தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசியல் சதி

448

(தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்)

பூகோள ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்திருக்கிறது. இதற்கிடையிலே எவ்வாறான நிலை மைகள் தோற்றுவிக்கப்பட்டது. யுத்தத்தைக் காரணங்காட்டி சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் பல தமிழ் இளைஞர், யுவதிகள் தாங்கள் வாழவேண்டும் அல்லது சுயநலத்திற்காக மற்றுமொரு போராட்டத்தை உருவாக்கவேண்டும் என்ற முனைப்போடு அதாவது வீர வசனங்களைப் பேசி, பணம் சம்பாதிப்பதும், அங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுமிருப்பதை இன்றும் காண்கிறோம்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். ஆனால் அந்த இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு எமது அரசியல் தலைமைகள் அல்லது எங்கள் அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இலங்கையில் 1990களில் இருந்து இடம்பெற்ற அரசியல் படுகொலை கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிலே விசாரிக்கப்பட்டு வருகி றது. அதிலே சகோதரப் படுகொ லையும் அடங்கியிருக்கிறது. அந்த சகோதரப் படுகொலைகளுக்குள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்களும் உள்ளடக்கப் படுவதனால், இவர்கள் செய்த கொலைகளும் வெளியில் வரக்கூடிய அபாய சூழ்நிலை இருக்கிறது என்பது தான் உண்மையான விடயம்.

அதுமட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோரை குறை கூறுகின்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற பொழுதும், உங்களுடைய நடவடிக்கைகள் எவ்வாறு நகர்ந்து கொண்டு செல்கின்றது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். இன்று ஆயுதக் கட்சிகள் தனித்து செயற்பட முடிவெடுக்கும் போது, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு இல்லாது போகும். நிச்சயமாக அதைத்தான் இந்த அரசாங்கமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன விலை கொடுத்தும் இதைத் திறம்படச் செய்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள். அதனை ஆயுதக் கட்சியினூடாகவோ அல்லது தமிழரசுக் கட்சியினூடாகவோ அந்த செயல்திட்டத்தை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுடைய நோக்கம் அது அல்ல. எங்களுடைய நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏகோபித்த ஒரு கட்சியாக இருந்துகொண்டு, அதிலிருந்து ஏனைய கட்சிகளும் இணைந்து, தமிழ் மக்களுக்கான தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய ஒரே இலட்சியமாக, இலக்காக இருக்கவேண்டும். ஏனென்றால் தேசியத் தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கமும் இதுதான்.

உண்மையிலே ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்பொழுதும் போராட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்குமாக இருந்தால் இந்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களில் உள்ளவர்களினுடைய கைக ளிலே ஆயுதங்கள் தாராளமாக இருந்திருக்கும். இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுத லைப் புலிகளுக்கெதிராகவும் இராணுவப் படை முகாம்களில் இருந்துகொண்டு காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளிலே தான் ஈடுபட்டுக் கொண்டிருந் திருப்பார்கள்.

ஈ.பி.டி.பியும் இவர்களுடன் அடங்கும். காரணம் என்னவென்றால் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த ஆயுதக் கட்சிகள் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. ஆனால் ஆரம்ப கட்டத்தில் தேசி யம், சுயநிர்ணய உரிமை என்ற விடுதலைக்காகப் போராடிய இந்த ஆயுதக்கட்சிகள், அதாவது 1990 காலப் பகுதிகளிலே தமி ழீழ விடுதலைப்புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றவற்றில் இருந்த தலைவர் களான பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் பால குமார், சிறி சபாரத்தினம் போன்றவர்கள் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இலட்சியத்திற்காகத் தான் போராடினார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் எல்லோரும் அதனை விட்டுவிட்டு அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து கொண்டு, இராணுவத்திற்கும், அரச புலனாய்விற்கும் காட்டிக்கொடுக்கும் தமிழினச் சதிகாரர்களாகவே மாறினார்கள். பின்னர் அனைவருக்கும் மன்னிப்பு கொடுக்கப்பட்டு புளொட் கட்சியைத் தவிர ஏனையவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் தேசியத் தலைவர் பிரபா கரன் அவர்களால் அவரின் நெறிப்படுத்தலின் கீழ் ஊடகவியலா ளர் சிவராம் அவர்களின் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரு வாக்கப்பட்டது.

