நாடாளுமன்றத்தில் புலிப் பயங்கரவாதி எனத் தூற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தேர்தல் காலம் வந்ததும் புலி வீரர்கள், விடுதலைப் போராளிகள்

506

 

ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய இரா. சம்பந்தன் வரையில் மக்களின் மென் பங்குபற்றலுடன் கூடிய அவ்வகை அரசியலை முன்னெடுத்த தமிழ் தலைவர்கள் பலரை நினைவுகூர முடியும். அவ்வாறான மென்போக்கு கொண்ட தலைமைகளில் காணப்பட்ட குறை அல்லது பலவீனம் அல்லது சுயநலம் தமிழர்கள் மொத்த அரசியலையும் அங்கவீனப்படுத்தியிருக்கின்றது. தமிழர் அரசியல் வரலாற்றில் குடிமூழ்கிப் போகும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கியிருக்கின்றது. ஆங்கிலேயரின் அவையில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்த சேர். பொன். இராமநாதன் தமிழர் அரசியல் விடயத்தில் ஆழமான கரிசனை கொண்டிருந்தவராகக் காணப்பட்டிருந்தால் இன்றைய இனப்பிரச்சினை அன்றே தவிர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுவோரும் உண்டு. இராமநாதன் போன்று வாய்ப்புக்களைத் தவறவிட்ட தலைவர்களது அரசியல் கடந்து நீண்ட காலம் ஆகிவிட்டதனால், தற்போது தமிழர்களின் அரசியல் தலைவிதியை எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், அதன் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழர்களை எங்கே கொண்டு செல்வார்கள் எனப் பார்ப்பதே காலப் பொருத்தமானதாகும்.

கூட்டமைப்பின் உருவாக்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஒக்ரோபர் மாதம், 20ஆம் திகதி, 2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. தமிழ் தேசிய அரசியலை ‘சிக்கலில்லாமல்’ தம்முடன் தொடர்ந்தும் கொண்டு செல்லக்கூடிய சில கட்சிகளை இணைத்து தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி ஆகிய அரசியல் கொள்கைகளைப் பிரதானப்படுத்தி, அவற்றை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டமைப்பாகவே புலிகள் அதனை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டமைப்பின் மூலக் கொள்கை தமிழ் தேசியமாக இருந்தபடியால், பெயரின் முன்னொட்டில் தமிழ் தேசியம் இணைத்துக் கொள்ளப்பட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிற முழுப்பெயர் வடிவத்தைப் பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான சின்னம் எது என்கிற குழப்பம் விடுதலைப் புலிகளுக்கு சில நாட்கள் இருந்தது. முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் பிரேரிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அதிருப்தியால் உதயசூரியன் நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீடு பரிந்துரைக்கப்பட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புலிகள் கூட்டமைப்பை ஏன் உருவாக்கினர்?

தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் 2002ஆம் ஆண்டு பொற்காலமாகும். புலிகள் நடத்திய 3 நாள் போரில் உலகமே அதிசயித்துப் பார்க்குமளவிலான வெற்றியை 2000ஆம் ஆண்டுகளில் பெற்றார்கள். இந்தப் போரியல் வெற்றியுடன் இலங்கை அரச படைகள் மற்றும் புலிகளுக்கிடையிலான படைவலு சமநிலைப்பட்டது என அப்போதைய இராணுவ ஆய்வாளர்கள் எழுதிவந்தார்கள். இதேகாலப்பகுதியில் ஓர் அரசின் படைகளுக்கு சமதையான கடல் இறைமையையும் புலிகள் பெற்றிருந்தனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அவ்வாறான பலத்தைப் பெறுவதென்பது, அதுவும் புலிகள் போன்ற கொரில்லா போராட்ட அமைப்பு பெறுவதென்பது சர்வதேச படையியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய விடயமாக இருந்தது.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் படையியல் முன்னேற்றம் ஆச்சரியமானதாக இருப்பினும், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு உருவாக்கப்பட்டிருந்த இமேஜ் மிகமோசமானதாக இருந்தது. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என்கிற வகைக்குள் புலிகள் உள்ளடக்கப்பட்டு நோக்கப்பட்டார்கள். இந்த இமேஜை உருவாக்கிக் கொடுத்தவர்கள் யாரெனில், தமிழ் ஜனநாயக அரசியல் சக்திகள், அதாவது, தமிழ் மென் அரசியல் சக்திகள் என அறியப்பட்டவர்கள்தான். மேற்கு நாடுகள் பல புலிகளைத் தடைசெய்தமைக்குக் கூட இந்த மென் சக்திகள் செய்த பரப்புரைதான் காரணம்.

