தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த வெற்றிடம் நல்லாட்சி அரசாங்கம் உருவாகிய சில மாதங்களிலேயே தென்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இப்போது அது, பளிச்சென பிகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.
மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழரசுக் கட்சியும், ஆயுதமேந்திப் போராடி, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய டெலோ, புளொட் ஆகிய கட்சிகளும் இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. தமிழ்க்காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டு மிதவாத கட்சிகளும் இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்புக்கு வெளியில் அந்தக் கட்சிகள் இரண்டும் செயற்பட்டு வருகின்றன.
எதிர்ப்பு அரசியலில் தீவிரமாகச் செற்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இப்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் ஓர் அரசியல் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை முதன்மைக் கட்சியாகவும், தலைமைக் கட்சியாகவும் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஏனைய கட்சிகளுடன் அந்தக் கட்சி உள்ளக ஜனநாயக வழிமுறைகளில் நெருங்கிச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
இதனால், அந்தத் தலைமையிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. கூட்டமைப்புக்குள் அந்தக் கட்சி சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கின்றது.. ஏனைய கட்சிகளை அது சமமமாக நடத்துவதில்லை என்பது போன்ற அதிருப்திகளும், குற்றச்சாட்டுக்களும் தமிழரசுக் கட்சி மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
அதிருப்தியான உணர்வுகளைக் கொண்டிருக்கின்ற போதிலும், ஈபிஆர்எல்எவ் தவிர்த்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஏனைய கட்சிகள் அதுபற்றி வெளிப்படையாக கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டங்களிலோ அல்லது கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டங்களிலோ கருத்துக்களை முன் வைப்பதில்லை. ஈபிஆர்எல்எவ் கட்சி மாத்திரமே வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றது.
இதனால், ஈபிஆர்எல்எவ் கட்சியே கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கட்சி என்ற கண்டனத்திற்கும் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றது. இந்தக் கட்சியின் கருத்துக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகத் திட்டமிட்டு முன்வைக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது, தமிழரசுக் கட்சி அந்தக் கோரிக்கையை உள்ளுர விரும்பியிருக்கவில்லை.
எனவே, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய அந்தக் கட்சி, பதிவு கோரிக்கையை பெரிதுபடுத்தாமல், அப்போதைக்கு அப்போது சில சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. காலம் கடந்து கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவிழந்து போகவில்லை. அது வேகம் பெறத் தொடங்கியதையடுத்து, இலைமறை காயைப் போல கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தனது நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தது.
கூட்டமைப்பை ஒரு வலுவான அரசியல் கட்சியாக உறுதியான கட்டமைப்புக்களுடன் கட்டியெழுப்பி, அதனை தேர்தல் திணைக்களத்தில் தனியானதொரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், அந்த கோரிக்கை, கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியினால் உரிய முறையில் கையாளப்படவில்லை. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
மாற்றுத்தலைமைக்கான சிந்தனை
கூட்டமைப்பை தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உரிய முறையில் கவனிக்கப்படாததையடுத்து, கூட்டமைப்புக்கான மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை முன்னைய ஆட்சிக் காலத்திலேயே உருவாகியிருந்தது.
அது மட்டுமல்லாமல், தேர்தல் காலத்தில் ஆசனப் பங்கீடுகளில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமை, கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்திய போக்கு, பொதுப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏனைய கட்சிகளுடன் உள்ளார்ந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளாத போக்கு என்பவற்றினால் கூட்டமைப்புத் தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அந்த அதிருப்தியே மாற்றுத்தலைமை குறித்த சிந்தனைக்கு வித்திட்டிருந்தது. ஆனாலும், மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணியில், கூட்டமைப்பின் தலைமை நிபந்தனையற்ற ஆதரவை வழங்க உத்தேசித்திருந்தது. ஆனாலும், ஏனைய கட்சிகள் அதனை முழுமையாக விரும்பியிராத நிலையிலேயே புதிய அரசாங்கத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவளிக்கப்பட்டிருக்கின்றது. புதிய அரசாங்கத்தை உருவாக்கிய சிற்பிகளாகிய ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அப்போதைய ஜனாதிபதி தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கின்றது.
அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்காக அவர்கள் உறுதியாகச் செயற்படுவார்கள் என்று தலைவர் இரா.சம்பந்தன் அப்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையையும் அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்ததா இல்லையா என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவருடைய உறுதியான எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லையே என ஏனைய தமிழ்க் கட்சியினரும், தமிழ் மக்களும் ஏமாற்றத்தில் மூழ்கியிருந்தனர்.
தொடர்ந்து, தேவைக்கு அதிகமான அளவில் இராணுவத்தினர், தொடர்ந்து வடக்கில் நிலைநிறுத்தப்டப்டிருந்தமை, இராணுவத்தின் பிடியில் இருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை, இதனால், இடம்பெயர்ந்த நிலையில் நீண்ட காலமாக சொந்த இடங்களில் மீள் குடியேற முடியாமல் இருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தவிக்க நேர்ந்துள்ளமை, உத்தரவாதம் அளித்தும்கூட, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கோரிக்கைகளுக்கு பொறுப்பு கூறாமை போன்ற எரியும் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் நல்லாட்சி அரசாங்கத்தில் தீர்வு காணப்படாமையும் கூட்டமைப்பின் தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தியும் ஏமாற்றமும்
முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாமல், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அவலங்களையும், அவர்களின் மன ஓட்டங்களையும் புரிந்து கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. புதிய அரசாங்கத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திடமிருந்த காணிகளின் விடுவிப்பு, இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்வார்கள் என்று கால எல்லை குறித்து ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேனவினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் களத்தில் வேட்பாளராக இருந்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தில் காணப்பட்டிருந்த காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால அளித்த வாக்குறுதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள், வீதியில் இறங்கி நடத்தி வருகின்ற போராட்டம், கேப்பாப்பிலவில் இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக, படை முகாம் எதிரில் இடம்பெயர்ந்த மக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் என்பவற்றுக்கு உரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துவிட்டது.
போராட்டத்திற்கான தலைமையை வழங்காத போதிலும், அந்தப் பிரச்சினை குறித்து ஆக்கபூர்வமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கத்துடன் நல்லிணக்க முறையில் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டதே என்ற அந்த மக்கள் கொண்டிருக்கின்ற ஏமாற்றமும்கூட, மறைமுகமாக மாற்றுத்தலைமைக்கான சிந்தனையைத் தூண்டிவிட்டுள்ளது.
அதேவேளை, மதச்சார்பற்ற நிலையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஸ்டி ஆட்சி முறையை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வு என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனமாகும்.
ஆனால், இப்போது புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே மேன்மையான இடமளிக்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்க மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். இவ்வாறு பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர், அத்தகைய முதன்மை இடத்தை தலைவர் சம்பந்தன் எதிர்க்கமாட்டார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்.
ஒற்றையாட்சியும். பௌத்த மதத்திற்கு மேன்மையான இடமும் புதிய அரசியலமைப்பில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதிபட கூறியிருக்கின்றார்.
இதனால், தேர்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த அரசியல் யதார்த்தத்தை அவர்களின் முன்னால் ஏற்றுக்கொள்வதற்குப் பின்னடித்து வருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள், அது தொடர்பான பேச்சுக்கள் – கலந்துரையாடல்கள் முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதான தோற்றத்தையே கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தியிருந்தது.
வளர்ச்சியை நோக்கிய மாற்றம்
புதிய அரசியலமைப்புக்கு பௌத்த மகாநாயக்கர்கள் பகிரங்கமாக எதிர்ப்;பு வெளியிட்டதையடுத்து, ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கான முதலிடம் என்பன குறித்து, அரச தலைவர்கள் பௌத்த சிங்கள தீவிரவாதிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதுவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதுடன், மாற்றுத் தலைமைக்கான சிந்தனைக்கு உரமேற்றியிருக்கின்றது.
