியிட்டும் அந்தப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களைப் பாவித்துத் தான் மேற்கொள்ள இருந்த மிக மோசமான ஒரு இன அழிப்பு நடவடிக்கைக்கு தளம் அமைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம்.

தான் நினைத்ததை இறுதியில் செய்தும் முடித்திருந்தது.
இப்படியான பின்னணியில்தான் இந்தத் தடைசெய்யப்பட்ட ஆயுத விவகாரம் தற்பொழுது மீண்டும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது.

கிளஸ்டர் குண்டுகள்
கிளஸ்டர் குண்டுகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற கொத்தனிக் குண்டுகள் என்பது ஒரு குண்டு வெடித்துச் சிதறி பல குண்டுகளாக பிரிந்து அவ்வாறு பிரிந்து செல்லும் குண்டுகள் ஒவ்வொன்றும் பின்னர் தனித்தனியாக வெடித்து மிகப் பெரிய அழிவினை ஏற்படுத்தும் ஒருவகை வெடிபொருள். பெரும்பாலும் ஆகாய விமானத்தில் இருந்தே கிளஸ்டர் குண்டுகள் வீசப்படுவது வளக்கம். இருந்தபோதிலும் தரையில் இருந்து ஏவப்படும் கிளஸ்டர் குண்டுவகைகளும் இருக்கவே செய்கின்றன.
இந்த கிளஸ்டர் குண்டுகளை முதன்முதலில் ஹிட்லரே உபயோகித்திருந்தார்.
Sprengbombe Dickwandig(SD-2)  என்ற குறியீட்டுப் பெயரிலும் Butterfly Bomb என்ற பொதுவான பெயரிலும் அழைக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை 2ம் உலக யுத்தத்தின் பொழுது பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும், இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்கும் ஜேர்மனி உபயோகித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா சோவியத் ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகளும் இந்த கிளஸ்டர் குண்டுகளை தமது சண்டைகளின் பொழுது பாவிக்க ஆரம்பித்திருந்தன.
குறிப்பாக 1970ம் ஆண்டுமுதல் 1990களின் ஆரம்பம்வரை இந்தக் கிளஸ்டர் குண்டுகள் அனேமாக சண்டைகளில் ஈடுபட்ட அனைத்து நாடுகளினாலும் மிக முக்கியமான ஆயுதமாகப் பாவிக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே வானில் இருந்து வீசப்படும் இந்த கிளஸ்டர் குண்டுகளை பீரங்கிகளில் இருந்து ஏவப்படும் செல்களின் வடிவில் அமெரிக்கா இராணுவம் உருவாகியிருந்தது. இந்த வகை செல்களுக்கு ICM –Improved Conventional Munitions என்று அமெரிக்கா இரணுவம் பெயரிட்டிருந்தது. அதேவேளை ஆட்டிலறியில் இருந்து ஏவப்படும் இந்த கிளஸ்டர் குண்டுகளை அமெரிக்க வீரர்கள் பொப்கோர்ன்( popcorn) என்றும் மத்தாப்பு அல்லது பட்டாசுகள் (firecracker) என்றும் செல்லமாக அழைப்பார்கள்.
மிகவும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த கிளஸ்டர் குண்டுகளை உலகில் 34 நாடுகள் தயாரித்ததாகவும் 23 நாடுகள் சண்டைகளின் பொழுது இந்த வகைக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கிளஸ்டர் குண்டுகளில் இரசாயன ஆயுதங்களை இணக்கும் தொழில்நுட்பத்தினை 1950களிலும் 60களிலும் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்தியிருந்தன. பரவலாக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளும் இந்த வகை குண்டுகளின் பாவனையைக் கைவிடுவதாக அறிவித்திருந்தன.

எதிர்புக்கள்
இருந்த போதிலும் இந்தக் கிளஸ்டர் குண்டுகளின் பாவணைக்கு எதிராக 2000ம் ஆண்டுகளில் மிக மும்முரமான எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்திருந்தன.