2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பகுதிகள் (வடக்கு – கிழக்கு) இருவகை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருந்தன. ஒன்று இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டுப் பகுதி, மற்றொன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலங்கை அரசின் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவில்லை. கிட்டத்தட்ட வடக்கு – கிழக்கில் 30 வருட காலம் இதே நிலைமைதான். இலங்கை என்ற ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் (தனித் தமிழீழ அரசாக, நாடாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. நிதிசார் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசையே நம்பியிருக்க வேண்டியிருந்தமையால் தேசம் என்று குறிப்பிடுவதே பொருத்தம் எனக் கருதுகிறேன்) அரசியல், படையியல், குடியியல், பொருளாதாரமென வலுவான கட்டமைப்புக்களுடன் பிரிந்து நின்ற காலம் அதுவாகும். இதே காலப்பகுதியில் இலங்கை அரசு, அதன் நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவம் மற்றும் இலங்கையிலிருக்கும் ஏனைய கட்சிகளின் அரசியல் பற்றி அறிந்துகொள்ளாத, அதில் விருப்புக்கொள்ளாத தலைமுறையொன்றும் உருவாகியது.

இவ்வாறு இருவேறு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாகியிருந்தமையால் இலங்கை என்ற நாட்டுக்குப் பொதுவாக நடக்கும் எந்தத் தேர்தல்களும் 2004ஆம் வரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நெருங்கவில்லை. இலங்கை அரசினால் நடத்தப்படும் தேர்தல்களில் புலிகள் அக்கறை காட்டாமல் இருந்தமையும், அதனைப் புறக்கணித்து வந்தமையும் இதற்குப் பிரதான காரணம். பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதே புலிகளின் இறுதி இலட்சியமாக இருந்ததாலும், இலங்கையின் ஜனநாயக வழி மென் அரசியலில் தமிழர்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டு இருந்தமையாலும் புலிகள் இதனை விரும்பாதிருந்தனர். எனவே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குரிய சில தேர்தல்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நடந்தன. ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு செயற்பட்ட தமிழ் தலைமைகள் இதனை சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டன. உதாரணமாக, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை 1980 ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வவுனியாவில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஈ.பி.டி.பி அதிக செல்வாக்குப் பெற்றிருந்ததோடு, பிரதேச சபை தலைவராகவும் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஒருவரே தெரிவுசெய்யப்பட்டார். யாழ். மாவட்டத்துக்கான பொதுத் தேர்தல் நெடுந்தீவில் நடந்தது. அங்கிருந்தே யாழ். மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இந்தத் தேர்தல்களில் மிகக் குறைந்தளவிலான வாக்குகளுடன் முழு யாழ். மாவட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. இப்படியே புலிகளின் கட்டுப்பாட்டுக்குரிய அரசியல், நிர்வாக நடைமுறைகளை இலங்கை அரசு மேற்கொண்டது.

வடக்கின் மிக முக்கிய அரச கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வவுனியாவும், யாழ்ப்பாணமும் இராணுவத்தின் வசமிருந்தாலும், புளெட், ரெலோ, ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஆயுதக் குழுக்களைக் கொண்டே அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு செயற்பட்டு வந்த ஆயுதக் குழுக்களில் இருந்தும், தமிழரசுக் கட்சியிலிருந்தும் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்பதை விட புலிகளுக்கு எதிரான சர்வதேச பரப்புரைக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு இலங்கை அரசு மேற்கொண்ட தேர்தல்களுக்கும் ஆயுதப் போராட்ட காலத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். எனவே, இந்தக் காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த தமிழர் பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தலைமைகளும் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவான தமிழ் தலைமைகள் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கக்கூடியவர்களாக இருந்தனர். அதற்குப் பொருத்தமான தமிழ் ஜனநாயக அரசியல்வாதிகளையும், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த பிற இயங்கங்களின் தலைவர்களையும், செயலாளர்களையும் இலங்கை அரசு தெரிவுசெய்து இதற்குப் பயன்படுத்தியது. ஜனநாயக வழிமுறையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களாக இந்தத் தலைமைகள் இருந்தாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச பரப்புரையை மேற்கொள்ளவே இவர்கள் இலங்கை அரசினால் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்களும், வெளிநாடுகளுக்கும் சென்று, நாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஜனநாயக வழிமுறையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புலிகள் பயங்கரவாதிகள், மிகமோசமான வன்முறையாளர்கள், வடக்கு – கிழக்கில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனப் புலிகளுக்கு எதிரான பெரும் பரப்புரையைச் செய்தனர். இதனால், புலிகளின் ஆயுதப் போராட்டம் சர்வதேச ரீதியில் மிலேச்சத்தனமானது என்ற முத்திரையிடலுக்குள்ளானது. எனவே, இந்த வகை ஜனநாயகத் தமிழ் தலைமைகள் புலிகளின் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டவர்களாகவும், கொலைப் பட்டியலுக்கு உரியவர்களாகவும் இருந்தனர்.