இவ்வாறு பல கோணங்களிலும் பல விடயங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தி மேலோங்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்த போதிலும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே, மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கான செயற்பாட்டை முதன்முறையாக வீதிக்கு இழுத்து வந்திருந்தது.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தீவிரமாக முன்னெடுக்கப்படுமேயானால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று பங்காளிக்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க நேரிடும் என்று அந்த மூன்று கட்சிகளும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்வதற்கு மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை போக்கே அடிப்படையாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும்.
அதேநேரம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வடமாகாண சபை உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியினர், அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தலைமையில் ஆளுனரிடம் கையளித்ததையடுத்து, இளைஞர் சமூகம் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும், முதலiமைச்சருக்கு ஆதரவாகவும் கிளர்ந்தெழுந்து பேரணி நடத்தியிருந்தது.
பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று யாழ் நகரம் முழுமையாகக் கடையடைப்பு செய்து நாளாந்த நடவடிக்கைகளைப் புறக்கணித்திருந்தது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்கு எதிரான உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையே தூண்டுகோலாக அமைந்திருந்தது என்று கருதுவதற்கும் இடமுண்டு.
மாற்றுத்தலைமைக்கான சிந்தனை என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல் அரசியல் ரீதியான வலு குறைந்த போக்கின் காரணமாகவே எழுந்துள்ளது. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றத்தைக் காணவில்லை. மாறாக பிரச்சினைகள் அதிகரிக்கின்ற ஒரு போக்கே தோற்றம் பெற்றிருக்கின்றது.
வடக்கும் கிழக்கும் இணைந்த தமி;ழர் தாயகம் பற்றி தேர்தலின்போது கொள்கை விளக்கப் பிரகடனம் செய்துள்ள போதிலும், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து கூட்டமைப்பு தீவிர கவனம் செலுத்தவில்லை.
நெடுங்கேணி, வவுனியா, செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் அல்லது சிங்களக் கிராமங்களின் உள்ளடக்கமானது, இந்தப் பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது பிரதேச சபைகளில் சிங்களப் பிரதிநித்துவத்தை உட்புகுத்துவதற்கான முயற்சியாகும்.
வவுனியா மாவட்டத்தில் தமிழ்;ப் பிரதேச செலயகப் பிரிவுகளில் சிங்களக் கிராமங்களை உள்ளடக்குவதன் ஊடாக, வன்னி தேர்தல் தொகுதியில் அல்லது, வவுனியா தேர்தல் தொகுதியில் வரும் பொதுத் தேர்தல்களில், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
இந்த மாவட்டத்தில் ஏற்கனவே சிங்கள மக்களுக்கென தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவு இருக்கின்றது. அது முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே உரியதாகும். அந்தப் பிரதேச சபையில் சிங்கள பிரதிநிதிகளே அங்கம் வகிக்கின்றார்கள். அவ்வாறு இருக்கத்தக்கதாக இநத மாவட்டத்தின் ஏனைய மூன்று தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காகவே, சிங்கள மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் செயற்படுகின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் நல்லிணக்க அடிப்படையில் இணைந்து செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தமிழர் பிரதேசங்களில் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளை அமைப்பதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்;த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர்.
கூட்டமைப்பின் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் விளைவாக எழுந்துள்ள மாற்றுத் தலைமை குறித்த சிந்தனையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான ஆதங்கத்தின் வெளிப்பாடே அல்லாமல், கூட்டமைப்பை இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் தலைமையையும் இல்லாமல் செய்வதை எவரும் இலக்காகக் கொள்ளவில்லை. கூட்டமைப்பம் கூட்டமைப்பின் தiலைமயும் இறுக்கமான ஒரு கட்டமைப்பாக வினைத்திறன் மிக்க வகையில் செயலாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தையே இந்த அதிருப்தி உணர்வுகளும், மாற்றுத் தலைமைக்கான சிந்தனையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
எனவேதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன என்ற கேள்வியும், அதனையொட்டிய சிந்தனையும் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.