அண்மையில் நடைபெற்ற கலை இலக்கிய முகாமொன்றில் பெண்ணியச் செயற்பாட்டாளரான பிரேமா ரேவதி அவர்கள், “பாலினமற்ற சொல்லடல்களை நோக்கி” எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கமான வரிவடிவம் கீழே உள்ளது. பெண்ணியம் எனும் சொல்லின் பொருளை, அதன் விரிவான தளங்களில் அறிமுகம் செய்யும் சிறப்பான உரை. படியுங்கள், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பாலினமற்ற செயல்பாடுகளை நோக்கிச் செல்லும் ஒரு சமூகம் தான் உலகின் அனைவருக்குமான விடியலை நோக்கிச் செல்லும் சமூகமாகவும், அது பற்றிய ஆய்வுகளை ஆக்கங்களைச் செய்யும் அறிவுச் சமூகம் தான் பூரண அறிவுத்தள ஆய்வுப் பார்வை கொண்ட அறிவுச் சமூகமாகவும் இருக்க முடியும். இது இந்திய துணைக் கண்டத்தில் சாதியற்ற அல்லது சாதி எதிர்ப்பு சொல்லடல்களுக்கும் பொருந்தும்.
எனினும் அத்தகைய ஒரு நிலையில் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோமோ என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டிவரும். எனவே பலினமற்ற சொல்லடலுக்காக பெண்ணியல் சொல்லாடல் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தாங்கள் பால் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை, நாங்க சாதிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என சொல்பவர்களின் சொல்லாடல்கள் அல்லது கருத்தியல் செயல்பாடுகள் பெரும்பாலும் பெண் நீக்கம் செய்யப்பட்ட சாதியை இன்விசிபிள் ஆக்குகிற சொல்லாடல்களாகவே இருக்கின்றன. அவை குறித்து நான் அதிகம் பேச எடுத்துக் கொள்ளவில்லை. எனெனில் அது ஒரு ஆத்திரமும் புலம்பலுமான எதிர் வினையாக மட்டுமே இருக்க முடியும். அந்த கோபமும் அயர்ச்சியும் தவிர்க்க முடியாதது என்றாலும் அவற்றை மீறி செயலாற்றுவதற்கான தேவையும் இருக்கிறது என்பதாலேயே அதை விடுத்து முன் செல்கிறேன். ஆனால் அது பற்றி ஆண்கள் பேசவேண்டும் என்று நான் எதிர்ப் பார்க்கிறேன். அதன் கயமையை அறிவு நாணயமற்ற தனத்தை சுட்டிக்காட்டுவது என்பது கூட ஒரு ஆழமான தீவிர (in the sense of serious and not extreme) சொல்லாடலை கட்டமைப்பதின் வாயிலாகவே சாத்தியம் என்று கருதுகிறேன்.
பெண்ணிய சொல்லாடல் என்பதே நம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பெண்களின் உடை பற்றியும் பெண்களின் உடல் காட்டும் ஆபாசத்தைப் பற்றிய மிகப் பிற்போக்குத்தனமான விவரணைகள் மற்றும் விவாதங்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது என்பதிலிருந்து தான் நாம் பெண்ணிய சொல்லாடல் நோக்கிய நமது பயணத்தை தொடங்க வேண்டியுள்ளது. ஆய்வுத் தளங்களில் இதற்கான விதிவிலக்குகள் இருக்கலாம். அதுகுறித்த முழுமையான வாசிப்பு எனக்கு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் திடீரென்று தோன்றியுள்ள lay அறிவுஜீவிகள் – இவர்கள் organic intellectuals க்கு எதிரான நிலையில் இருப்பவர்களாக நான் பார்க்கிறேன், இவர்களே உரத்த உரையாடல்களை உணர்வுமிகுந்து கொதிக்கும் வடிவத்தில் அழிக்கை செய்துவரும் நிலையில் தான் பெண்ணிய செயல்பாடுகளை – அது புனைவு உள்ளிட்ட எழுத்துப் பணிகளாக இருந்தாலும், வன்முறைகளுக்கு எதிரான செயல்பாடுகளாக இருந்தாலும், பெண்கள் கூடி தமக்குள் பகிர்ந்து கொள்வதற்க்கான வெளிகளை ஏற்படுத்திக் கொள்ளும் விசயங்களாக இருந்தாலும் – நாம் நடத்த வேண்டியுள்ளது. கருத்தியல் தளத்திலும் மேலதிக்கம் வேறு வகைகளில் நடத்தப்படுகிறது.