உருவாக்கப்பட்ட காலகட்டத் திலிருந்து விடுதலைப் புலிகளின் போராட்டம் இருந்த வரை இவர்கள் ஒரு குடையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பயணித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை போனஸ் அடங்கலாகத் தெரிவு செய்யக்கூடியதாக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக. அவ்வாறானதொரு நிலையை தற்பொழுது ஏன் மேற்கொள்ள முடியாது.
விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வருகின்ற அரசாங் கங்களுக்கு ஆதரவு வழங்கி வருவதைக் காண்கிறோம்.அன்று உங்களுடைய கைகளிலே ஆயுதங்கள் இருந்தபொழுது அந்த ஆயுதங்களினாலேயே மக்களை அச்சுறுத்தி, வாக்குகளை போடுங்கள் என்று கூறிய ஒரு காலகட்டம் எல்லாப் பகுதிகளிலுமே இருந்து வந்தது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. இராணுவத்தினுடைய முகாம்களிலிருந்து இந்த ஆயுத கட்சிகளினுடைய முகாம்களுக்கு பருப்பு, சீனி, அரிசி, டின் மீன் போன்ற உணவுப் பொருட்கள் வந்த காலங்களும் கடந்து போயிருக்கின்றன என்பதை யாரும் மறந்துவிடவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே இன்று தமிழ் மக்களுக்காக இன விடுதலைக்காக விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட யுத்தம், போராட்டம் முடிவடைந்து விட்டது. இந்த போர் முடிவடைந்த பின்னர் எனது கட்சியைப் பலப்படுத்த வேண்டும், உனது கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை விட்டுவிட்டு தேசி யம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கை நாம் அடையும் நோக்குடன் செயற்பட எப்போது முன்வரப்போகிறீர்கள்.

ஆனால் தேசிய ரீதியாக செயற்பாடுகளை முன்னெ டுப்பவர்கள் மீதே அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கிறது. அதற்காக எமது இலட்சியத்தை இலக்கை அடையக்கூடாது என்பதல்ல. நாம் எமது இலக்கை அடையும் வரை வருகின்ற எந்த அரசாங்கத்துடனும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அரசியல் ரீதியாக உங்களால் வெற்றி கொள்ள முடியாது போனால் வடகிழக்கு இணைப்பு மற்றும் காணி – பொலிஸ் அதிகாரம் இவ்வாறான விடயங்களை உங்களால் வென்றெடுக்கவே முடியாது. ஒரு பாதை சரியில்லையென்றால் அடுத்த பாதையில் தான் செல்ல வேண்டும். அதுதான் ஒரு சரியான செயற்பாடாக அமையும்.

அதாவது நாம் எம் தமிழினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற இலட்சியத்தில் போராடினோம். ஆனால் அடுத்த தலைமுறை இந்த நாட்டிலே இந்த போராட்டம் எப்படி நடந்தது என்ற வரலாற்றினைப் பற்றி அறிந்துகொள்ளாமல் விட்டுவிடும். அவர்கள் அதைப் படித்துப் பார்க்கப்போவதில்லை. தற்பொழுது இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகா ணசபை உறுப்பினர்களும் இதனை சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். ஏனைய தமிழ்க் கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.

ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு கட்சி சார்ந்தோர் அரசி யல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்க ஆயுதப் போராட்டங்களுக்கு என்றே புறப்பட்டவர்கள் ஆயுத போராட்ட நடவடிக்கைகளை மறுபக்கத் திலிருந்து எடுத்துக்கொண்டு நிற்க, இரண்டும் சமமாக செல்லவேண்டும். போராட்டமும் அரசியல் நடவடிக்கையும் சம பலமாக செல்லாததனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒரு முற்றுகைக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. தோல்விகளுக்கான பல கார ணங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றும் அரசியல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.

சர்வதேச ரீதியாக நாடு கடந்த தமிழீழ அரசு இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதனூடாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதலாவது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இந்த நாட்டிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை அனைத்து ஆயுதக் கட்சிகளும் எடுக்கவேண்டும். காரணம் என்னவென்றால், இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் இந்த இலங்கை அரசு வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி நாம் யாரும் சிந்தித்தது கிடையாது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் போது தான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை சரியாக முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்காக பாராளு மன்றத்திலும், அதற்கு வெளியி லும் போராட்டங்களை எங்கும் ஆரம்பியுங்கள். வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்களை ஆரம்பியுங்கள். இதற்காக உண்ணாவிரதம் இருங்கள்.பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதிக்கு வாருங்கள். மக்களோடு மக்களாக இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று போராடுங்கள். ஏன் நீங்கள் அவ்வாறு போராடுகிறீர்கள் இல்லை? ஏனெனில் உங்களுக்கு விருப்பமில்லை. ஆகவே இந்த விடயத்தில் தமிழ் மக்களாகிய நாம் எமது எதிர்கால அரசியல் பயணம் குறித்து நன்கு சிந்தித்து விழிப்புடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

(நெற்றிப்பொறியன்)

SHARE