தமிழ் மக்களுக்கானத் தீர்வு எட்டப்படாதுபோனால் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி கவிழ்க்கப்படும்

446

இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்லது தேர்தல் களம் என்பது புதிதானதொரு விடயமல்ல. தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டம் என்கின்றபோது அதனை இழுத்தடிப்புச் செய்து வந்த வரலாறே தற்போதும் பதியப்பட்டிருக்கின்றது. டட்லி சேனாநாயக்க தொடக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற கேள்வி மையப்படுத்தப்படுகிறது.

14 உள்ளுர், 07 சர்வதேச பேச்சுவார்த்தைகளும் போர்க்காலத்தில் இடம்பெற்று முடிந்தவை. பல ஒப்பந்தங்களின் அடிப்படையில் கைதிகள் பரிமாற்றங்களும் இடம்பெற்றது. தமிழ் மக்களுக்காக இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயுத ரீதியானப் போராட்டம் 2009ஆம் ஆண்டில் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகளின் அரசி யல் நடவடிக்கைக்காக அன்று விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றில் 16 ஆசனங்களுடன் வலம் வருகிறது. அன்று போனஸ் அடங்கலாக 22 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கணிசமான வாக்குகளை இழந்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னமாக உடைப்பதன் ஊடாகவே அரசாங்கம் வெற்றி காணமுடியும் என்கிற நிலைப்பாட்டிலேயே தற்போது அரசியலில் காய் நகர்த்துகிறது. அதற்கான அரச தரகர்களாக தமிழ்த் தரப்பு செயற்படுவது என்பது மக்கள் மத்தியில் மனவேதனை அளிக்கின்றது. தற்போது இருக்கக்கூடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச கைக்கூலியாக செயற்பட்டு வந்ததை அனைவரும் அறிவர். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களில் உள்ளவர்களும் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை காட்டிக்கொடுத்ததன் விளைவு அரசு தமிழ் மக்களது ஈழக்கனவை சிதைவடையச் செய்தது. தேசியம், சுயநிர்ணய உரிமையை பற்றிப் பேசுபவர்களை அரசு நசுக்கிக்கொண்டே இருந்தது. அன்று, போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதா னம் என்ற நிலையில் தான் ஜே.ஆர் அவர்களினால் இன மத மொழி ரீதியாக தமிழினம் ஒடுக்கப்பட்டதென்பதை வரலாறுகள் சான்று பகர்கின்றது. தேசிய ரீதியாக போராட்டங்களை காட்டிக்கொடுக்காது உள்ளுர் ரீதி யாக பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பது தவறில்லை. ஆனால் அதனைத் தவறு என்று நினைத்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
இந்தக் கட்டத்தில் அவர்களை மத ரீதியாக பிளவுபடுத்தி சிறிது காலம் தமிழினத்தின் போராட்டத்தை சிங்களவர்களுடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு செயற்பட்ட முஸ்லீம் மதத்தினருக்கு ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம். இவற்றை கோடிட்டுக் காட்டவேண்டிய தேவை இல்லை. நடந்தவை நடந்தவையாக எடுத்துக் கொண்டாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர், கொலை செய்யப்பட்ட ஊடக வியலாளர்களுக்கு யார் பொறுப்பு என்பதே இக்கட்டுரையின் பிரதான கேள்வியாகும்.

நிலைமை இவ்வாறிருக்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்கின்ற அடிப்படையில் வடக்கு – கிழக்கில் ஆளுநர் மாற்றம் அரச பிரதிநிதிகளின் பிரசன்னம், இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் எட்டப்படுமா என்கின்ற சந்தேகத்தையே தோற்று வித்துள்ளது. மக்கள் மனதை வெல்லும் வகையில் கோட்டாபய அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி என்கிற ரீதி யில் அவரது கடமையாகும். போருக்கு முன்னரான பின்னரான காலப்பகுதியிலும் சிறுபான்மை மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என அக்கறை காட்டிய சர்வதேச நாடுகள் பாரியளவில் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. காலத் திற்குக் காலம் நிலைமைகள் மாறிக்கொண்டிருக்க தமிழ் பேசும் மக்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு குடையின் கீழ் தமது அரசி யல் நிலைப்பாட்டினை நகர்த்திச் செல்கின்றார்கள்.