எது முக்கியம்? எது முதன்மை? எது முதன்மைக்குள் முக்கியம்? எது சரியான தருணம்? எப்போது அது எதிராளிகளுக்கு ஆதரவாகப் போகாது? எது புலம்பல்? எது மனித குல விடுதலை பற்றிய பொதுப் பார்வை கொண்டுள்ளது? போன்ற கேள்விகள் பெரும்பாலும் சாதி மற்றும் பாலினம் குறித்த சொல்லாடல்களின் மீதுதான் ஒரு குற்றசாட்டாக வைக்கப்படுகிறது.
இப்படியெல்லாம் சொல்வதன்மூலம் நான் பெண்ணிய செயல்பாடுகள் என்பவை ஏதோ ஒரு தனித்த பிரச்சனை என்றும் அதற்கு யாரும் இடமளிப்பதில்லை எனவும் புலம்புவதாக நினைக்க வேண்டாம். வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றோடு பெண்ணிய போராட்டமும் மிக முக்கியமான அளவில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்து இருக்கிறது என்ற புரிதலோடுதான் இதைக் கூறுகிறேன்.
வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல கோடிப் பெண்களின் பங்களிப்புக்கு என் செவ்வணக்கத்தை செலுத்திவிட்டு சமகால வரலாற்றிலிருந்து இதை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
சமகாலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்துள்ள சில முக்கியமான போராட்டங்களைப் பார்ப்போம்.
கூடங்குளம்
சுயசாதி மறுத்து திருமணம் செய்யும் இளைஞர்களின் கொலைகள் கூடங்குளம் பிரச்சனை அடிப்படையில் ஒரு வர்க்கப்போராடம் தான். உழைக்கும் மீனவ மக்கள் தாங்களின் உழைப்புக்கு ஆதாரமான கடல்வளத்தையும் அதனுடன் இணந்து இருக்கும் தங்கள் வாழிடத்தையும் (எங்கு வாழ்ந்தால் மட்டும் அவர்கள் தமது வேலையைச் செய்ய முடியுமோ அந்த வாழிடத்தை) காப்பாற்றிக் கொள்ள நடத்திய போராட்டம்.
கூடங்குளம் அனு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது வாழ்வாதாரத்தின் மீது உழைபாளிகளின் உரிமையைக் கோரும் வர்க்கப் போரட்டம் மட்டுமல்ல. அது எகாதிபத்தியங்களுக்கு எதிராக லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற மூன்றாம் உலக நாடுகளில் தீவிரமாக எழுந்துள்ள இயற்கை வளங்களை காப்பாற்றுவதற்கான, மொத்தத்தில் நாம் வாழும் அகிலத்தை காப்பாற்றுவதற்கான போராட்டமும் ஆகும்.
இயற்கை வளம் என்பது அரசுகளின் சொத்தல்ல அது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் சொத்து என்ற கருதுகோளை பாட்டாளி வர்க்க அரசுகளை அமைக்க யத்தனிக்கும் தம் திட்டத்தால் கட்சி சார் வர்க்கப் போராளிகன் எதிர்க்கலாம். அதை நாம் விவாதிக்கலாம். எனது வாதம் அது பற்றியது அல்ல.
நாம் போராட்டக் குழுவின் கோரிக்கையை நிலைப்பாட்டை எற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டலும், அந்த போராட்டமானது நாம் வாழும் காலத்தில் நடந்த ஒரு மகத்தான மக்கள் போராட்டம் என்பதை மறுக்க முடியாது.
இந்த போரட்டதின் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அதில் மிக அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்த பெண்கள். பரப்புரையாளர்களாக, கிளர்ச்சியாளர்களாக தலைவர்களாக, சிறை செல்பவர்களாக, என அவர்கள் நிகழ்த்திய செயல்கள் வரலாற்றில் இடம் பெற வேண்டியவை.