இதனை இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அடிக்கடி நினைவுகூர்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். “புலிகளின் கொலைப் பட்டியிலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இருந்தன” என அவர் குறிப்பிடுவார். எனவேதான் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா. சம்பந்தன் அரசுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகவும், விசுவாசமுள்ளவராகவும் செயற்பட்டார். இதனால், அமைச்சரவை அந்தஸ்துக்குரிய வசதி வாய்ப்புக்களைக் கூட இலங்கை அரசிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார். உதாரணமாக, இலங்கை அரசியலில் மிகக் கணிசமான முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் குண்டுதுளைக்காத வாகனத்தை இரா. சம்பந்தன் அப்போது பெற்றிருந்தார் என்ற கதை கூட உண்டு.

இவ்வாறு புலிகளுக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட தீவிரமான பரப்புரையால் சர்வதேச ரீதியில் புலிகள் தலைகுனிவிற்குள்ளானார்கள். போர்முனையில் புலிகள், உலகமே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டினாலும், தமது கொள்கை நிலைப்பாட்டையும், ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தையும் சர்வதேசத்திடம் முன்வைத்து, அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்தப் பரப்புரைகள் பெரும் தடையாயிருந்தன. அப்போதுதான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பலத்தைப் புலிகள் உணர்ந்துகொண்டார்கள். எனவேதான் தமிழ் ஜனநாயகத் தலைமைகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமது குரலாக அவர்களை மாற்ற வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இதற்கு மேலதிக வலுவாக இன்னொரு காரணத்தையும் இணைத்துக் கொள்ளலாம். 2000ஆம் ஆண்டுகளில் புலிகள் கண்ட போரியல் வெற்றியோடு, அவர்கள் ஆயுதப் போரில் மட்டுமே அதிக விருப்பு கொண்டிருக்கிறார்கள் எனவும், இனப்பிரச்சினையை வன்முறை வழியில் நின்றே தீர்க்க முயற்சிக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், தமிழர்களின் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி உரிமைகள் பற்றி இலங்கை நாடாளுமன்றத்திலும் குரலெழுப்ப வேண்டிய தேவையும் இருந்தது. எனவே, புலிகள் ஜனநாயக வழியிலும் தமது நிலைப்பாட்டை விளக்குவதற்கு, தமது பூரண கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய அரசியல்வாதிகளை இணைத்துக் கூட்டமைப்பொன்றை உருவாக்கினார்கள். இதில் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டவர்கள் தம் பாதுகாப்புக்காகவேணும் இணைந்துகொண்டார்கள். கூட்டமைப்பில் இணைந்துகொண்ட அனைவரும் தமிழர் அரசியல் போராட்டத்தின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே என்பதை ஏற்றுக்கொண்டுதான் கிளிநொச்சிக்கு வந்துபோனார்கள். ஆனால், சந்தர்ப்பம் பார்த்து உள்ளே கனன்றது புலியெதிர் நெருப்பு.