கிளஸ்டர் குண்டுகள் ஒரு குறிப்பிட்ட இலக்கின் மீது ஏவப்பட்டாலும் அந்தக் குண்டுகள் வெடிக்கும் சந்தர்ப்பத்தில் அது குறிப்பிட்ட இலக்கைத் தாக்குவதுடன் தமது பணியினை முடித்துக்கொள்வது கிடையாது. ஏவப்படும் இலக்கினையும் கடந்து கிளஸ்டர்குண்டுகள் பரந்த அளவிலான பாதிப்பினை ஏற்படுத்திவிடும் சாத்தியம் இருப்பதால் கிளஸ்டர் குண்டுகளால் இராணுவ இலக்கிற்கு ஏற்படும் பாதிப்புக்களை விட சிவிலியன் இலக்குகளுக்கே அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக நடுநிலையான மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
அத்தோடு வானில் இருந்து வீசப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் மொத்தமாகவே அல்லது பகுதியாகவே வெடிக்காத பட்சத்தில் மண்ணுக்குள்ளும் மறைவிடங்களிலும் நீண்டகாலமாகத் தேங்கிக்கிடந்து அப்பாவிப் பொதுமக்களுக்கு அல்லது சிறுவர்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய சாந்தர்ப்பம் அதிகம் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
உதாரணத்திற்கு 1960களின் நடுப்பகுதி முதல் 70களின் ஆரம்பம்வரை நடைபெற்ற வியட்னாம் யுத்தத்தின் பொழுது அமெரிக்கப்படையினர் எண்ணிலடங்காத கிளஸ்டர் குண்டுகளை வியட்னாமில் வீசியிருந்தார்கள். அதில் வெடிக்காது விடப்பட்ட குண்டுகளால் இன்றைக்கும் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றது குறிப்பிடத்தக்கது. வெடிக்காது கைவிடப்பட்ட குண்டுகளால் வருடம் ஒன்றிற்கு சராசரியாக 300 வியட்னாமியர்கள் பாதிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகின்றது. இது ஒரு உதாரணம் மாத்திரம்தான். உலகில் ஒவ்வொரு நாடும் சண்டைகளின் பொழுது பாவித்த கிளஸ்டர் குண்டுகளில் வெடிக்காமல் கிடக்கின்ற குண்டுகளால் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இதனால் கிளஸ்டர் குண்டுப் பாவனை என்பதை மனிதத்திற்கு எதிரான ஒரு தாக்குதலாகவே இன்று நவீன உலகம் பார்க்க ஆரம்பித்துள்ளது.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், Cluster Munition Coalition (CMC) என்ற அமைப்பு, ஐக்கியநாடுகள் சபை உட்பட நூற்றி;ற்கும் மேற்பட்ட அமைப்புக்களும் உலகில் பிரபல்யமான பல மனித உரிமை ஆர்வலர்களும் கிளஸ்டர் குண்டுப் பாவனைக்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தார்கள்.
கிளஸ்டர் குண்டுப் பாவனையை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என்று Handicap International  என்ற அமைப்பு மிக மும்முரமாகக் கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் தனது கோரிக்கைக்கு ஆதரவாக இலட்சக்கணக்கான கையெழுத்துக்;களை 2005ம் ஆண்டு முதல் கேசரித்தும் வந்தது.
உலக அளவில் இந்த கிளஸ்டர் குண்டுகளினால் பாதிக்கப்பட்ட 13,306 ஊடல் ஊணமுற்றவர்களை Handicap International  என்ற இந்த அமைப்பு பேணிவருகின்றது. இவர்களில் 98 வீதமானவர்கள் சிவிலியன் என்பதுடன் 27 வீதமாகவர்கள் சிறுவர்கள் என்பது, கிளஸ்டர் குண்டுகள் உலகில் முற்றாகவே தடைசெய்யப்படவேண்டும் என்ற வாதத்தை அதிக வலுவாக்கியிருந்தது.
இதேபோன்று Human Rights Watch,  Landmine ActionMines Action Canada போன்ற சர்வதேச அமைப்புக்களும் கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்திருந்தன.

டுப்ளின் உடன்பாடு
உலகம் முழுவதிலும் பரவலாக எழுந்த இந்த எதிர்ப்புக் குரல்கள் காரணமாக கிளஸ்டர் குண்டு; பாவனைக்கு எதிரான சர்வதேசத் தடை ஒப்பந்தம் Convention on Cluster Munitions (CCM)  2008ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி அயர்லாந்தின் தலைநகர் டுப்ளினில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சர்வதேச உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு இதுவரை 101 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளதுடன் 71 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை தமது நாடுகள் தமது சட்டவரைபுகளிலும் உள்ளடக்கியுள்ளன.

இப்படியான பின்னணியில்தான் வன்னி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்திருப்பது பற்றி வெளியான செய்திகளை நாம் பார்த்தாகவேண்டி இருக்கின்றது.

முதலாவது: உலகமே ஏற்றுக்கொண்டுள்ள கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசு இதுவரை கையெழுத்து இடவில்லை. அந்த ஒப்பநதத்தை சிறிலங்கா ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இது சிறிலங்கா தேசம் கொத்தணிக்குண்டுகளை தனது சண்டைகளின் பொழுது பாவிக்கும் நியாயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இரண்டாவது: உலகமே கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிராக அணி திரண்டு நின்ற பொழுது, 2008 இல் கொத்தனிக் குண்டுகளுக்கு எதிராக டுப்பிளின் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்தான் 2009ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி முதல் மே 18 வரையிலான காலப்பகுதிகளில் கிளஸ்டர் மற்றும் இரசாயணக் குண்டுகளை சிறிலங்கா இராணுவம் பாவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களும் இந்த கிளஸ்டர் குண்டு விவகாரத்தை உலகத்தின் பார்வைக்கு உலகத் தமிழர் நகர்த்திச் செல்வதற்கு உதவக்கூடிய முக்கிய காரணிகள்.

வன்னி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பாவித்திருப்பதாக சர்வதேச அமைப்புக்களைச் சேர்ந்த அலென் பொஸ்டன் மற்றும் லோறா சீஸ்மன் போன்றவர்களின் கருத்துக்கள் மேலும் ஆதாரப்படுத்தப்பட்டு கிளஸ்டர் குண்டுப் பாவணைக்கு எதிராகப் போராடிய சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படவேண்டும்.
உலகத் தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமக்கிருக்கும் தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி இந்த விடயத்தை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது மிக மிக அவசியம்.

தனுசியன்

SHARE