முக்கியமாக சுந்தரி எழுதிய புத்தகம். இதை நான் ஒரு முக்கியமான பெண்ணிய நூலாகப் பார்க்கிறேன். அவர் பெண்ணியம் பாலினம் என்ற கோட்பாடு சார்ந்த மொழியிலோ, தொனியிலா அதை எழுதவில்லை. ஆனால் ஒரு போரட்ட அனுபவம், ஒரு பொது செயல்பாடு எற்படுத்தும் அரசியலாக்கத்தையும், அப்படிப்பட்ட அரசியலாக்கம் பெண்களுக்கு ஏற்படும் போது அவர்கள் தாங்கள் போராட வேண்டிய பிரச்சனை பற்றிய புரிதல்களோடு நின்று விடுவதில்லை, அவர்கள் பெண்களாக தங்கள் வாழ்வையும், குடும்ப அமைப்பையும், பொது வெளிகளில் இருக்கும் பிற பெண்களைப் பற்றியுமான புரிதல்களை அடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
நேரிடையாக அவர் குடும்பம் பற்றி பேசவில்லை என்றாலும், இப்படி பொதுவெளிகளில் சென்று இயங்கும் பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும் அவதூறுகளை, காவல் துறையின் கடினமான வார்த்தைகளை பதிவு செய்கிறார். பஞ்சாயத்து தற்காலிக வேலையை வேண்டாம் என்று சொல்லி போரட்டத்திற்க்கு போராட்டத்திற்கு போகும் சுந்தரியிடம், சில உறவினர்கள், சில ஊரார் வைக்கும் கேள்வியும், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படும் போது அவரிடம் காவல்துறை இழிவாக முன்வைக்கும் கேள்வியும் சாரம்சத்தில் ஒன்றாகவே இருக்கிறது. ”புருசனோடு படுத்தமா வீட்ட பாத்தமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த போராட்டம்?” என்பது தான் அது.
குழந்தைகள் மீது அன்பும் அவர்களை பேண வேண்டிய கடமையில் இருந்து தான் வழுவுகிறோமோ என்ற குற்ற உணர்வை பல இடங்களில் பதிவு செய்யும் சுந்தரி அதற்கான பதிலையும் தனக்கே உரிய முறையில் பதிவு செய்கிறார், “பெண்ணாக பிறந்துவிட்டால் பொதுவாக மக்களின் பிரச்சனைக்கான, சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களுக்கு வரவே கூடாதா? சிறைக்கு செல்லவே கூடாதா? சிறையில் இருக்கும் காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது என்ற பணியைத் தவற விடுவது அவ்வளவு பெறிய குற்றமா?”
இது குடும்பத்தை பற்றிய விவாதமல்லாமல் வேறென்ன? குடும்பம் பற்றிய விவாதம் என்பது ஏதோ பத்துப் பதினைந்து மேல்தட்டு பெண்கள் கட்டற்ற பாலியல் விளைவுக்காக பேசப்படும் ஒன்று என்று முற்போக்கு ஆண் அறிவுஜீவிகள் கூட பலசமயம் பேசும் ஒன்றை சுந்தரியின் பதிவுகள் தவிர்க்கின்றன. அதே சமயம் இன்னொரு புறம் ஆண் இலக்கியவாதிகள் குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு தங்கள் ஆக்கங்களில் கட்டற்ற பாலியல் விழைவை, அலைதலை, ஏக்கத்தை எழுதி வரும் போது அது பத்தனிமை/பரத்தை என்ற ஆணாதிக்கத்தின் ஆக மோசமான இருமையை கட்டமைக்கிறது என்று பதறுவோர் யாரும் உளரா தெரியவில்லை.
இன்னொரு முக்கியமான கூற்றையும் இடிந்தகரை அணு உலை எதிர்ப்புப் போராட்டம் முன்நிறுத்தியது. அது பெண்களின் தலைமை பற்றியதாகும். அணுவுலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களாக சு.ப. உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட பலர் இருந்தாலும், கட்டுக் கோப்பான மக்கள் திரள் போராட்டத்தின் தலைமை பெண்கள் தான் என்பதை அரசு ஒடுக்கு முறையால் உதயகுமாரையும் புஷ்பராயனையும் கூட படகில் ஏற்றி கடலுக்குள் அனுப்பிவிட்டு காவல்துறையினரின் வெறித் தாக்குதல்களை எதிர் கொண்டமையும், கைதாகி சிறை சென்று சுமார் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தமையும் காட்டுகிறது.