புலிகள் கூட்டமைப்புடன் கொண்டிருந்த உறவு

2004ஆம் ஆண்டில் புலிகள் முதலாவது தேர்தலை எதிர்கொண்டார்கள். அதற்காகப் புலிகளால் அடையாளம் காணப்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகக் களமிறக்கப்பட்டார்கள். வெளியில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிற பிம்பத்தைக் காட்டினாலும், புலிகள் கூட்டமைப்பை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கையாண்டார்கள். ஒன்று பழையவர்கள், மற்றையது புதியவர்கள். பழையவர்களை சற்றுத் தள்ளியே வைத்திருந்தனர். எச்சரிக்கையோடும், சந்தேகத்தோடும் அணுகினார். ஏனெனில், பழையவர்களின் கடந்தகால அரசியல் பற்றி புலிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தமிழ் தேசியத்திலும், புலிகளின் கொள்கையிலும் பற்றுறுதியுடன் செயற்படுகின்ற தொகுதியினரைப் புதியவர்கள் அணியில் வைத்துக் கொண்டனர். கூட்டமைப்புக்குள் இருந்த இந்தப் புதியவர்கள் அணியே புலிகளின் நம்பிக்கைக்குப் பத்திரமாகச் செயற்பட்டது. பழையவர்களின் கொழும்பு, இந்திய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதுடன், புலிகளுக்கான அறிக்கையிடலையும் புதியவர்கள் செய்தனர். எனவே, பழையவர்களுக்குப் புதியவர்கள் எப்போதும் சவாலானவர்களாகவும், கழற்றிவிட வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஆனால், புலிகளுக்குப் பழையவர்கள் எப்போதும் சவாலானவர்களாகவும், கழற்றிவிடப்பட வேண்டியவர்களாகவும் இருந்தனர். இந்த மீள் முரணோடுதான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான உறவைப் பேணினார்கள். ஆயினும், புலிகள் பலமாக இருக்கும் வரை கிளிநொச்சியின் குரலாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் ஒலித்தது. போராளிகள் தயாரித்த கிளிநொச்சியின் அறிக்கையே நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கூட்டமைப்பைப் புலிகள் தந்திரமாகக் கையாண்டமையும், கூட்டமைப்பு தொடர்பில் புலிகள் கொண்டிருந்த அபிப்பிராயமும் புலிகளுக்குள் மட்டுமே இருந்த சங்கதிகள். வெளித்தோற்றத்திற்குப் புலிகளின் கொள்கைகளை இலங்கை நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்கிலும் ஓங்கி ஒலிக்கச் செய்பவர்களாகக் கூட்டமைப்பினர் நோக்கிய பிம்பம் உருவாகியது. மக்களின் பார்வையில் புலிகளின் நேரடி அரசியல் பிரிவாகவே கூட்டமைப்பு தெரிந்தது. இன்றும் சிறைகளில் வாடும் சில முன்னாள் போராளிகள் “சம்பந்தன் ஐயா எங்களின் இன்னொரு தலைவர்” என்று கூறுவதற்கு இந்தக் காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது புலிகள் உருவாக்கிக்கொடுத்த அட்டகாசமான விளம்பரங்களே காரணம்.

இறுதிப் போர்க்கால கூட்டமைப்பு

2008ஆம் ஆண்டுடன் போர் உச்சம்பெற, கிளிநொச்சிக்கும் அதாவது, புலிகளுக்கும் இடையிலான தொடர்பின் வலு குறைந்தது. கிளிநொச்சி இராணுத்திடம் விழ புலிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட, 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மூண்ட போர் தீ, எரிந்து, கருகி, சாம்பலாகும் வரை சாக்குப்போக்கு அரசியலை முன்னெடுத்தார் இரா. சம்பந்தர். செத்து வீழ்ந்த தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளுக்குக் கைகொடுக்கவுமான எவ்வித நடவடிக்கைகளையும் சம்பந்தன் மேற்கொள்ளவில்லை. புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே போர் நிறுத்தம் பற்றி தான் பேச முடியும் என்று சொல்லிவிட்டு வழமைபோல கண்ணை மூடிக்கொண்டார். இரா. சம்பந்தன் கண்திறப்பதற்குள் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் முர்ச்சையாக எஞ்சிய தமிழர்கள் வவுனியாவுக்கு சாய்த்துவரப்பட்டார்கள். போர் முடிந்ததும், “புலிகள் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே அழிந்துபோனார்கள்” என சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் இரண்டாம் காலம் (2010)

இவ்வாறாகவே இரா. சம்பந்தன் 2010இல் வெளியே வந்தார். வெளியே எனில், 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது இரண்டாம் காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாம் காலம் புலிகளோடு முடிவடைய, இரண்டாம் காலம் புலிகளற்ற அரசியல் வெளியில் ஆரம்பமானது. இந்தக் காலத்தில் 4 முக்கிய பணிகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிகழ்ச்சி நிரல்படுத்தினார்.

1ஆம் பணி

இரண்டாம் காலத்தைப் பொறுப்பெடுத்தவுடனேயே இரா. சம்பந்தன் செய்த முதல் பணி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தயாராயிருந்த புதியவர்களை வெற்றிகரமாக வெளியேற்றியமைதான். புலிகளுக்கு விசுவாசமான புதியவர்களுக்குப் பதிலாக இரா. சம்பந்தனுக்கு விசுவாசமான புதியவர்கள் அணி அந்த இடைவெளிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரா. சம்பந்தன் உருவாக்கிய புதியவர்கள் அணியைச் சேர்ந்தவர்களின் முதல் தகுதி தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அத்துடன், தமிழரசுக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், அதில் திழைத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.