வட-கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமற்றுப்போனால் தனித் தமிழீழம் சாத்தியமாகாது என்பதே ஆய்வாளர்களின் கருத்து. பல நாடுகள் 30, 50, 100 வருடங்களிலும் தனது சுதந்திரத்தை பெற்றிருக்கிறது. அவ்வாறிருக்க, இலங்கை தேசத்தில் மாத்திரம் ஈழத்தமிழர்கள் சுய கௌரவத்துடன் சுயாட்சியாக ஏன் தமது வாழ்க்கையை நடத்திச் செல்லக்கூடாது.
தமிழ் மக்களுக்காக செயற்படுகின்றோம் என்று கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் தமது சுயலாப அரசியலுக்காக தமிழினத்தை விற்றுப்பிழைக்கும் அரசியலை நடத்துகிறார்கள். மக்களுடைய அபிலாசைகளுக்கு தீர்வு காண்கின்றோம் என்கிற போர்வையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என்பன வழங்கப்படாது அபகரிக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் வாழ்கின்ற இனம் ஒடுக்கப்படுகிற போது அந்த நாட்டில் ஒரு புரட்சி உருவாகும் என்பது நிதர்சனமான உண்மை. போர் நடைபெற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் இராணுவத் தரப்பு பாலியல் ரீதியாகவே அந்தப் போரை முன்னெடுத்திருக்கிறது எனலாம்.
இவ்வாறான சூழ்நிலையில் தான் ஒரு இனம் ஒடுக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் இந்நாட்டில் இடம்பெறக் காரண மாக அமைந்திருக்கிறது. செய்த தவறுகளை மீண்டும் செய்வதன் ஊடாக தொடர் வன்முறைகளையே சந்திக்க நேரிடும். ஆகவே நிதா னமாக அரசியல் களங்களை நகர்த்திச் செல்லவேண்டும். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெறவிருக்கிறது. இந்த பொதுத்தேர்தலில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை எந்த அணி தக்கவைத்துக்கொள்கிறதோ அவர்களே ஆட்சியமைக்கப் போகிறார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரை மத இன தேசிய வாதங்களை முன்னிலைப்படுத்தி இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளினால் கோட்டாபய அவர்கள் வெற்றி பெற்றிருந்தார். அரசியல் கால நீரோட்டத்தில் எதுவும் நடக்கலாம்.
போர் – சமாதானம் இந்த இரண்டும் சமநிலைகளைக் கொண்டிருக்கின்ற போதுதான் ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சமூகம் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு அணி அந்த நாட்டுக்குள் செயலிழக்கப்படு மாகவிருந்தால் அந் நிய நாடுகளினுடைய தலை யீட்டுடன் போர் விஸ்தரிக் கப்படும். அதன் ஊடாக அந்நிய நாடுகள் அந்நாட்டுக்குள் புகுந்து தமது அராஜக அரசி யலை நடத்துவார்கள். தமக்குச் சாதகமான இலாபத்துடன் இயங்குவார்கள். தமக்கான சாதகம் அமையாவிட்டால் குறித்த நாட்டை பழிவாங்கும் அரசியலுக்குள் இட்டுச் செல்வார்கள். இந்த பழிவாங்கும் அரசியலை தவிர்த்துக் கொள்வதற்காகவே சர்வதேச நாடுகளின் அணுகுமுறைகளை குறித்த அரசியல் தலைமைகள் அதனை சரி என்று ஏற்று தமது அரசியல் நகர்வை நகர்த்திச் செல்கின்றார்கள்.
தமிழ் மக்களுடைய போராட்ட வரலாறு என்பது நீண்டது. இதனை அடியோடு ஒழித்துவிடவேண்டும் என்பதில் பல தரப்புக்களும் கங்கணம் கட்டி நிற்கின்றன. நேர்மையான வழியில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சிங்களத் தலைமைகள் தவறிவிட்டன என்றே கூறவேண்டும். அந்த ஏமாற்று அரசியலுக்குள் சிக்குண்டவர்களாகவே இவர்கள் செயற்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பொறுத்தவரை இந்தியாவின் அனுசரனையின்றி தமக்கான தீர்வு கிடைக்காது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அண்மையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்த ஒரு விடயம் என்னவென்றால், தமிழ் மக்களுக்கான தீர்வு மலர்ந்தே தீரும். அது மட்டுமன்றி நாங்கள் இந்தியா நாட்டை மீறி அதற்கான முடிவினை பெற்றுக்கொள்வோம். இனியும் பொறுக்க முடியாது. பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டோம். விடுதலைப்புலிகளின் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டதில் இந்திய அரசும், இலங்கை அரசும் திருப்தியடைந்து கொள்ளலாம். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள நாம் அரசி யல் ரீதியான போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தார். இவரு டைய கருத்துக்கள் வெறும் கருத்துக்களாகவே இருக்கின்ற னவே தவிர ஒரு முன்னேற்றகரமான நிலையையும் அடையவில்லை. அவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்களுக்கானதொரு தீர்வு ஒரு கனவாகவே தொடர்ந்து செல்கின்றது.

வட-கிழக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழி களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுப்பாராக விருந்தால் அவரது ஆட்சி தொடர்ந்;தும் இந்நாட்டில் தக்கவைக்கப்படும். அவ்வாறு இடம்பெறவில்லையெனில் எதிர்க் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என்பன இணைந்து இவரது ஆட்சியைக் குழப்பு வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவினுடைய ஆட்சியானது தொடர்ந்து செல்ல வேண்டு மாகவிருந்தால் வடகிழக்கு இணைந்த ஒரு தமிழர் தாயகத்தை உருவாக்கிக் கொடுப்பதிலும், கடத்தப்பட்டு காணாமல் போனோருக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும், அரசியல் கைதி களின் விடுதலை போன்ற விடயங்களுக்கு அவர் ஒரு முழுமையானத் தீர்வினை வழங்கினால் நிச்சயமாக தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பார்கள் என்கின்ற ஒரு விடயத்தினையும் நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

(இரணியன்)

SHARE