சுந்தரி, செல்வி சேவியர் அக்கா இன்னமும் ஏராளமான உழைக்கும் பெண்கள் போரடியது அதனளவில் அவர்கள் ஊரைக் கப்பாற்றும் போராட்டமாக முன்நிறுத்தப்பட்டாலும் அது ஒட்டு மொத்தாமாக அந்த பிரதேசத்தின் பிர அனைத்து மக்களின் நலன்களை பாதுகாக்கும் போராட்டமே. இன்னமும் தமிழகத்தின் பல கிராமங்களின் நிகழ்ந்து வரும் வாழ்வாதார உரிமைக்கான போரட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பும் முன் முனைப்பும் அமைப்பாவதற்கான மிகப் பெரிய சக்தியாக இருப்பதை களச்செயல்பாட்டாளர்கள் அறிந்தே இருப்பார்கள்.
சாதி மறுப்பு திருமண எதிர்ப்புக் கொலைகள்
இந்தக் கொலைகளுக்கு கௌரவக் கொலை என்ற மோசமான பெயரை ஏற்க எனக்கு ஒப்பவில்லை. அதற்கு ஒரு மாற்றுப் பெயரை உருவாக்குவதிலிருந்து தான் நாம் பெண்ணிய சொல்லாடல்களை கட்டமைக்கும் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது எனப்படுகிறது.
இந்தியாவில் உள்ளவர்களின் சுயம் சாதியால் கட்டமைக்கப்படுகிறது. சாதி ஒரு சாராருக்கு அதீத அதிகாரம் கொண்ட அடிமைப்படுத்தும் சுயத்தை அளிப்பதன் மூலம் மீதியுள்ள சாராருக்கான சுயத்தை மறுக்கிறது. இந்துக்களின் மனசாட்சி சாதியால் வரையருக்கப்பட்ட ஒன்று என்று அண்ணல் அம்பேத்கர் தான் வாழ்நாள் பணிகளூடாக திட்டவட்டமாக நிறுவியிருக்கிறார். உண்மையான ஜனாயகத்தை உருவாக்குவதற்கு ஒரு மக்கள் கூட்டம் நேர்மையான மனசாட்சி கொண்டோராய் கருத்தளவிலாவது இருக்க வேண்டியது முன் நிபந்தனையாகிறது. கருத்தியல் சமர்கள், அரசியல் போராட்டங்கள், களச்செயல்பாடுகள் என இதற்கான பாதை தொடர்ந்து வருகிறது. இதில் தன்னியல்பான மீறல்களும் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று சாதி மறுத்த உறவுகள். அகமண முறைக்கும் சாதிக்கும் உள்ள தொடர்களை அம்பேத்கர் மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார். இங்கு நாம் அகமண முறையை உடைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அகமண முறை என்பது திருமணம் என்ற அர்த்தத்தில் வந்தாலும் அது பெண்ணின் உடல் மீது சமூகம் செலுத்தும் அதிகாரத்தை, சொத்து வாரிசு உரிமை மீது பொருளுடைய ஆண்கள் செலுத்தும் கட்டுப்பாட்டை, இனத் தூய்மை, குலத் தூய்மை சாதித் தூய்மை என சாதியம் பெண்ணுடலின் மீது செலுத்தும் கட்டும் அதிகாரத்தை குறிக்கிறது.
தமிழ்செல்வியோ, சுதாவோ, திவ்யாவோ தம்மளவில் காதல் மற்றும் பிடித்தமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் விழைவு ஆகியவற்றால் செய்திருந்தாலும் அவர்களின் காதல்-திருமண செயலானது இம்மூன்று அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகிறது. தலித் பெண்களோ அல்லது தலித் ஆண்களை மணக்கும் பிற சமூகப் பெண்களோ இப்படியாக சாதிய எதிர்ப்பு பெண்ணிய செயல்பாட்டாளர் ஆகிறார்கள்.