2 ஆம் பணி

இரண்டாவது பணியாக, புலிகள் விட்டுச் சென்ற ஏகப்பிரதிநித்துவ இடைவெளியை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்படியே சுவீகரித்துக் கொண்டது. ஏகப் பிரதிநிதித்துவ அந்தஸ்த்தில் நின்றடியே, தமிழர்களைக் கொன்றொழித்த இரத்த வெடிலோடு வந்துநின்ற சரத் பொன்சேகாவுக்குத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு கோரியது. ‘தமிழ் சனங்கள் முட்டாள்கள்’ என்பதை 2010இல் மீளவும் நிரூபித்திக் காட்டினார்கள். 2009இல் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட மூல காரணமாக இருந்த ஒருவரை ஒரு வருடத்துக்குள் அவரால் காயப்படுத்தப்பட்ட அதே தமிழர்களைக் கொண்டு வாக்களிக்கச் செய்த பெருமையும் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும்.

3ஆம் பணி

மூன்றாவது பணி எதுவெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சிகளின் கூட்டை வலுவற்றதாக்கி, இரா. சம்பந்தன் தலைமை வகித்த தமிழரசுக் கட்சியை முதன்மை நிலைக்கு கொண்டு வருவதே ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீடு தமிழரசுக் கட்சியிடம் கடன் வாங்கியதாக இருந்தமையினால், அவ்வாறு தமிழரசுக் கட்சியை முதன்மை நிலைக்குக் கொண்டு வருவதில் பெரிய சிரமங்களும் இருக்கவில்லை. இரா. சம்பந்தனின் விசுவாசிகளாக இருந்த புதியவர்கள் இதற்கு உள்ளும் புறமுமாக உழைத்தனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகளுக்குள் தமிழரசுக் கட்சி மட்டும் மேலிருந்து கீழ் நோக்கி தீர்மானிக்கும் சக்தியாக மாறிவருவதை, அதற்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகள் விரும்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பிரதானி சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தில் அடிக்கடி கிளர்ந்தெழுந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என தமிழரசு கட்சி தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரிநின்றன. தமிழ் மக்களுக்கு விளக்கமற்ற கட்சி பதிவு விடயத்தைத் திட்டமிட்டே ஓரங்கட்டி வந்தார் இரா. சம்பந்தன்.

அதற்குப் பிரதான காரணம் இன்றிருக்கின்ற பெரும்பாலான தமிழர்களுக்கு, ‘வீடு’ என்ற அரசியல் குறியீட்டையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளால் உருவாக்கப்பட்டு, புலிகளின் நினைவு எச்சமாக மிஞ்சியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் சின்னமான வீடும் மட்டும்தான். அவர்களுக்கு கூட்டமைப்பென்பது தனியொரு கட்சி. வீடு கூட்டமைப்பின் சின்னம் என்றே அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு அறுந்த வரலாறு எல்லாம் சாதாரண வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கவில்லை. அதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் அச்சு ஊடகங்களுக்கு இருந்தது. ஆனால், அதனை எந்த ஊடகங்களின் நிகழ்ச்சிநிரலிலும் கூட்டமைப்பின் உண்மைதன்மையை வெளிப்படுத்தும் விடயம் உள்ளடங்கவில்லை. தமிழ் அச்சு ஊடகங்களின் சீழ் வடியும் அவலமான பக்கங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தி, அதிகாரமிக்க சக்தியாக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்கள் நடந்தாலும், இதுவரை அந்தக் கட்சி கூட்டமைப்பை விட்டு வெளியேற விரும்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடு வாக்கு கேட்டு மக்களிடம் வந்தால் இலகுவில் தோற்றுவிடுவோம் என்பதை அதன் தலைமைகள் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை மறக்கச் செய்து தமிழரசுக் கட்சியை ஆழப் பதிய வைக்க முடியும் என்பதில் அந்தக் கட்சியின் தலைமை அசையாத நம்பிக்கை கொண்டிக்கின்றது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

4ஆம் பணி

2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பணியாக அமைவது, கடந்த கால போராட்டங்கள், இழப்புகள், தியாகங்கள், சொத்திழப்புகள் அனைத்துக்குமான நீதி பெறுதலைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்கிற கோசத்தை தமிழ் தேசியத்தின் அரசியலாக்குவது. அதாவது, சர்வதேச ரீதியிலும், உள்ளக ரீதியிலும் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல் நடைமுறைகளைக் கைவிடுவது என்ற நிலைப்பாட்டுக்கு கூட்டமைப்பு வந்துள்ளதை கடந்த 4 வருட அவதானிப்புகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதனைப் பல்வேறு கிளையாகப் பிரித்து நோக்கலாம்.