ஆனால் துயரம் என்னெவெனில் இக் கொலைகள் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் சாதி, இரு குறிப்பிட்ட சாதிகளிடையே உள்ள பகைமை அரசின் தலித் விரோதக் கயமை எனும் அளவிலே முடிவடைந்து விடுவது தான். இத்தகைய நிலைப்பாடுகளும் போராட்டங்களும் கன அளவில் மிகத் தேவை என்பதும் முக்கியமானவை என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அதைத் தாண்டி கருத்தியல் தளத்திலான கேள்விகளும் தர்க்கங்களும் பொதிந்து நிற்கின்றன. அவற்றை நாம் பாரா முகமாக இருப்பது மீண்டும் invisibility ஐ ஏவி விட்ட ஒடுக்குமுறைக்கு அப்பாற்பட்டவர்களக நம்மை நிறுத்திக் கொள்ளும் போலிச் செயல்பாடாகவே இருக்கும்.
பொருளாதார அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்யும் மார்க்சியராக இருந்தாலும், பெண்களின் சுயாதீனத்தை தம் உடல் மீது அவர்க்குள்ள அதிகாரத்தை பேசும் பெண்ணிய வாதிகளாக இருந்தாலும்,
இங்கு அவர்கள் தமது கருத்தியலை கொன்று வீசப்படும் தமிழ்ச்செல்விகளின், இளவரசன்களின்,
அச்சுருத்தல்களுக்கு இடையே அனுதினமும் வாழும் சுதாக்களின்,
சாதிக்கோட்டையின் இருண்ட சிறைக்குள் கயவாளிகளால் அடைக்கப்பட்டுள்ள திவ்யாக்களின் வாழ்க்கைகள் சொல்லும் கூற்றுகளின்
மீது செலுத்தி பரிசோதிக்க வேண்டியவைகளாகிறார்கள்.
இன்னொரு புறம், தலித் அமைப்புகளும் சிந்தனையாளர்களும் தலித் பெண்களின் மானம், உயிர் கற்பு அனைத்தையும் காபாற்ற வேண்டியவர்களாக தம்மைத் தாமே நிற்ணயித்துக் கொள்ளவது எந்த ஒடுக்குமுறையின் ஆணி வேரை களைய நினைக்கிறார்களோ, எந்த சமத்துவத்தை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்களோ அதையே மறுதலித்து மீண்டும் பெண்கள் ஆண்களின் உலைமை என்ற சனாதன கருத்தை ஏற்ப்பவர்களாக ஆகிவிடும் என்பதை உணர வேண்டும். தலித் பெண்களின், தலித் பெண்களாக வாழ முற்படும் பிற சாதிப் பெண்களையும் பலியானவைகளாக மட்டும் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்பபதை நிறுத்தி அவ்ர்களை தமது வழ்க்கையை சுயதீனமாகவாழ முற்படும் பெண்களாக பார்க்க வேண்டிய கருத்தியல் தேவை இருக்கிறது.
முக்கியமாக ஒரு பெண் தனது படிப்பு, வேலையைத் தெர்ந்தெடுப்பது, யாரைத் திருமணம் செய்வது அல்லது திருமணம் செய்யாமல் வாழும் உரிமை அகியவை மதிக்க்கப்பட வேண்டும். பெண்களின் இலக்கு திருமனம் மட்டுமே என்பது கீழ்மையான ஆணாதிக்க கருத்தியல் என்பது உரத்து சொல்லப்பட வேண்டும். திருமணம் செய்யாமல் தனித்து வாழும் பெண்களின் வாழ்கைக் கதைகள் எழுதப்பட்டால் திருமணம் எனும் இந்த ஆயிரம் காலத்துப் பயிரின் லட்சணம் தெரியவரும்.