முதலாவதாக, ஐக்கிய இலங்கை என்பதை கேள்விக்குபடுத்தும் அனைவரையும், அனைத்தையும் அரசியலிலிருந்தே ஓரங்கட்டும் பணியை மேற்கொள்கின்றனர். உதாரணமாகக் காணாமல் போனோர் விடயத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுவரும் அனந்தியை புறக்கணித்தமை, இனப்படுகொலை தொடர்பான விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் சிவாஜிலிங்கத்தைப் புறக்கணித்தமை, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் அவர் தொடர்பில் தமிழரசுக் கட்சியினரும், இரா.சம்பந்தனும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுக்களாக அமைவன.

சர்வதேச ரீதியில் இலங்கையைத் தண்டனைக்கு உட்டுபடுத்தும், தமிழர் சார்பில் நீதி கோரும் செயற்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செயற்றிட்டங்களையும் கூட்டமைப்பு செய்துவருகின்றது. போர் முடிந்த கையுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டத் தொடர்களில் தமிழர்கள் சார்பாகக் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் இருந்தபோதும் அதனைப் புறக்கணித்தது கூட்டமைப்பு. இதுகுறித்து கேள்விகேட்டவர்களிடம், நாடுகள் கூடி கலந்துரையாடி முடிவுகள் எடுக்கும் இடத்தில் ஒரு கட்சியினராகிய நாம் கலந்துகொண்டு எதுவும் செய்யமுடியாதென இலகுவாக விளக்கம் சொன்னார் சுமந்திரன். மிகவும் பலமான தரப்பொன்றினால் பாதிப்புக்குள்ளான ஒரு தரப்பு தனக்கு நீதி தேவைப்படின் அதனை நோக்கி போக வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட தரப்பை நோக்கி யாரும் ஓடிவரப்போவதில்லை என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்தத் தருணத்தில் கூட்டமைப்பு செயற்பட்டது.

இரண்டாம் முறையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியங்களைப் பதிவுசெய்யும்படி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியிருந்தது. போதியளவு சாட்சியங்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்துள்ளதாகவும், இனி யாரும் சாட்சியமளிக்கத் தேவையில்லை எனவும், அவ்வாறு சாட்சியமளிப்பது, சாட்சியாளர்களின் உயிருக்கு ஆபத்தானது எனவும் சுமந்திரன் அறிக்கைவிட்டார். ஆனால், தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் சாட்சியங்கள் பெறப்பட்டமைக்கோ, அவை ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கோ உரித்தான சான்றுகள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் நடக்கும் திட்டமிட்ட இனப்படுகொலை, காணாமல்போதல் சம்பவங்கள், இனச் சுத்திகரிப்பு, நில அபகரிப்பு, கலாசார சிதைப்பு உள்ளிட்டவை குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆதாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்ட கூட்டமைப்பினரிடம் இந்த விடயங்கள் குறித்த எவ்வித புள்ளிவிபரங்களும், அறிக்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தம் சுயமிழந்து சிங்கள தேசியத்துடன் இணைந்துபோக வேண்டும் என்பதற்கான தொடக்கத்தைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், சுமந்திரனும் தொடக்கிவைத்தார்கள். தமிழர்களின் தனித்துவ அடையாள நிலங்களுல் ஒன்றான யாழ்ப்பாணத்தில் வைத்தே, தமிழர்கள் நிராகரித்து வந்த சிங்கக் கொடியை ஏந்தினார் இரா. சம்பந்தன். அது தொடர்பிலான சர்ச்சைகள் எழுந்தபோது சிங்கக்கொடி தனக்கு விருப்பமான கொடி என விளக்கமும் அளித்தார். ‘முட்டாள் தமிழ் சனங்கள்’ அதனையும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதற்கு அடுத்ததாகத் தமிழர்கள் அன்று தொட்டு நிராகரித்து வந்த இலங்கையின் சுதந்திர தினத்தில் கலந்துகொண்டு, தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் பெரும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியது சம்பந்தர் – சுமந்திரன் கூட்டு. எந்தக் கொடியின் கீழ் சிங்கள பேரினவாதம் ஓரணியாகித் தமிழர்களை கொன்றொழித்ததோ அதைத் தூக்கிப் பிடித்துத் தங்களுக்குப் பிடித்த கொடி என்றனர். எந்த நாளில் சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுகூடி தமிழர்களை அழிப்பதற்கு உறுதிமொழியெடுத்துக் கங்கணம் கட்டி நின்றார்களோ, அந்த தினத்தில் சம்பந்தன் – சுமந்திரன் கலந்துகொண்டு இராஜதந்திரம் என்றனர். இவையனைத்தும் தமிழ் தேசியத்தைத் தலைமை தாங்குவதாக கூறிக்கொள்ளும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை மறக்கக் கூடாது.