இப்படிப் பல போராட்டங்களை சமூக நிகழ்வுகளையும் விழிகளால் அவர்கள் கால் தடத்தில் நின்று பார்த்தால் பல அரசியல் கருத்தியல் புரிதல்கள் கிடைக்கும். பாலினமற்ற சொல்லடல்களை நோக்கிச் செல்வதற்கு நாம் ஒரு பரந்துபட்ட பெண்ணிய சொல்லாடலை / சாதிய சொல்லாடலை கட்ட வேண்டியுள்ளது. அதற்கு முன் நிபந்தனையாக இப்போதுள்ள பாலினம் மறைக்கப்பட்ட, சாதியம் மறைக்கப்பட்ட சொல்லடல்களை தோலுரிக்க வேண்டியிருக்கிறது. ஒற்றைத் தேர்வுகளிலிருந்தும், மாவீரர்களின் மீசை முறுக்கல்களிலிருந்தும், மொசையாக்களின் – கடவுளர்களின் – தொல்லைகளிடமிருந்தும் நாம் விடுபட வேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டம் பற்றிய இந்தியப் புரிதல் சாதியிலிருந்து துவங்க வேண்டியிருக்கிறது. சாதி எதிர்ப்புப் போரின் புரிதல்கள் பெண்ணுடலில் கட்டமைக்கப்படும் அதிகாரத்தை கட்டுடைப்பதிலிருந்து துவங்க வேண்டியுள்ளது. இவை தனியாக ஒன்றோடு ஒன்று முரண்பட்டு சாதிக்கவல்ல கோரிக்கைகள் அல்ல என்பதை நான் உணர வேண்டியுள்ளது. இதில் சாதியால் பயன்பட்டோர் அதிகமாக உளச் சோதனைகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. பெண் விடுதலை பெறாமல் சாதியை ஒழிக்க முடியாது என்பதை தலித் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
முக்கியமாக பெண்ணிலைவாதிகள் பாலியல் வன்முறை, பாதிக்கப்பட்ட பெண்களை பேணுதல் ஆகிய களங்களில் சீரிய பங்களிப்பை அளித்துள்ளார்கள். சட்டத்தின் பார்வையிலாவது பெண்களும் மனிதர்களே என நிறுவப் பல போராட்ட்ங்களை நடத்தியுள்ளார்கள். அதே போன்ற ஆழமான புரிதலோடு சாதி ஒழிப்புப் போராட்டத்திலும் அது சாலையில் இறங்கிப் போவதாக இருந்தாலும், நாம் வாழும் குடும்பம் – சமூகம் என்ற தனி உலகத்திலும் முன்னெடுக்கவேண்டும். பெண்களின் சுயத்தை முன் வைப்பது என்பது சுய மோகத்தை குறிப்பதல்ல என்பதையும், அது ஒட்டுமொத்த கூட்டுச் சுயமான போரட்ட உணர்வையும், பேணுதலையும், அம்பேத்கர் மிக அழகாக விளக்கும் மைத்ரி – யாவும் யவற்றுடனும் கொள்ளும் அன்பு – மைத்ரியை உணர்வதுதான் சரியான சுயதீனமாக இருக்கும்.
இறுதியாக நான் ஏப்ரல் மாதப் பனுவலில் நடைபெற்ற சமூக நீதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட எழுத்தாளர் தோழர். சிரிதர கணேசன் தனது கட்டுரையில் முன்வைத்த ஒரு பத்தியுடன் முடிக்கிறேன். மிகுந்த மன எழுச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு அவரது உரை அளித்தது.
தலித்தாகப் பிறந்த பெண் கதாபாத்திரங்களை கையாளும் போது, படைப்பு மனம் தடுமற்றம் இல்லாமல் இருக்க வேண்டியக் கட்டாயமும் ஏற்படுகிறது. அதற்காக யாரும் கருணையை எதிர்பார்க்கவில்லை, பெண்கள் படும் துயரத்தை கோபத்தோடு பார்க்கிற போது கருணையும் ஒட்டிக் கொள்ளும். அவர்களின் வீரம் செறிந்த வரலாறும் எழுச்சியும் போராட்டமும் எழுத்தாய் புறப்பட்டு வரும் தூக்கலான செயல்பாட்டோடு தடுமாற்றமின்றி கடைசிவரை களத்தில் நிற்ப்பவர்கள் பெண்கள். அவர்களைக் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. கற்பது, பார்ப்பது, கேட்ப்பதும், நேசிப்பதும் பெண்களால் தான் முடியும். அந்த முகங்களின் விஸ்தாரங்கள் தான் எனது படைப்புகளின் பெண் கதாப்பாத்திரங்கள். அடிக்கு அஞ்சாமல், இறுக்கத்துக்கு பயப்படாமல், ஆழத்தைக் கண்டுப் பின் வாங்காமல் ஓரடி முன்னே போகத் துணிகிற தலித் பெண்களுக்கு இடதுசாரித் தன்மை இருப்பதென்பது ஆச்சரியப்படுகிற விஷயமோ வியப்புக்குரிய செய்தியோ அல்ல. இது தலித் எழுச்சியின் இன்னொரு முகம்.