சமகாலத்தின் இன்னொரு வேலைத்திட்டத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் புலம்பெயர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பு மிக அவசியமானது. தமிழர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுல் மிக முக்கிய இடத்தைப் புலம்பெயர் தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் தரப்பொன்றை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வருவதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேலைத்திட்டமாகவே முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் அனைத்துத் தமிழ் விரோத அரசியல் செயற்பாடுகளுக்கும் இராஜதந்திர முகம் கொடுத்துப் பார்க்கச் செய்வது, இவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கூட்டமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் இலகுவாகச் சொல்வதெனில், புலம்பெயர் தமிழர்களுக்கு ‘மண்டையைக் கழுவும்’ செயற்பாடுகளை கூட்டமைப்பும், அவர்களுக்குச் சார்பான இணையங்களும் மேற்கொண்டு வருகின்றன. இதனை மீறி சுயமான வழியில் சிந்தித்து செயற்படுபவர்களுக்கு சுமந்திரன் ‘புலம்பெயர் புலிவால்கள்’ என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவிக்கிறார்.

இவையனைத்தும் இலங்கை ஐக்கியத்தைப் பாதுகாத்து, பிளவுபடாத இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எனத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விளக்கம் வேறு அவ்வப்போது சொல்லப்படும்.

கூட்டமைப்பின் இராஜதந்திரம்

கூட்டமைப்பினர் தமிழர்களைக் கட்டிப்போடும் சொற்களில் மிகப் பிரதானமானது இராஜதந்திரம் என்பதாகும். ஆனால் கூட்டமைப்பில் இராஜதந்திரிகள் இருக்கின்றனரா? அப்படியாயின் அவர்கள் எவ்வகை இராஜதந்திரிகள்? இராஜதந்திரிகளாக செயற்படுமளவுக்கு அவர்கள் துறைசார்சார்ந்த கற்கைகள் எதிலாவது தோற்றியிருக்கிறார்களா?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் இல்லை.. இல்லைதான். இராஜதந்திரம் எனப்படுவது வாக்கு பெறுவதற்காக நடத்தப்படும் பரப்புரை மேடையல்ல. மக்களைக் கவர்வதற்காக வெளியிடப்படும் பத்திரிகை அறிக்கையுமல்ல. அதற்கென தனியான கற்றைகள் உண்டு. உலகளவில் அதற்கான பிரபல பல்கலைக்கழகங்களும், தனித்தனியான இராஜதந்திர வகைளும் இருக்கின்றன. இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழத்தில் சர்வதேச உறவுகள் குறித்த சான்றிதழ் கற்கை உண்டு. மற்றையது பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர நிலையம் என்ற ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து சான்றிதழ் கற்பித்தலை வழங்குகின்றன. இவற்றில் கூட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாராவது ஒருவர் கற்றுத் தேறியமைக்கு சான்றுகள் இல்லை. ஆனால், உலகளவில் அதிக கவனத்தைப் பெற்ற படிப்புகளுல் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் இருக்கின்றன. தமிழில் இந்தத் துறைகளைத் தெரிவுசெய்து படிப்பவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இனிவரும் காலத்துத் தலைமுறைகள்தான் இந்த மாதிரியான, மிகவும் அவசியமான துறைகளில் கல்வி கற்க முன்வரவேண்டும். தமிழர்களின் இராஜதந்திர மற்றும் சர்வதேச கற்கை குறித்த கல்வி அறிவு இப்படியிருக்க, கூட்டமைப்பினர் எங்கிருந்து இராஜதந்திரத்தைக் கற்றனர். எவ்வகை இராஜதந்திரத்தில் தேர்ச்சி பெற்றனர்? வெள்ளைத் தோல் அதிகாரிகளைத் தூதுவரலாயங்களில் சந்திப்பதும், கைகுலுக்குவதும் இராஜதந்திர நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. அது மாதிரியான சம்பவங்கள் அனேக இடங்களில் தகவல் பெறுதலுக்கும், அறிக்கை கையளித்தலுக்குமே நடக்கும்.

இதேபோல இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதற்கும் பெயர் இராஜதந்திரமல்ல. இந்தியாவின் சார்பில் நின்று பார்த்தால் அது இந்தியாவுக்கு இராஜதந்திரம். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை கேட்டு இயங்குவதற்குத் தமிழர்கள் எப்படி இராஜதந்திரம் என அர்த்தம் கொடுக்க முடியும். இந்தியாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தொண்டு நிறுவன பணி செய்வதற்கும், கூட்டமைப்பு செய்யும் அரசியலுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்க முடியும்?

பேரம்பேசும் சக்தி எனும் சொல்

நம் எதிர்த்தரப்பிடம் இருக்கும் ஒன்றை, நம்மிடமிருக்கும் பலமான ஒன்றை வைத்துப் பெறுவதற்காக முயற்சித்தலே பேரம்பேசுதல் ஆகும். அதாவது, “நான் இதைத்தாறன், நீ அதைத் தா” என்பதுதான். 2010க்குப் பின்னர் தமிழர்களிடம் இருக்கும் பேரம்பேசும் சக்திக்கான பொருள் வாக்குச் சீட்டுக்கள்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலமாக ஒருவகை பேரம்பேசுதலையும், ஜனாதிபதி தேர்தலின்போது தமிழர்களின் வாக்குகளைத் திரட்டி சிங்களத் தலைமைகளுக்குத் தாரைவார்க்கும்போது ஒரு வகை பேரம்பேசுதலையும் கைக்கொள்வது வழமை. வடக்கு கிழக்கிலிருந்து அதிகளவான உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்துக்கு தமிழர்கள் அனுப்பிய போதும், ஆள்பலத்தை வைத்து ஏதாவது பேரம்பேசல் இதுவரையில் இடம்பெற்றுள்ளதா? இல்லை.

இரண்டாவது, ஜனாதிபதி தேர்தலின்போது தமிழர்களின் வாக்குகளைத் திரட்டி சிங்கள ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுத்துப் பேரம்பேசுவது. இது ராஜபக்‌ஷவின் காலத்தில் சாத்தியமாகவில்லை. ஆனால், கடந்த ஆட்சி மாற்றத்தின்போது அருமையானதொரு அரசியல் சந்தர்ப்பம், தமிழ் மக்களின் வாக்குகளை முன்வைத்துப் பேரம்பேசுவதற்குக் கிடைத்தது. மைத்திரியா? மஹிந்தவா? என்ற போட்டி வருகையில் இரு தரப்பினருக்குமே தமிழர்களின் வாக்குள் அவசியப்பட்டன. அதனை இருவரும் வெளிப்படையாகவே கூறினார்கள். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித பேரம்பேசலையும் மேற்கொள்ளாது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, வாக்கு வீணடிப்பைச் செய்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் அரசியலில் செய்த தவறுகளுல் மிகப் பிரதானமானதாக இதைத்தான் குறிப்பிடலாம்.

புலிகள் தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாடு

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எவருமே விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்களோ, அவர்களின் கொள்கைகளின் மீது விசுவாசம் கொண்டவர்களோ அல்ல. நாடாளுமன்றத்தில் புலிப் பயங்கரவாதி எனத் தூற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தேர்தல் காலங்கள் வந்ததும் விடுதலைப் புலி வீரர்கள், விடுதலைப் போராளிகள் எனப் புகழ்பாடத் தொடங்கிவிடுவர். தேர்தலில் வெற்றி பெற்றதும் புலிகளும், அவர்களின் தலைவர் பிரபாகரனும் பயங்கரவாதிகளாகிவிடுவர். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் ஆகிய சொற்கள் வாக்குகளை அள்ளிக் குவிக்கும் அட்சய பாத்திரங்கள் மாத்திரமே. தேர்தல் காலங்களில் மட்டும் மிணுக்கி எடுத்தால் போதும்.

தமிழர் அரசியலில் இவ்வளவு பாடுபாதங்களையும் செய்துவிட்டு, இம்முறை மறுபடியும், தேர்தல் களத்தில் கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. அதிகளவான குழறுபடிகள், குழிபறிப்புக்கள், தமக்கிடையே போட்டுக்கொடுத்தல்கள், ஆசனத்துக்கான பரிமாறல்கள் என தேர்தல் கல்லாப்பெட்டி சலசலக்கிறது. இம்முறையும் அனேக புதுமுகங்கள். அதுவும் வியாபாரம், பாரிய தொழில் வைத்து நடத்துபவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் தேசியம் வியாபாரிகளின் கைகளுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதைக் கடந்த ஐந்து வருடத்தில் பார்த்துவிட்டோம். அதற்கு உதாரணமான புருஸர்கள் கூட்டமைப்பில் ஏற்கனவே இருக்கின்றனர். எனவே, அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்குத் தமிழ் தேசியம் பாரியளவிலான வியாபாரப் பண்டமாக மாறப்போகின்றது. தமிழ் தேசியம் மாபியாக்களின், வணிக கொள்ளையர்களின் உறைவிடமாக வடிவம் எடுக்கப்போகின்றது. அந்தக் கொள்ளையர்களைப் பாதுகாக்கும் சிவப்பு – மஞ்சள் குடையாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை மாற்றிக்கொள்ளப்போகிறது.

 

SHARE